திருச்சி, மார்ச் 11- பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் முதல்வர் முனைவர் க.வனிதா, கல்வி மற்றும் சமூகப் பணியில் ஆற்றி வரும் தன்னிகரற்ற சேவையைப் பாராட்டி, பன்னாட்டு மகளிர் நாளை முன்னிட்டு மூன்று வெவ்வேறு அமைப்புகள் சார்பில் உயரிய விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளார்.
சமூக மாற்றத்திற்கான
வீரமங்கை ‘வேலுநாச்சியார் விருது’
வீரமங்கை ‘வேலுநாச்சியார் விருது’
தமிழ் செம்மொழி மன்றம் சார்பில் நடைபெற்ற உலக மகளிர் நாள் விழாவில், சமுதாயத்தையும் நாட்டையும் சீர்படுத்தும் உயரிய பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ள பெண் ஆளுமைகளை அங்கீகரிக்கும் விதமாக முனைவர் க.வனிதா அவர்களுக்கு ‘வீரமங்கை வேலுநாச்சியார் விருது – 2026′ வழங்கப்பட்டது. “தமிழால் உலகை ஆள்வோம்” என்ற முழக்கத்துடன் செயல்படும் இம்மன்றம், இவரின் நிர்வாகத் திறன் மற்றும் கல்விச் சேவையைப் பாராட்டி இவ்விருதினை வழங்கியுள்ளது.
ஆளுமைத் திறனுக்கான
‘சிறந்த பெண்மணி விருது’
‘சிறந்த பெண்மணி விருது’
அதேபோல், கவிச்சிறகு படைப்பாளர்கள் உலகம் அமைப்பு, சமூக, பொருளாதார மற்றும் கலாச்சாரத் துறைகளில் குறிப்பிடத்தக்க சாதனைகளைப் புரிந்து வரும் பெண்களை ஊக்குவிக்கும் வகையில் இவருக்கு ‘சிறந்த பெண்மணி – 2026’ என்ற விருதினை வழங்கிச் சிறப்பித்தது. கல்வித் துறையில் இவர் மேற்கொண்டு வரும் நவீன மாற்றங்கள் மற்றும் மாணவர் நலன் சார்ந்த செயல்பாடுகள் இதற்குக் காரணமாக அமைந்தன.
கல்விச் செம்மலாக ‘வைரமணிச்செம்மல் விருது’
திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப் பட்டியில் உள்ள பசுமை வாசல் பவுண்டேஷன் மற்றும் புதுச்சேரி அரசு சட்டமன்றத் தலைவர் ஏம்பலம் ஆர்.செல்வத்தின் வாழ்த்துகளுடன், கல்வி மற்றும் சமூகப் பிரிவில் சாதனை படைத்து வரும் பெண் ஆளுமைகளுக்கான ‘வைரமணிச்செம்மல் விருது – 2026′ முனைவர் க.வனிதாவுக்கு வழங்கப்பட்டது.
ஒரே தருணத்தில் மூன்று முக்கிய விருதுகளைப் பெற்று, பள்ளிக்கும், மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ள முதல்வர் முனைவர் க.வனிதாவுக்கு, பள்ளித் தாளாளர், நிர்வாகக் குழு உறுப்பினர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் எனப் பலரும் தங்களது நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இவ்விருதுச் சான்றிதழ்களை தஞ்சாவூர் பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக்கழக உயிரித் தொழில்நுட்பத் துறை பேராசிரியர் மற்றும் சேர்க்கைப் பிரிவின் இணை இயக்குநர், முனைவர் டி.கிருஷ்ண குமார், ஆன்டன் ஆகியோர் வழங்கிப் பாராட்டுகளைத் தெரிவித்தனர்.
