புதுடில்லி, ஏப்.10- சீனாவுடன் தொடர்புடைய அதானி குழுமத்தை துறைமுகங்களை இயக்க அனுமதிப்பது ஏன் என்று காங்கிரஸ் கட்சி கேள்வி விடுத்துள்ளது.
காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது ‘டிவிட்டர்’ பக்கத்தில் கூறியிருப்பதாவது:- தைவானை சேர்ந்த வான் ஹை லைன்ஸ் என்ற நிறுவனத்தின் இயக்குநருக்கு சீனாவுடன் தொடர்பு இருப்பதால், அந்த நிறுவனத்துக்கு கடந்த ஆண்டு பாதுகாப்பு ஒப்புதல் அளிக்க ஒன்றிய அரசு மறுத்து விட்டதாக ஒரு பத்திரிகை செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இதனால், ஜவகர்லால் நேரு துறை முகத்தில் கன்டெய்னர் கையாளும் முனையத்தை இயக்கும் வாய்ப்பு, அந்த நிறுவனத்துக்கு மறுக்கப்பட்டது.
ரூ.5,500 கோடி ஊழல்
அதாவது, சீன நிறுவனங்கள் மற்றும் சீனாவுடன் தொடர்புடைய நிறுவ னங்கள் இந்தியாவில் துறைமுகங்களை யும், கன்டெய்னர் முனையங்களையும் இயக்க அனுமதிப்பது இல்லை என்பது தான் இந்திய அரசின் நிலைப்பாடு. அதே சமயத்தில், அதானி குழுமத்தின் சீன தொடர்பு பற்றி புதிய கேள்விகள் எழுகின்றன.
சீன குடிமகனான சாங் சுங் லிங், அதானி குழுமத்துடன்நெருங் கியதொடர்புடையவர். அவருடைய மகனுக்கு சொந்தமான பி.எம்.சி. புராஜக்ட்ஸ் நிறுவனம்தான். அதானி குழுமத்துக்காக துறைமுகங்கள், முனையங்கள், ரயில் பாதைகள், மின்பாதைகள் உள்ளிட்டவற்றை கட்டி கொடுக்கிறது. அதானி குழுமமும், பி.எம்.சி. புரா ஜக்ட்ஸ் நிறுவனமும் இணைந்து ரூ.5 ஆயிரத்து 500 கோடி மின்சாதனங்கள் ஊழலில் விசாரணையை சந்தித்து வருகின்றன.
அனுமதிப்பது ஏன்?
சீனாவின் ஷாங்காய் நகரில் 2 கப்பல் நிறுவனங்களை அதானி குழுமம் இயக்கி இருக்கிறது. அவற்றில் ஒரு நிறுவனம், வடகொரியாவுக்கு சட்ட விரோதமாக பெட்ரோலியம் பொருட் களை விற்பனை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த அளவுக்கு சீன தொடர்பு கொண்ட அதானி குழுமம் இந்தியாவில் துறைமுகங்களை இயக்க அனுமதிக்கப்படுவது ஏன்? தேச பாதுகாப்பில் ஏற்படும் தாக்கத்தை பற்றி கவலைப்படாமல், துறைமுகத் துக்கு மேல் துறைமுகத்தை வாங்க அதானி குழுமத்தை அனுமதிப்பது ஏன்?
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.