சென்னை, நவ.26 அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி நாளை (28.11.2023) உருவாகிறது. தமிழ்நாட்டில் வரும் டிச.1ஆ-ம் தேதி வரை மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மய்ய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதை யொட்டியுள்ள தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் நாளை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது வரும் 29-ஆம் தேதி காற்ற ழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். கிழக்கு திசைக் காற்றில் வேக மாறுபாடு நிலவுவதால், தமிழ்நாட்டில் சில இடங்களிலும், புதுச்சேரி மாநிலத்திலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை (27.11.2023) முதல் டிச.1-ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் ஓரிரு இடங் களில் லேசானது முதல் மிதமான மழை பெய் யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கும். நவ. 25ஆ-ம் தேதி (நேற்று) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக சென்னை அடையாறில் 8 செ.மீ., தரமணியில் 7 செ.மீ., கடலூர் மாவட்டம் புவனகிரி, சென்னை அண்ணா நகர், பெருங்குடி, ஆலந்தூர், பெரம்பலூர் மாவட்டம் எறையூர் ஆகிய இடங்களில் 5 செ.மீ., கடலூர் மாவட்டம் தொழுதூர், சென்னை அண்ணா பல்கலைக் கழகம், தேனாம்பேட்டை, அய்ஸ் ஹவுஸ், சென்னை விமானநிலையம், மீனம்பாக்கம், நுங்கம்பாக்கம், பெரம்பலூர் மாவட்டம் லப்பைக்குடிகாடு ஆகிய இடங்களில் 4 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
அந்தமான் அருகே உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக வரும் 27, 28-ஆம் தேதிகளில் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய அந்தமான் கடல் பகுதிகளில் அதிகபட்சமாக 65 கி.மீ. வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே, அப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத் தப்படுகிறார்கள். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.