இஸ்ரேல், அமெரிக்கா – ஈரான் போர் அந்நாடுகளை மட்டுமல்ல,
ஒட்டுமொத்த உலகத்தையும் இன்னலுக்கு உள்ளாக்கியுள்ளது!
ஒட்டுமொத்த உலகத்தையும் இன்னலுக்கு உள்ளாக்கியுள்ளது!
இஸ்ரேல், அமெரிக்கா – ஈரான் போர் அந்நாடுகளை மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகத்தையும் இன்னலுக்கு உள்ளாக்கியுள்ளது! நாட்டு மக்களுக்கு ‘விஸ்வகுரு(!)’ ஆற்ற வேண்டிய கடமை என்ன? மானுடம் தழைக்கட்டும்! மனிதநேயம் பிழைக்கட்டும்!! என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.
- இஸ்ரேல், அமெரிக்கா – ஈரான் போர் அந்நாடுகளை மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகத்தையும் இன்னலுக்கு உள்ளாக்கியுள்ளது!
- அப்பாவிகளான மக்களைக் கதிகலங்கச் செய்கின்றன!
- எரிவாயு தட்டுப்பாட்டினால் அவதிப்படுகின்றனர்!
- பிரதமர் மோடிக்கு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி!
- முரண்பட்ட செய்திகள் ஊடகங்களில் வெளிவருகின்றன!
- மானுடம் தழைக்கட்டும் – மனிதநேயம் பிழைக்கட்டும்!
அவரது அறிக்கை வருமாறு:
இன்றைய நவீன அறிவியல், மின்னணுவியல், செயற்கை நுண்ணறிவு யுகத்தில், நாடுகளிடையே போர் என்பது யுத்தம் நடக்கும் நாடுகளை மட்டும் பாதிப்பதில்லை.
அதற்கு எந்தவிதத்திலும் தொடர்பற்ற, உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள மக்களின் பாதுகாப்புக்கும், வாழ்வாதாரத்திற்கும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்துகின்றது; காரணம், உலக நாடுகள் தங்களது இறையாண்மையை (Sovereignty) முன்னிலைப்படுத்தினாலும்கூட, மற்ற அனைத்து மக்களையும் – நாடுகளையும் சார்ந்தே வாழ வேண்டிய அளவுக்கு உலக சமூக அமைப்பு உருவாகியுள்ளது.
அப்பாவிகளான மக்களைக்
கதிகலங்கச் செய்கின்றன!
கதிகலங்கச் செய்கின்றன!
கடந்த சில வாரங்களாக இஸ்ரேல் – அமெரிக்கா ஆகிய நாடுகள் – ஈரான்மீது தொடுத்த போரின் விளை வும், எதிர்வினையும் அப்பாவிகளான மக்களைக் கதிகலங்கச் செய்கின்றன!
ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு – ‘‘உங்களுக்குச் சமாதானம் தேவைப்பட்டால் அதற்கு ஒரே வழி, ஒரு போருக்கு ஆயத்தமாவதுதான்’’ என்பதே அப்பழமொழி!
போர் இல்லா உலகத்தை, இந்த வளர்ச்சியடைந்த 21 ஆம் நூற்றாண்டில்கூட காண முடியாத வேதனையும், வெட்கமும் நிறைந்த ஒரு நிலையைத்தான் நாளும் காணுகிறோம்.
சில ஆண்டுகளாகவே, உக்ரைன் – ரஷ்யா போர் நடைபெற்று வருகிறது. அதன் பின்னர் இப்போது இஸ்ரேல், அமெரிக்காவால் தொடங்கப்பட்ட ஈரானுக்கு எதிரானப் போரில், ஈரான்மீதான தாக்குதலை அமெரிக்கா ஒருபுறமும், இன்னொரு புறம் இஸ்ரேலும் நடத்தும் போர் – அதை எதிர்கொள்ள ஈரான் போன்ற நாடுகளின் போர் நடவடிக்கை வெறும் ஆயுதத் தாக்குதலோடு நிற்கவில்லை.
எரிவாயு தட்டுப்பாட்டினால் அவதிப்படுகின்றனர்!
பல உலக நாடுகளின் எரிபொருள் தேவைகள் – மத்திய ஆசிய நாடுகளுடனான வர்த்தக ஒப்பந்தத்தின்மீது நடைபெறும் நிலையில் எண்ணெய், எரிபொருள் கொண்டு வரும் கப்பல்கள் – ஈரானின் ஹார்மூஸ் நீரிணை வழியாகவே அவற்றைத் தங்கள் நாடுகளுக்குக் கொண்டு செல்லும் நிலை இருக்கிறது. அந்த நீரிணையை மூடிய ஈரான், ‘‘எதிரி நாட்டுக் கப்பல்களுக்கு வழிவிடமாட்டோம்’’ என்று கூறும் நிலையில், இந்தியா நட்புறவு நாடு என்று, அதன் கப்பல்களுக்கு மட்டும் வழி திறந்துவிடப்படும் என்று கூறி, ஓரிரு கப்பல்கள் பாதுகாப்பாக வந்து சேர்ந்தன. இதற்கிடையில், உணவுப் பொருளாதாரத்தில் இல்லத்தரசிகள் முதல் ஓட்டல் வரை எரிவாயு தட்டுப்பாட்டினால் அவதிப்படுகின்றனர்! உணவு விடுதிகள், நிறுவனங்கள் மூடப்பட்டதால், அதில் வேலை பார்த்துச் சம்பாதித்த எளிய தொழிலாளர்களின் குடும்பங்கள் ‘‘வயிறு காயும் நிலை’’ திடீரென ஏற்பட்டு விட்டது!
அதுபோலவே, திருப்பூர் ஜவுளி மற்றும் பல பொருள்களின் ஏற்றுமதிக்கான ஒப்புதல்களை குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் அனுப்பி வைக்க இயலாத தேக்க, ஏக்க நிலை!
‘விஸ்வகுரு’ என்று பெருமை பேசும் நமது வெளி யுறவுக் கொள்கை பெரிதும் அமெரிக்காவிடம் அடங்கி ஒடுங்கிப் போகும் பரிதாப நிலை ஏற்பட்டு, நமது நாட்டு இறையாண்மையும், சுயமரியாதையும் விமர்சனத்திற்கு ஆளாகும் விரும்பத்தகாத நிலை ஏற்படலாமா?
பிரதமர் மோடிக்கு –
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி!
நமது முதலமைச்சர் அவர்கள் சரியான ஒரு கேள்வியைப் பிரதமர் மோடி முன் வைத்துள்ளார்.
‘‘நாட்டு மக்கள் தயாராக இருக்கவேண்டும்’’ என்று நாடாளுமன்றத்தில் பேசியுள்ள மதிப்பிற்குரிய பிரதமர் மோடி அவர்களே, மக்களை ஆயத்தமாகும்படிக் கூறும் நீங்கள் (இந்தியா உலகிற்கே தலைமை தாங்கும் ‘விஸ்வகுரு’ என்று தம்பட்டமடிக்கும் நிலையில்) முதலில் தயாராகி விட்டீர்களா?
‘‘பாதிக்கப்பட்ட நாட்டிலும், அதன் அண்டை நாடுகளிலும் வாழும் மக்கள் பாதுகாப்புக்கு – தாயகம் திரும்புவதற்கான வசதிகள்பற்றி எடுக்கப்பட்ட துரித கதி நடவடிக்கைகள் என்ன?’’ என்பதை, நல்லலெண்ணத்துடன், அரசியல் மாச்சரியங்களை ஒதுக்கிவிட்டு, பொதுநோக்கோடு கேட்டிருக்கிறார்.
தெளிவான விளக்கமும், விடையும், தொடர்பான நடவடிக்கை பற்றிய விவரங்களையும் தந்து, அவர்களது அச்சத்தை, அவர்களுக்கு வரும் ஆபத்தைத் தடுத்து நிறுத்திட முன்வரவேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தால்தான் அக்கேள்வி எழுப்பப்பட்டுள்ளது; அரசியல் கண்ணோட்டத்துடன் அல்ல.
முரண்பட்ட செய்திகள்
ஊடகங்களில் வெளிவருகின்றன!
ஊடகங்களில் வெளிவருகின்றன!
‘5 நாள்கள் போர் நிறுத்தம் என்று ஒப்புக்கொள்ளப்பட்டு, அமலுக்கு வரும்’ என்று கூறுகிறார் அமெரிக்க அதிபர் டிரம்ப்; அதை மறுத்து, ‘நாங்கள் உடன்பாடு எதுவும் பேசவில்லை’ என்பதோடு, ‘எங்களது நிபந்தனைக்குட்பட வேண்டும்’ என்று ஈரான் நாட்டுப் பொறுப்பாளர் கூறுகிறார். ஒன்றுக்கொன்று முரண்பட்ட செய்திகள் ஊடகங்களில் வெளிவருகின்றன!
‘‘போர் நடைபெறும் காலங்களில் முதல் களப் பலி, உண்மைதான்’’ என்ற ஆங்கிலப் பழமொழியும்கூட இப்போது நம் நினைவிற்கு வருகிறது!
மானுடம் தழைக்கட்டும் –
மனிதநேயம் பிழைக்கட்டும்!
மனிதநேயம் பிழைக்கட்டும்!
எப்படியானாலும், உலக மக்கள், இந்த அதிகார ஆதிக்க மேலாண்மை, வல்லரசு யாருக்கு என்ற போட்டி மனப்பான்மை மாறி, ‘போரற்ற புது உலகைக்’ காண்பது – அமைதி வழியில் அந்தந்த நாடும், மக்களும் வளரவும், அவரவரது மொழி, கலாச்சாரம், வாழ்வாதாரங்களோடு வாழும் நாளை ஏக்கத்தோடு, அகல விழிதிறந்து எதிர்பார்த்து ஏங்கும் நிலைதான் இன்று!
நாளையாவது, நல்ல செய்தி வரட்டும்!
மானுடம் தழைக்கட்டும் – மனிதநேயம் பிழைக்கட்டும்!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
24.3.2026
