கடந்த 6 ஆண்டுகளாகவே ராம நவமி, அனுமன் ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி போன்ற விழாக்களில் சிறுபான்மையினர் குறித்த மோசமான வார்த்தைகளை – ஊர்வலம் போகிறோம் என்ற பெயரில் – கூச்சலிட்டு கொண்டே செல்வதை ஒரு திட்டமாகவே செய்து வருகின்றனர்.
பாஜக ஆளும் மாநிலங்களில் காவல்துறையினர், அவர்கள் குறிப்பாக இஸ்லாமியர் வாழிடங்கள் வழியாக செல்ல எளிதாக அனுமதி கொடுப்பதோடு மட்டுமல்லாமல், பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யாமல் உடன் செல்லும் சில காவலர்களும் ‘ஜெய் சிறீராம்’ முழக்கம் போட்டுக்கொண்டு செல்வது அனைத்தும் காணொலிகளில் வெளிவந்த வண்ணம் உள்ளது,
ஆனால் இந்த ஆண்டு மேற்குவங்கம், அரியானா, உத்தரப்பிரதேசம், குஜராத், தெலங்கானா, மகாராட்டிரா போன்ற மாநிலங்களில் முதல் நாளே இஸ்லாமியர்கள் இருக்கும் பகுதிகள் மற்றும் இஸ்லாமிய வழிபாட்டுத் தலங்களுக்குச் சென்று நாளை உங்களுக்கு மோசமான ஒரு நாளாக இருக்கும் என்று மிரட்டி விட்டுச் சென்று உள்ளனர்.
மேற்குவங்கத்தின் பாஜக தலைவர் ஒருவர் ராம நவமி ஊர்வலத்தின் முதல் நாள் இஸ்லாமியர்கள் வாழும் பகுதியில் கூட்டம் ஒன்றைப் போட்டு, நாளை ராம் நவமி. இது ராமனின் பூமி – இங்கே இதர கடவுள்களை வழிபடுபவர்கள் கவனமாக இருந்து கொள்ளுங்கள் – ஒன்று ராமனை கும்பிடுங்கள், இல்லை என்றால் விளைவை எதிர்கொள்ளத்தயாராக இருங்கள் என்று மிரட்டியுள்ளார்.
இது தொடர்பாக காவல்துறை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவர் பேசியது மேற்குவங்கம் முழுவதும் காணொலியாக ஒளிபரப்பப் பட்டது, இதனை அடுத்தே ஹவுரா பகுதியில் கலவரம் மூண்டது. ஏற்கெனவே எச்சரிக்கையாக சிறுபான்மையினர் பகுதியில் உள்ள வாகனங்கள், அகற்றப்பட்ட துடன், கடைகள் பெரும்பாலும் மூடப்பட்ட போதிலும் கடைகளை உடைத்து உடைமைகளைக் கொள்ளை யடித்துச் சென்றுள்ளனர் ஹிந்துத்துவ அமைப்பினர்.
பீகாரில் ராமநவமி ஊர்வலத்தில்
மீண்டும் வன்முறை: 144 தடை உத்தரவு
பீகாரில் மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. பீகாரின் சசரம் பகுதியில் வெடிகுண்டு வெடித்ததில் 5 பேர் படுகாயமடைந்ததாக கூறப்படுகிறது. குண்டு வெடிப்புக்கான காரணம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ராமநவமி ஊர்வல நேரத்தில் சசரம் பகுதியில் இரு குழுக்களிடையே மோதல் ஏற்பட்டது.
பீகார் மாநிலம் நாலந்தாவில் உள்ள அஜீசியா என்ற வழிபாட்டுத்தலத்திற்கு ஹிந்துத்துவ அமைப் பினர் தீவைத்தனர். அந்த வழிபாட்டுத்தலத்திற்குள் நூலகம் ஒன்றும் செயல்பட்டு வந்தது, அதில் சுமார் 5000த்திற்கும் மேற்பட்ட பல அரிய நூல்கள் அங்கு இருந்தன. அவையும் தீக்கிரையானது.
இந்த நிகழ்வு தணிந்த நிலையில் மீண்டும் குண்டு வெடிப்பு நடந்துள்ளது. ராம நவமி பண்டிகையின் போது ஏற்பட்ட வன்முறையைத் தொடர்ந்து மீண்டும் அங்கு வன்முறை வெடித்ததைத் தொடர்ந்து பீகாரில் ஷரீஃப், நாலந்தா நகர் உள்ளிட்ட இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மகாராட்டிரா
மகாராட்டிர மாநிலம் அவுரங்காபாத்தில் நடந்த ராமநவமி ஊர்வலத்தில் சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதை தடுக்க முயன்ற காவல்துறையினர் மீதும் ஹிந்துத்துவ அமைப்பினர் – 500-க்கும் மேற்பட்ட கும்பல் தாக்குதல் நடத்தியது. காவல்துறையினர் முன்பாகவே ராமநவமி கொண்டாட் டத்தில் ஈடுபட்டவர்கள் சிறுபான்மையினப் பெண்கள் குறித்து மோசமான சொற்களைக் கூறியும், பிற மதத்தவர்கள் குறித்து மோசமான விமர்சனங்களைச் செய்து கொண்டும் சென்றனர். காவல்துறையும் இதை வேடிக்கைப் பார்த்தார்களே தவிர அவர்களை அடக்க முயலவில்லை.
ஒருகட்டத்தில் இவர்களின் நடவடிக்கைகள் அளவுக்கு மீறவே காவல்துறையினர் அவர்களை அங்கிருந்து வெளியேற கோரிக்கை விடுத்தனர். இதனை அடுத்து ஊர்வலத்தில் கலந்துகொண்டவர்கள் காவல்துறையினரை தாக்கத் துவங்கினர். இதனால் அப்பகுதி முழுவதும் கலவரச்சூழல் ஏற்பட்டு நிலைமை மோசமானது.
குஜராத்
குஜராத் மாநிலம் வதோதரா மாவட்டத்தில் ‘ராம நவமி கொண்டாட்டத்தின் போது வன்முறை வெடித்தது. பதேபூர் சாலை பகுதியில் உள்ள பஞ்ச்ரிகர் மொஹல்லாவில் நடந்த இந்த நிகழ்வில் ஊர்வலமாகச் சென்றவர்கள் சாலையில் இருந்த கற்களை வீசி தாக்குதலில் ஈடுபட்டதால் பெரும் பதற்றம் உண்டானது. இச்சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். விஷ்வ ஹிந்து பரிஷத் ஏற்பாடு செய்திருந்த இந்த ஊர்வலத்தில் நடந்த மோதலில் உயிர் சேதம் ஏதும் இல்லை என்றே தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்த காட்சிப் பதிவு ஒன்று இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
இச்சம்பவத்திற்கு முன் விஷ்வ ஹிந்து பரிஷத் ஏற்பாடு செய்திருந்த மற்றொரு ஊர்வலம் ஃபதேபுரா பகுதியில் நடந்தது. இந்த ஊர்வலத்தின் போதும் கற்களை வீசி தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இப்பகுதி யில் காவல்துறையினர் பெரிதாக வன்முறை உருவா காத வண்ணம் நிலைமையை உடனடியாக கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
உத்தரப்பிரதேசம்
மதுராவில் உள்ள ஜும்மா மசூதியில் வன் முறையாளர்கள் கற்களை வீசிதாக்குதல் நடத்தினர். பின்னர் மசூதி மீது ஏறி காவிக் கொடியை ஏற்றிவைத்து, கோபுரத்தின் உச்சியில் இருந்த இஸ்லாமியச் சின்னத் தையும் சிதைத்தனர்.
அரியானாவில் சோனிபர் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் சில ஊர்களிலும் ராமநவமி ஊர்வலத்தின் போது இஸ்லாமிய வழிபாட்டுத் தலங்கள் தாக்கப் பட்டன, இது தொடர்பாக காவல்துறையினர் அடை யாளம் தெரியாத நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்து உள்ளனர். வட இந்தியாவில் நடந்த இந்த தாக்கு தல்களில் இதுவரை 4 பேர் மரணமடைந்துள்ளனர்
ஏதாவது ஹிந்து பண்டிகை என்றால் அதனைப் பயன்படுத்தி இஸ்லாமியர்களைத் தாக்குவதுதான் சங்பரிவார்களின் குறியாக இருந்து வருகிறது.
இராமாயணப்படி இராமனே கொலைகாரனாகத் தானே இருந்திருக்கிறார். சூத்திரன் சம்பூகன் தவமிருந் தான் என்பதற்காக – இதனால் குலதர்மம் வருணதர்மம் கெட்டுவிட்டது ‘பிராமண’ப் பையன் செத்து விட்டான் என்று சம்பூகனை வாளால் வெட்டி ராமன் கொல்லவில்லையா?
சூத்திரன் சம்பூகன் கொலை செய்யப்பட்டு உயிர் இழந்த நிலையில், செத்துப்போன ‘பிராமண’ச் சிறுவன் உயிர் பிழைத்தான் என்று வால்மீகி இராமாயணத்தின் உத்தரகாண்டம் கூறுகிறதா இல்லையா?
இந்த இலட்சணத்தில் அயோத்தியில் 2024 மக்களவைத் தேர்தலின்போது இராமன் கோயிலைத் திறக்கப் போகிறார்களாம்?
ராமராஜ்ஜியத்தை உண்டாக்கப் போகிறோம் என்பதன் பொருள் இப்பொழுது விளங்குகிறதா?
சட்டமும் விதிகளும் யாருக்காக?
சிவராத்திரி ஊர்வலத்தின்போது மகாராட்டிராவில் இவர்களாகவே தயாரித்த நாட்டு ஏவுகணைகளைக் கொண்டு தாக்குதல் நடத்திய காட்சி (இதுவரை யார் மீதும் வழக்குப் பதிவு செய்யப்படவில்லை.)
மகாராட்டிரா மாநிலம் அகமத்நகரில் உள்ள ஓர் இஸ்லாமிய வழிபாட்டுத்தலத்திற்குள் நுழைந்து காவல்துறையினரின் முன்னிலையிலேயே ஜெய்சிறீ ராம் என்று கூவுகின்றனர். இங்கே ராமர் சிலை வைக்கவேண்டும், நாங்களும் ராமரை இங்குவந்து கும்பிடுவோம் என்று அடாவடி செய்கிறார்கள். ஆனால் காவல்துறையினர் வேடிக்கைப் பார்த்து கொண்டு இருக்கின்றனர். அங்குள்ள இஸ்லாமியர்கள் அனைவரும் ஒருவித மரணபயத்துடனேயே வாழ் கின்றனர்.
லக்னோவில் இஸ்லாமியர் ஒருவர் தனது வீட்டில் நோன்பு முடிக்கும் நிகழ்விற்கு பல இஸ்லா மியர்களை வரவழைத்து விருந்துவைத்துள்ளார். உடனே விதிமுறைகளை மீறி கூட்டம் கூடுதல், பொது அமைதிக்கு தீங்கு விளைவித்தல், பிற மதத்தவர்களின் உணர்வுகளை புண்படுத்துதல் என்ற பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்யப்பட்டுள்ளார். சிறைத் தண்டனையுடன் அவருக்கு 5 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.