ஓ, மனிதா சரியாக சிந்தித்தால்….!

3 Min Read

 ஓ, மனிதா சரியாக சிந்தித்தால்….!

பிரபல கருநாடக இசை மேதை, சீர்திருத்தக் கொள்கை உடைய, முற்போக்காளர் டி.எம். கிருஷ்ணா அவர்களின் இசையமைப்பில், வைக்கம் சத்தியாகிரக நூற்றாண்டு விழாவையொட்டி, பிரபல புதின புரட்சி எழுத்தாளர், பேராசிரியர் பெருமாள் முருகன் அவர்கள் எழுதிய – “சிந்திக்கச் சொன்னவர் பெரியார் – தந்தை பெரியார்  சொந்த புத்தியைக் கொண்டு சிந்திக்கச் சொன்னவர் பெரியார்” என்று துவங்கும் அதி அற்புதமான பாடலைக் கேட்டு மக்களில் பலரும் மெய் மறந்து சுவைத்தனர்.

கைதட்டி மகிழ்ந்தார்கள்; அது மட்டும் போதுமா?

நடைமுறையில் தந்தை பெரியார் சொன்னது சமூகத்தில் மக்களால் கடைப்பிடிக்கப்பட வேண் டாமா?

அருமை வாசகப் பெருமக்களே, உங்களை நோக்கியும், உங்கள் நண்பர் குழாம் நோக்கியும் இந்தக் கேள்வியை கேட்டு, செயல் வடிவிலான விடையைப் பெற முயலுங்கள்!

ஓ மனிதர்களே! மனிதர்களே!!

ஒப்பனைகளெல்லாம் உண்மைகளாகி விடுமா? அப்படி எண்ணி ஏமாறலாமா? மனிதர் களாகிய நாம் – நம் சொந்தப் புத்தியை நன்கு பயன்படுத்தி சில கேள்விகளை நமக்குள்ளே கேட்டு விடை பெற முயற்சிக்கலாமே?

இன்று பணத்தால் மனிதர்களின் மதிப்பீடு உயருவதால் அப்படி கோடி கோடியாக, மில்லி யனாக, டிரில்லியனாக பெருகும் சொத்தே அவரை சிறந்த மனிதனாகக் காட்டி உயர்த்தி விடுமா?

பணம் முக்கியமா? பண்பு முக்கியமா?

மானிடத்தின் சரிபகுதியான பெண்கள் – மகளிர் தங்கள் வாழ்நாளில் பெரும் பகுதி நேரத்தை, நினைப்பை, பொருளை – வெறும் அலங்காரத்திலேயே செலவழித்து ‘அழகு வேட்டை’  ஆடுவதற்கு ஆலாய்ப் பறக்கிறார்களே, அந்த அழகு – ‘அறிவு’ போல நின்று நிலைத்து நிரந்தரமாகுமா?

வாழ உணவு தேவைதான் – ஆனால் உண்ணுவதற்கே நம் வாழ்க்கை என்று சாப்பாட்டு இராமன்களாக, இராமிகளாக நடந்து கொள்வது – நோய்களால் நாம் தாக்கப்படுவதைத் தவிர, வாழ வேண்டிய மனிதனின் வாழ்வு சுருங்கித் தானே போகிறது? அதைப்பற்றி எவராவது சிந்தித்தது உண்டா?

பெற்ற தாயையும், தந்தையையும் பேணத் தெரியாத “பெரிய மனிதர்கள்” பெரும் கொடை வள்ளல்களாக வெளிச்சம் போட்டு வருவதனால் காதொடிந்த ஊசிப் பலனாவது உண்டா?

பகுத்தறிவைப் பரப்பி, மனிதர்களின் உடல் உழைப்பைக் குறைத்து அவர்களை பல்லாண்டு வாழ வைக்கும் – அதே அறிவியல் கண்டுபிடிப்பு களால் “மரண ஓலை” எழுதப்பட்டு தற்கொலைகள் மலிகின்றனவே? அது சரியாக சிந்திக்காததன் கெட்ட விளைவுதானே?

எனவே,,

1. அழகுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை அறிவுக்குக் கொடுக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.

2. பணத்துக்குக் கொடுக்கும் மதிப்பை பண்புக்குத் தரும் மாற்றம் காணுங்கள்.

3. ஒப்பனைகளுக்காக அலையாதீர் – உண்மையைத் தேடி அலையுங்கள்.

4. அறிவியல், அறிவை வளர்ப்பதற்கே –  அழிவையோ, மூடத்தனத்தையோ மூலை முடுக்கெல்லாம் பரப்புவ தற்காக அல்ல என்பதை உணர்ந்து செயல்படுங்கள்!

5. மனிதநேயம் ஆட்சி புரிய வேண்டிய உள்ளத்தில் மமதைக்கும், சூழ்ச்சிக்கும் இடந்தந்து இறுதியில் குற்றம் புரிந்தவன் வாழ்க்கையாக’ உங்கள் வாழ்க்கையை ஆக்கி உங்களை நீங்களே அழித்துக் கொள்ள முயலாதீர்கள்!

6. புகழ் வேட்டை பொல்லாதது; இறுதியில் வேட்டைக்காரருக்கே வீழ்ச்சியில் முடியும்.  புகழ் என்பது தானே வந்து கதவைத் தட்ட வேண்டுமே தவிர, அதை விலை கொடுத்து வாங்குவது, “விலை மாதரை”த் தேடும் காமப் பசியாளன் என்பவனை விடக் கேவலமானதாக்கி விடும்.  உவமைகள் மகளிரைக் கொச்சைப்படுத்த அல்ல!

7. பதவிகளை சூழ்ச்சிப் படிக்கட்டுகளாக்கி மேலும் மேலும் உயரே செல்ல உங்கள் நேரத்தை உழைப்பைச் செலவழிக்காதீர்கள். அவைகளை சுமைகளாகக் கருதி சுமைகளைச் சுவைகளாக்கிட உழையுங்கள்.

8. பழி வாங்கும் உணர்ச்சி இறுதியில் அதன் பசிக்கு உங்களையே இரையாக ஆக்கிக் கொள்ளும் என்பதை உணரத் தவறாதீர்கள்.

9. நண்பர்களை எதிரிகளாகவும், எதிரிகளை நண்பர்களாகவும் ஆக்கி, வேதனைக்கு ஆளாகி வீணாகாதீர்கள்!

10. எல்லாவற்றிக்கும் மேலாக நன்றி காட்ட மறப்பவனும், நயவஞ்சகனும், நம்பியவர்களைக் கழுத்தறுப்பவனும் மிக மிக ஆபத்தானவர்கள்.

ஒப்புக்குப் பாராட்டி “காக்காய் பிடித்து” உயர நினைப்போரிடம் எச்சரிக்கையுடன் – அவர்களை ஒதுக்கி வாழக் கற்றுக் கொள்ளுங்கள்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *