மதுரை அதிமுக கூட்டணி பொதுக்கூட்டத்தில் பெரியார் படத்தை
நீக்கி விட்டீர்களே – எங்கள் நெஞ்சமெல்லாம் கொதிக்கிறது!
அந்தப் பெரியார் இல்லை என்றால் முழங்காலுக்கு கீழே
வேட்டி கட்டி இருப்பீர்களா? – பதவிக்கு வந்து இருப்பீர்களா?
திண்டிவனம், ஏப். 17– தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் பரப்புரையில், பா.ஜ.க.வுக்கு அ.தி.மு.க. பல்லக்கு தூக்கி வருவதை சுட்டிக்காட்டி பேசிய கழகத் தலைவர், அதையும் தாண்டி கொள்கையை எந்த அளவுக்கு கீழே இறக்கத்துக்கு கொண்டு சென்றிருக்கிறது என்பதை சுட்டிக்காட்ட, “மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் முகப்பிலிருந்த பெரியார் படத்தை பாஜக சொன்னதற்காக நீக்கிவிட்டீர்களே… எங்கள் நெஞ்சமெல்லாம் கொதிக்கிறது. அந்தப் பெரியார் இல்லை என்றால், முழங்காலுக்கு கீழே வேட்டி கட்டி இருப்பீர்களா? பதவிக்கு வந்து இருப்பீர்களா? என்று அடுக்கடுக்காக அனல் பறக்கும் கேள்விகளை முன்வைத்து உரையாற்றினார்.
திண்டிவனம் திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெற்ற, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வி.சி.க. வேட்பாளர் வன்னி அரசு அவர்களை ஆதரித்து, கழகத் தலைவர் பரப்புரை செய்வதற்காக, திண்டிவனம் மேம்பாலத்துக்கு கீழே 16.04.2026 மாலை 5 மணிக்கு, ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மாவட்டத் தலைவர் இர.அன்பழகன் தலைமை ஏற்றார். கழகக் காப்பாளர் பிருந்தாவன் அனைவரையும் வரவேற்று சிறப்பித்தார். கழக மாநில ஒருங்கிணைப்பாளர்கள் தஞ்சை இரா.ஜெயக்குமார், ஒரத்தநாடு இரா.குணசேகரன் ஆகியோர் முன்னிலை ஏற்று சிறப்பித்தனர். திராவிடர் கழக பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் தொடக்க உரையாற்றினார். அதைத்தொடர்ந்து, கழகத்தின் தலைவர் ஆசிரியர், வேட்பாளர் வன்னி அரசுடன் இணைந்து வாகனத்தின் மீது இருந்து பரப்புரையில் ஈடுபட்டார்.

அவர் தமது உரையில், வேட்பாளர் வன்னி அரசு அவர்களின் சிறப்புகளை குறிப்பிட்டு பேசிவிட்டு வன்னி அரசுக்கு ஏன் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டு அவர் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கிறார் அதற்காகவே அவருக்கு வாக்களிக்கலாம். அதையும் தாண்டி, “கூட்டணியில் இருந்து வெளியேறி விடுவார்கள் என்று சிலர் கூக்குரலிட்டார்கள். ஆனால், இது கொள்கைக் கூட்டணி என்பதை எண்பிக்கும் வகையில், இந்தக் கூட்டணியில் தொடர்கின்றனர். இந்தக் கூட்டணி கொள்கையை முன்னிறுத்தி பிரச்சாரம் செய்கிறது சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்கிறது என்றும் சாதனைகள் என்றால் சாதாரணமானது அல்ல என்றும் இந்தியாவில் மட்டுமல்ல உலக அளவில் பாராட்டப்படக்கூடிய சாதனைகள் என்றார். அதை தொடர்ந்து அந்த சாதனைகளை பட்டியலிட்டு பேசினார். நான் முதல்வன் திட்டத்தின் மூலம், வாடிப்பட்டியில் எளிமையான குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண், இந்திய அளவில் சிறப்பாக தேர்வு பெற்று அய்.ஏ.எஸ். ஆக பணிபுரிந்து வருவதை குறிப்பிட்டார். மேலும் பேசிய அவர், “தி.மு.க. கடந்த தேர்தலில் அளித்த 505 வாக்குறுதிகளில், 404 வாக்குறுதிகளை நிறைவேற்றி சாதனை செய்திருக்கிறார்கள். மற்றவற்றையும் ஒன்றிய அரசு நிறைவேற்ற விடவில்லை. அதில் ஒன்றுதான் நீட் தேர்வு” என்றார். தொடர்ந்து, “அதை நிறைவேற்றுவதற்காகவும் திராவிட மாடல் அரசு செய்த முயற்சிகளை சுட்டிக்காட்டி பேசினார். மேலும் அவர், எதிர்க்கட்சியாக இல்லாமல்; எதிரிக் கட்சியாகவே செயல்படும் அதிமுகவை, “அமித்ஷா தி.மு.க.” என்றும், “அடிமை தி.மு.க.” என்றும், விமர்சனம் செய்தார். அந்த விமர்சனத்திற்கான காரணங்களை சுட்டிக்காட்டினார். பின்னர் பேசிய அவர், மாநிலங்களின் உரிமை தீயாகப் பற்றி படர்ந்து கொண்டிருக்கும் தொகுதி மறு வரையறை குறித்து விரிவாக, தமிழ்நாட்டுக்கு எப்படி எல்லாம் அதிகார பகிர்வில் பங்களிப்பு குறைகிறது என்பதையும்; அது தேன் தடவிய விஷ உருண்டை என்பதையும் புள்ளி விவரங்களுடன் விளக்கினார். இதிலிருந்து எல்லாம் மீள்வதற்கு, வன்னி அரசு அவர்களுக்கு, பானைச் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து தமது உரையை நிறைவு செய்தார்.
செஞ்சி
அதைத்தொடர்ந்து செஞ்சியில் கன்மலை கிறிஸ்து ஆலயத்தின் அருகில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி தி.மு.க. வேட்பாளரான கே.எஸ்.மஸ்தான் அவர்களுக்கு, உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டி உரையாற்றினார். அவர் தமது உரையை, “நாம் அனைவரும் ஜாதி, மத வேறுபாடு இல்லாமல் அண்ணன், தம்பிகள் போல் பழகி வருகிறோம்” என்று தொடங்கினார். தொடர்ந்து, வேட்பாளர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் அவர்களை சுட்டிக்காட்டி, “புலம் பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் இருவர் முகமலர்ச்சியுடன் நினைவு கூறப்படுகின்றனர். ஒருவர் நம்முடைய திராவிட மாடல் முதலமைச்சர்! மற்றொருவர் கே.எஸ்.மஸ்தான்!” என்றதும், மக்கள் கைகளைத் தட்டி அதை வரவேற்றனர். மேலும் பேசிய அவர், “தமிழ்நாட்டில் கிறிஸ்தவர்களுக்கு ஆலயம்; இஸ்லாமியர்களுக்கு மசூதி; இந்துக்களுக்கு கோயில்களில் ஆகியவை அருகருகே இருந்தாலும், மதக்கலவரங்கள் உண்டா? கிறிஸ்தவர்கள் இல்லை என்றால், நமக்கு கல்வி கிடைத்திருக்காது! சுகாதாரம் கிடைத்திருக்காது!” என்று திராவிட இயக்கத்தின் தொடக்க காலத்தில் இருந்து இன்று வரை தொடரும் நிலைப்பாட்டை எடுத்துக்காட்டினார். மேலும் அவர், “ஒட்டுமொத்த சிறுபான்மையினருக்கும் பாதுகாவல் அரணாக இருப்பது நமது திராவிடம் மாடல் அரசு தான்!” என்று உரத்துச் சொன்னார். அந்தக் கருத்துக்கு ஏகோபித்த மக்களின் அங்கீகாரம் கைதட்டல்கள் மூலம் கிடைத்தது. அதைத்தொடர்ந்து தொகுதி மறு வரை ஆபத்தை பற்றி குறிப்பிட்டு பேசினார். இதில் அ.தி.மு.க.வின் நிலைப்பாட்டை சுட்டிக்காட்டி கடுமையாக விமர்சனம் செய்தார். மேலும், “விவசாயிகளுக்கு ஆதரவாக செயல்படுவதாக வெளியில் சொல்லிக் கொண்டு, தமிழ்நாடு அரசு கொடுத்து வரும் நெல் உற்பத்திக்கான ஊக்கத் தொகையை நிறுத்த, கடிதம் எழுதிய ஒன்றிய அரசின் இரட்டை வேடத்தை அம்பலத்தில் ஏற்றினார். தொடர்ந்து, எந்த வகையில் பார்த்தாலும் ஒன்றிய அரசால் தமிழ்நாட்டிற்கு எந்த நன்மையும் இல்லை. அப்படிப்பட்ட பா.ஜ.க.வை தோளில் சுமக்கிறது அ.தி.மு.க.” என்று விமர்சித்து, உதயசூரியன் சின்னத்துக்கு வாக்களித்து கே.எஸ். மஸ்தான் அவர்களை வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டு, தமது உரையை நிறைவு செய்தார்.
திருவண்ணாமலை
அதைத் தொடர்ந்து, திருவண்ணாமலை தொகுதி தி.மு.க. வேட்பாளர் அமைச்சர் எ.வ.வேலு அவர்களை ஆதரித்து, திருவண்ணாமலை அண்ணா சிலை அருகில் நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் பேசினார். மாவட்டத் தலைவர் சி.மூர்த்தி தலைமையில், மாநகரச் செயலாளர் ப.கார்த்தி வேல்மாறன் அவர்கள் அனைவரையும் வரவேற்றார். கழக மாநில ஒருங்கிணைப்பாளர்கள் தஞ்சை இரா.ஜெயக்குமார், ஒரத்தநாடு இரா.குணசேகரன், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த குணசேகரன், ம.தி.மு.க. சீனி கார்த்திகேயன், தே.மு.தி.க. வி.எம்.நேரு ஆகியோர் முன்னிலை வகித்து சிறப்பித்தனர். கழக பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் தொடக்க உரையாற்றினார். தி.மு.க. மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மாவட்ட அமைப்பாளர் டி.வி.எம்.நேரு விடுதலை 10 ஆண்டு சந்தாக்களை கழகத் தலைவரிடம் வழங்கினார். துணை மேயர் ராஜாங்கம் விடுதலை ஓராண்டு சந்தா, ஒன்று வழங்கினார்.

தமது உரையில், “திருவண்ணாமலை மக்களைப் பொருத்தவரையில் அரசியல் விழிப்புணர்வு அதிகம் பெற்றவர்கள்” என்று, பாராட்டினார். அதேபோல, “நமது முதலமைச்சர் எதை எதிர்பார்க்கிறாரோ அதன்படி செயல்படுகிறவர் இந்தப் பகுதியில் வேட்பாளர் எ.வ.வேலு ஆவார்” என்று, அவரையும் சிறப்பித்துப் பேசினார். மேலும் அவர், “தேர்தல் பணிகள் இருந்தாலும், தொகுதி மறு வரையறை பற்றி நமது முதலமைச்சர் நமக்கு அளித்திருக்கும் செய்தி முக்கியமானது” என்றும், “கருப்புச் சட்டை அணிந்து கொண்டு, தொகுதி மறு வரையறை சட்ட நகலை முதலமைச்சர் எரித்திருப்பதை சுட்டிக் காட்டி, முதுகெலும்புள்ள ஒரு முதலமைச்சர் நமக்கு கிடைத்திருக்கிறார். அவரைப் போல வேறொருவர், இந்தியாவிலேயே கிடையாது என்றும் சிறப்பித்துப் பேசினார். திராவிட மாடல் அரசின் சாதனைகள் எவ்வளவோ இருக்கின்றன என்றும் குறுகிய நேரத்தில் எல்லாவற்றையும் சொல்லிவிட முடியாது என்பதாலும், “தி.மு.க.ஆட்சி தொடர வேண்டும், ஏன்?”, “அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணிக்கு வாக்களிக்க கூடாது, ஏன்?”, “மீண்டும் திமுக ஆட்சி வரவேண்டும், ஏன்?” அகிய மூன்று புத்தகங்களை வாங்கிப் படித்து, மற்றவர்களுக்கும் பரப்ப வேண்டுகோள் விடுத்து, தனது உரையை நிகழ்த்தினார். தொடர்ந்து, ஒரு நாட்டின் மாநில முதலமைச்சர்ர் தந்த மக்கள் நலத்திட்டத்தை, இந்தியா மட்டுமல்ல உலகமே பின்பற்றக்கூடிய வகையில் இருக்கிறது என்றால், அதன் சிறப்பை எண்ணி பாருங்கள்” என்று மக்களிடம் திராவிட மாடல் அரசின் மீதான மதிப்பைக் கூட்டினார். தொடர்ந்து அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணியை கடுமையாக விமர்சனம் செய்தார். மேலும் அவர் திராவிட மாடல் அரசின் சாதனைகளைப் பட்டியலிட்டும், ஒன்றிய அரசின் துரோகங்களை அம்பலப்படுத்தியும் கடந்த 5 ஆண்டுகளில் செயல்படுத்திய சாதனைகள் தொடரவும், உதயசூரியன் சின்னத்துக்கு வாக்களிக்கும் படி வேண்டித்தான் உரையை நிறைவு செய்தார்.
நிகழ்வில், கழகக் காப்பாளர் பட்டாபிராமன், மாவட்டச் செயலாளர் அண்ணா தாசன், பொதுக்குழு உறுப்பினர் கு.பஞ்சாட்சரம், மாவட்டத் துணை செயலாளர் சங்கர், மாநகரத் தலைவர் மு.காமராஜ், மாநகரச் செயலாளர் ராம்குமார், மாநகர துணை செயலாளர் கோ.தேவராஜ், போளூர் நகரத் தலைவர் ப.பழனி, போளூர் நகரச் செயலாளர் முனு.ஜானகிராமன், மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் ப.வெங்கட்ராமன், பெரியார் பாசறை கமலக்கண்ணன் உள்ளிட்டோர் திருவண்ணாமலை மாவட்டம் சார்பில் கலந்துகொண்டு சிறப்பித்தனர். மூன்று கூட்டங்களுக்கும் கூட்டணி கட்சி பொறுப்பாளர்கள் தோழர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

