சென்னை, மார்ச் 31- தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தி.மு.க. தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று (31.3.2026) தனது முதல் கட்டத் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்குகிறார்.
மு.க.ஸ்டாலின்
சென்னை அண்ணா அறிவாலயத்தில் கூட்டணி கட்சித் தலைவர்களுடன் நேற்று (30.3.2026) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முக்கிய ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் தேர்தல் வியூகங்கள் மற்றும் பரப்புரை குறித்து விவாதிக்கப்பட்டது. ஆலோசனைக்குப் பிறகு கூட்டணித் தலைவர்களுக்கு அவர் தேநீர் விருந்து அளித்தார்.
திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள்
இந்தத் தேர்தலில் திமுக ஒரு மெகா கூட்டணியை அமைத்துள்ளது. காங்கிரஸ், தேமுதிக, விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட பல கட்சிகள் இதில் இடம்பெற்றுள்ளன. கூட்டணி கட்சிகளுக்கு 70 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
திமுக போட்டியிடும் இடங்கள்: 164 தொகுதிகள்.
உதயசூரியன் சின்னம்: மதிமுக, மமக, கொமதேக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் சில உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதால், மொத்தம் 175 தொகுதிகளில் உதயசூரியன் சின்னம் களம் காண்கிறது.
தமிழ்நாட்டில் வரும் 23ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று (30.3.2026) தொடங்கிய நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முத்தமிழறிஞர் கலைஞரின் சொந்த ஊரான திருவாரூரில் இருந்து தனது பிரசாரத்தைத் தொடங்குகிறார். முதற்கட்டமாக வரும் 2ஆம் தேதி வரை அவர் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட உள்ளார்.
