“த.வெ.க.வுக்கு ஆதரவு இல்லை! தி.மு.க.வுக்கு நிபந்தனையற்ற முழு ஆதரவு” ஜனநாயக முஸ்லிம் மக்கள் கட்சி

3 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

சென்னை, மார்ச் 12- 2026 சட்டமன்றத் தேர்தல் தேதி இன்னும் சில நாள்களில் அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.

தேர்தலுக்காக அரசியல் கட்சிகளும், தேர்தல் ஆணையமும் தீவிரமாகத் தயாராகி வருகின்றன.

தேர்தலைச் சந்திக்கும் த.வெ.க.வுக்கு ஜனநாயக முஸ்லிம் மக்கள் கட்சி தனது ஆதரவை தெரிவித்துவந்தது. இந்நிலையில், திடீரென தனது த.வெ.க.வுக்கு தந்து வந்த ஆதரவை திரும்பப் பெறுவதாகவும், தி.மு.க.வுக்குத் தங்கள் ஆதரவை தருவதாகவும் அக்கட்சி அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அக்கட்சியின் தலைவர் தமீம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

“நடைபெறவிருக்கும் 2026 சட்டமன்றப் பொது தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவளித்திருந்த ஜனநாயக முஸ்லிம் மக்கள் கட்சி ஆதரவை திரும்பப் பெற்று திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு நிபந்தனையற்ற முழு ஆதரவு அளித்து உறுதுணையாகச் செயல்படும் என்று உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

 

மாநிலங்களவையில்

தலைமைத் தேர்தல் ஆணையர் மீது பதவி நீக்கத் தீர்மானம்!

திரிணமுல் காங்கிரசுக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு

புதுடில்லி, மார்ச் 12- மேற்கு வங்க மாநிலத்தில் வரும் ஏப்ரல், மே மாதங்களில் தேர்தல் நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு கடந்த ஆண்டு டிசம்பரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (எஸ்அய்ஆர்) தேர்தல் ஆணையத்தால் மேற்கு வங்கத்தில் தொடங்கப்பட்டன.

இந்நிலையில் இந்த எஸ்அய்ஆர் பணியில் முறைகேடுகள் நடை பெற்றுள்ளதாகவும், இதற்குத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார்தான் காரணம் என்றும் திரிணமுல் காங்கிரஸ் கட்சி புகார் கூறி வருகிறது.

இதைத் தொடர்ந்து அவரை பதவியிலிருந்து நீக்கக் கோரும் தீர்மானத்தை திரிணமுல் காங்கிரஸ், மாநிலங்களவையில் கொண்டு வரும் என்று கட்சி எம்.பி.சவுகதா ராய் நேற்று (11.3.2026) அறிவித்தார்.எஸ்அய்ஆர் பணியின் காரணமாக 59 லட்சம் உண்மையான வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன என்றும் அவர் புகார் தெரிவித்தார்.

இந்நிலையில் திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் முடிவை வரவேற்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர் உதித் ராஜ், நாடாளுமன்ற உறுப்பினர் சுக்தேவ் பகத் உள்ளிட்டோர் தெரிவித்துள்ளனர். திரிணமுல் காங்கிரஸ் கொண்டு வரும் தீர்மானத்துக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரவு அளிக்கும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

பூர்ணியா தொகுதி சுயேச்சை நாடாளுமன்ற உறுப்பினரான பப்பு யாதவ், சமாஜ்வாதி நாடாளுமன்ற உறுப்பினர் தர்மேந்திர யாதவ் உள்ளிட்டோரும் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் முடிவுக்கு பாஜக மூத்த தலைவர்கள் அனுராக் தாக்குர், முக்தார் அப்பாஸ் நக்வி, ஒன்றிய அமைச்சர் சுகந்தா மஜும்தார் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாட்டில் விளையாட்டு வீரர்களுக்கு மூன்று சதவீதம் வேலைவாய்ப்பு

உதவி செவிலியர், கிராம செவிலியர்
பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்!

சென்னை, மார்ச் 12- தமிழ்நாட்டில் விளையாட்டு வீரர்களுக்கு அரசுத் துறைகள், பொதுத்துறை நிறுவனங் களில் 3 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. விண்ணப்பிக்கும் ஆண்டுக்கு முந்தைய 5 ஆண்டுகளில் பெறப்பட்ட விளையாட்டு சாத னைகள் மட்டுமே தகுதியானதாகக் கருதப்படும்.

இந்த ஒதுக்கீட்டில், மருத்துவத் துறையில் உதவி செவிலியர், கிராம சுகாதார செவிலியர் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விளையாட்டு வீரர்கள் தங்கள் விண்ணப்பத்தை உரிய ஆவணங்களுடன் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளத்தில் (www.sdat.tn.gov.in) பதிவேற்றம் செய்ய வேண்டும். இணையவழியில் இன்று (12.3.2026) காலை 10 மணி முதல் ஏப்.11-ம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *