கேரளா, அசாம், புதுச்சேரியில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு! புதுச்சேரியில் பா.ஜ.க. – காங்கிரஸ் தொண்டர்கள் மோதலால் பரபரப்பு

3 Min Read

சென்னை, ஏப்.9- புதுச்சேரி, தமிழ்நாடு, கேரளா, அசாம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. இவற்றில் தமிழ்நாட்டுக்கு வருகிற 23ஆம் தேதியும், மேற்கு வங்கத்தில் ஏப்.23 மற்றும் ஏப்.29 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாகவும் தேர்தல் நடைபெறுகிறது.

புதுச்சேரி, கேரளா மற்றும் அசாம் மாநிலங்களில் இன்று தேர்தல் நடைபெறுகிறது. இந்த 3 மாநிலங்களிலும் இன்று காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது. காலையிலேயே பொதுமக்கள் வாக்குச் சாவடிக்கு வந்து நீண்ட வரிசையில் நின்று ஓட்டுப் போட்டனர்.

கேரளா

கேரளாவில் உள்ள 140 தொகுதிகளுக்கு இன்று (9.4.2026) தேர்தல் நடைபெற்றது. இதில் 883 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

இங்கு கடந்த 2016 முதல் பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி (எல்டிஎப்) தொடர்ந்து 2 முறை ஆட்சியில உள்ளது. இந்த நிலையில் ஹாட்ரிக் வெற்றியைப் பெற எல்.டி.எப். தீவிரமாக களத்தில் உள்ளது. ஆளும் கூட்டணிக்கு எதிராக சதீஷன் தலைமையிலான அய்க்கிய ஜனநாயக முன்னணி (யு.டி.எப்.) மற்றும பா.ஜ.க.வின் ராஜீவ் சந்திரசேகர் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்.டி.ஏ.) ஆகியவை உள்ளன.

கேரளா தேர்தலில் 2.71 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இதில் 1.32 கோடி ஆண் வாக்காளர்களும், 1.39 கோடி பெண் வாக்காளர்களும், 2.42 லட்சம் வெளிநாட்டில் வசிக்கும கேரள வாக்காளர்களும் அடங்குவர்.

பினராயி விஜயன்

கேரளாவில் 140 சட்டப் பேரவை தொகுதியிலும் காலை 6 மணிக்கே வாக்குச்சாவடி முன்பு வாக்காளர்கள் திரண்டனர். 7 மணி முதல் விறுவிறுப்பாக ஓட்டுப் பதிவு நடந்தது.

முதலமைச்சர் பினராயி விஜயன் கண்ணூர் மாவட்டம் பினராயி நகர் வாக்குச்சாவடிக்கு வந்து தனது ஜனநாயகக் கடமையை செலுத்தினார். திரை நட்சத்திரங்களும் தங்கள் ஓட்டுகளைப் பதிவு செய்தனர்.

துபாய், அபுதாபி போன்ற வெளிநாட்டில் வசிக்கும் கேரள மாநிலத்தவர் விமானம் மூலம் கேரளா வந்து தங்கள் ஓட்டுரிமையை பதிவு செய்தனர். மதியம் 1 மணி நிலவரப்படி 54.48 சதவிகித ஓட்டுகள் பதிவாகி இருந்தன.

புதுச்சேரி

புதுச்சேரியில் மொத்தம் உள்ள 30 தொகுதிகளில் 294 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மொத்தம் உள்ள 1099 வாக்குச் சாவடிகளில் 209 வாக்குச் சாவடிகள் பதற்றம் நிறைந்தவையாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

புதுச்சேரியைப் பொருத்தவரையில் ரங்கசாமி தலைமையிலான ஆளும் என்.ஆர். காங்கிரஸ் – பா.ஜ.க. கூட்டணிக்கும், வைத்தியலிங்கம் தலைமையிலான காங்கிரஸ் – தி.மு.க. கூட்டணிக்கும இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது.

ரங்கசாமி

புதுச்சேரியில் காலை 7 மணிக்கு ஓட்டுப் பதிவு தொடங்கியது. ஆண்களும், பெண்களும் திரண்டு வந்து வரிசையில் திரண்டு வந்து வரிசையில் காத்திருந்து தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனர்.

முதலமைச்சர் ரங்கசாமி இரு சக்கர வாகனத்தில் வந்து தனது வாக்கைப் பதிவு செய்தார். மதியம் 1 மணி நிலவரப்படி அங்கு 53.98 சதவிகித வாக்குகள் பதிவாகி தொடர்ந்து அங்கு விறுவிறுப்பாக வாக்குப் பதிவு நடைபெற்றது.

பா.ஜ.க. – காங்கிரஸ் மோதல்

புதுச்சேரி திருக்கானூர் வாக்குச் சாவடியில் பா.ஜ.க. – காங்கிரஸ் தொண்டர்கள் மோதிக் கொண்டனர். இரு கட்சியினரையும் காவல் துறையினர் லேசாக தடியடி நடத்தி விரட்டியடித்தனர்.

அசாம்

அசாமில் 126 தொகுதிகளுக்கு இன்று (9.4.2026) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இங்கு ஹிமந்தபிஸ்வா சர்மா தலைமையிலான பா.ஜ.க. மற்றும் கவுரவ் கோகோய் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணிகளுக்கு இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது. காங்கிரஸ் 99 இடங்களிலும், பா.ஜ.க. 90 இடங்களிலும் போட்டியிடுகின்றன.

இன்று (9.4.2026) காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது. மதியம் 1 மணி நிலவரப்படி 59.07 சதவிகித ஓட்டுகள் பதிவாகி இருந்தன. தொடர்ந்து மாலை 6 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறும். பாதுகாப்புப் பணிக்கு துணை ராணுவப் படையினர் கேட்கப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *