அரசியலமைப்புச் சட்ட அடிப்படைக் கட்டுமானத்தைத் தகர்ப்பதா?

5 Min Read

தொகுதி மறுசீராய்வு என்ற பெயரால் ஒரு சூழ்ச்சி!
வட மாநிலங்களின் எம்.பி.,க்கள் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்து
தென் மாநிலங்களின் உறுப்பினர்களைக் குறைக்கும் வஞ்சகச் செயல்!

தொகுதி மறுசீராய்வு என்ற பெயரில் வட மாநிலங்களில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்து, அதே நேரத்தில், தென் மாநில உறுப்பினர்களை குறைந்த எண்ணிக்கையாக்கும் சூழ்ச்சியைக் கண்டித்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

இன்று (16.4.2026) நாடாளுமன்ற வரலாற்றில், ஜனநாயகத்திற்கும், டாக்டர் அம்பேத்கரின் பெரு முயற்சியால் அமைக்கப்பட்டு, கடந்த  பல ஆண்டுகளாக செயல்முறையில் இருக்கும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கும் மிகப்பெரிய ஆபத்து இதன்மூலம் ஏற்பட்டுள்ளது.

மக்களாட்சியைத் தகர்க்கும் கண்ணிவெடி!

மக்களாட்சியை மாற்ற பல கண்ணிவெடிகளைத் தங்களுக்குச் (என்.டி.ஏ.) சாதகமாக மெஜாரிட்டி எண்ணிக்கைமூலம், தொகுதி மறுசீரமைப்பு மசோ தாவைக் கொண்டு வரும் வாய்ப்பில், ஹிந்தி பேசாத தென்மாநிலங்களிலும், கிழக்கு (மேற்கு வங்கம்), வடகிழக்கு மாநிலங்களிலும் நாடாளுமன்றத்தின் மக்களவையில் உள்ள இடங்களை (தற்போது 534) 850 ஆக உயர்த்தும் ஒரு திட்டம் மூலம் நாடாளுமன்றத்தில் மசோதாக்கள் கொண்டு வரப்பட்டு, சரியான விவா தங்களை, போதுமான கால அவகாசத்துடன் நடத்தாமல், இரண்டே நாள்களில் நிறைவேற்ற ஒன்றிய
ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. மோடி தலைமையில் உள்ள ஆட்சி ஏற்பாடு செய்துவிட்டது!

சில மாநிலங்களில்
தேர்தல் நடத்தும் நேரத்தில்

தமிழ்நாட்டிலும் (ஒரே கட்டமாக), மேற்கு வங்கத்தி லும் (இரண்டு கட்டங்களாக) முறையே இம்மாதம் 23, 29 ஆகிய நாள்களில் தேர்தல் நடைபெறுகிறது. தமிழ்நாடும், மேற்கு வங்கமும் இந்தக் கொடுங்கோடையில் சரியாகப் பங்கேற்க முடியாதத் தேர்தல் காலத்திலேயே இப்படி ஒரு சூதும், சூழ்ச்சியும் அடங்கி உள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை 850 ஆக உயர்த்தி, அதன்மூலம், ஹிந்தி பேசும் வட மாநிலங்களுக்கு 77 விழுக்காடு அதிகரிப்பும்; ஹிந்தி பேசாத தென்மாநிலங்கள், கிழக்கு (மேற்கு வங்கம்), வடகிழக்கு மாநிலங்களைப் பின்னுக்குத் தள்ளி, வருங்காலத்தில் ஹிந்தி பேசாத ஒருவர் பிரதமராகவே வர முடியாத ஒரு நிரந்தர ஏற்பாடுதான் இந்த ‘மாயமான்’ ஏற்பாட்டின் ஆபத்து!

இன்றைய (16.4.2026) ‘முரசொலி’ தலை யங்கத்திலும், நேற்றைய (15.4.2026) ‘இந்து’ ஆங்கில ஏட்டின் தலையங்கத்திலும் மிகத் துல்லியமாக எடுத்துக்காட்டப்பட்டுள்ளது!

2029 மக்களவைத் தேர்தலில் ஹிந்தி பேசும் மாநிலங்களின், மெஜாரிட்டி மூலமே குறுக்கு வழியில் மீண்டும் ஒன்றிய ஆட்சியை அமைத்திட, திட்டமிடப்பட்டுள்ள ஓர் ஏற்பாடு இது!

அதுமட்டுமல்ல, அரசியலமைப்புச் சட்டத்தின்  (தற்போது நிறைவேற்றப்படவிருக்கும் 131 ஆவது அரசியலமைப்புச் சட்ட மசோதா மூலம் அரசியல் சட்டக் கூறுகள் (Article) 55, 81, 82, 170, 330, 332 மற்றும் 334A) கூறுகளைத் திருத்தி, ஒன்றிய அரசு தன்னிச்சையாக மாநிலங்களின் உரிமைப் பறிப்புக்கும் இது வழிவகுப்பதாகும்.

 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு எங்கே?

மக்கள் தொகை அடிப்படையில் மறுசீராய்வு என்பதில்கூட மாநிலங்களால் ஏற்கப்பட முடியாத ஒரு நடைமுறையை ஒன்றிய பா.ஜக. அரசு முன்னிலைப்படுத்தியுள்ளது!

இதே ஒன்றிய அரசு, 10 ஆண்டுக்கு ஒருமுறை  நடத்தப்படவேண்டிய மக்கள் தொகைக் கணக்கெ டுப்பைக்கூட (Census) கரோனாவைக் காரணம் காட்டி, 2021 இல் நடத்தாமல் தள்ளிப் போட்டது!

உடனே தமிழ்நாட்டின் எதிர்ப்பினைப் பதிய வைக்கவே, மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பாக, ‘திராவிட மாடல்’ ஆட்சியின் முதலமைச்சர், தமிழ்நாட்டு மக்கள் தங்கள் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி, அறவழியில் நமது கடமையாற்ற வீறுகொண்டு எழ வேண்டுகோள் விடுத்துள்ளார்!

அரசியலமைப்புச் சட்ட
அடிக்கட்டுமானம் தகர்ப்பு!

வழக்கம்போல, பிரதமர் மோடி தலைமையில் உள்ள பா.ஜ.க. மைனாரிட்டி அரசு மக்களை இதிலும் குழப்பி, மூன்று வெவ்வேறு பிரச்சினைகளை ஒன்றாக்கி, இதன் பேராபத்தினை மக்கள் உணரவிடாமல், விஷ உருண்டை போன்று உரிமைப் பறிப்பு மசோதாவிற்கு, சர்க்கரையும், தேனையும் தடவி, ஜனநாயகப் படு கொலைக்கு  வித்திட்டு – அரசியலமைப்புச் சட்ட அடிக்கட்டுமானக் கூட்டாட்சிக்கும் வேட்டு வைக்க முனைந்துவிட்டது!

1.தொகுதி மறுவரையறை என்பது வேறு;

2.மக்களவையில் இடங்களை அதிகரிப்பது வேறு;

3.மகளிர் இட ஒதுக்கீடு சட்ட அமல் என்பது வேறு.

இம்மூன்றையும் திட்டமிட்டே இணைத்துக் காட்டி, குழப்பி, ஏமாற்றி, மசோதாவை இரண்டே நாளில் நிறைவேற்றிட முனைப்புக் காட்டுகிறது!

மகளிருக்கு 33 சதவிகித மசோதாவை விரைந்து நிறைவேற்றிட முனைப்புக் காட்டுவதாக ஒரு தோற்றம்.

புதிய, பெரிய நாடாளுமன்றக் கட்டடத் தொடக்கத்தினையே அதில் நடத்தி, இதேபோல் ஒரு நாடகம் போட்டு, மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றி, உடனடியாக அது அமலுக்கு வராமல், வெறும் ஏட்டுச் சுரைக்காயாக அதை ஆக்கி வித்தைக் காட்டினார்கள்.

 ஹிட்லர் என்ற சர்வாதிகாரியின் முறைதான் இது!

இப்போதும், அதனை இத்துடன் இணைத்து, சில திரைப்படங்களில் வில்லன்களை, காவல்துறையினர் பிடிக்க முனையும்போது, அவர்கள் குழந்தையை அபகரித்து மார்பில் வைத்துக் கொண்டு, மனிதக் கேடயமாக (Human Shield) காட்டித் தப்பிக்கும் காட்சி போன்றது இது – ‘‘மகளிர் மசோதாவையே – எதிர்க்கிறார்கள் எதிர்க்கட்சியினர்’’ என்று திசை திருப்பும் முயற்சியில் ஈடுபட்டு, மாநில உரிமைகளை அறவே பறித்து, வரும் சில ஆண்டுகளில், முன்பு ஜெர்மனியில் ஹிட்லர் என்ற அதிபர் சர்வாதிகார ஆட்சி முறையை மாற்றினாரே, அதே பாணிதானே இது!

உ.பி. மாநிலத்தில் தற்போதைய மக்களவை உறுப்பினர்கள் 80. இது தற்போது கொண்டு வரப்பட்டுள்ள மசோதா நிறைவேறினால் 140 ஆக உயரும். மற்ற தென் மாநிலங்கள், வட, ஹிந்தி மாநிலங்களுக்கிடையே உள்ள இடைவெளி மேலும் அதிகமாகும். (வட இந்திய ஹிந்தி மக்களின் வாக்குகளை வைத்தே எளிதில் வெற்றி பெற்று ஆளும் வாய்ப்பை கைப்பற்றி விடுவார்கள்).

.பி.சி.யினரும் மசோதாவின் குறைபாட்டை எதிர்த்து உரிமைக் குரல் எழுப்பவேண்டும்!

மகளிர் மசோதாவில் பிற்படுத்தப்பட்டோருக்கு மிகப்பெரிய வஞ்சகம் புகுந்திருக்கிறது. எஸ்.சி., எஸ்.டி., சமூகத்தினருக்கு உள்ளதுபோல், ஓபிசி சமூகத்தினருக்கு, தனி இட ஒதுக்கீடு மறுக்கப்பட்டுள்ளது என்பதால், ஓ.பி.சி.யினரும், தங்களுக்குச் சமூகநீதி வேண்டும் என்று, மசோதாவின் குறைபாட்டை எதிர்த்து உரிமைக் குரல் எழுப்பவேண்டும்.

தென் மாநிலங்களின் உரிமை முழக்கம், வட இந்திய ஹிந்தி ஆதிக்கவாதிகளுக்குக் கேட்கவே கேட்காது; அவர்கள் நிறைவேற்ற உள்ள இந்த மசோதா ஆர்.எஸ்.எஸ். தயாரித்த திட்டமே! இந்த  உண்மை அலட்சியப்படுத்தப்பட முடியாத ஒன்று.

மாநிலங்களே இல்லாத – உரிமைகள் அற்ற – ஒற்றை ஆட்சி (Unitary State) முறைக்கு முன்னோட்டமே இது! கூட்டாட்சி முறை ஒழிப்பும் உள்ளது!

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கூட்டாட்சித் தத்துவத்தையும், பன்முகத் தன்மையையும் பறிக்கின்ற ஏற்பாட்டின் முகவுரை இது!

புரிந்துகொள்ளுங்கள்!

கி.வீரமணி

   தலைவர்,

திராவிடர் கழகம்

 

சென்னை

16.4.2026

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *