குவலயத்தின் வரலாற்றில் புதுமை நீயே!!
வேலூரில் பிறந்தவரே! பூமிப் பந்தை
வியக்கவைத்த பேரருளே! பெரியார் அய்யா
காலூன்றி நடப்பதற்கு முடியா நாளில்
கைத்தடியாய் இருந்தவரே! தமிழர் நாட்டில்
சூலூன்றித் தடம்பதிக்க வந்தோர் எண்ணம்
சுடரேந்தி அழித்தவரே! தொண்ட றத்தால்
கோலூன்றிப் புகழ்நாட்டி நின்றாய் தாயே!
குவலயத்தின் வரலாற்றில் புதுமை நீயே!!
ஆடையினுள் ஆடைபல அணிந்து கொண்டு
அம்மாநீ கூட்டங்கள் பேசச் சென்றாய்!
ஜாடைக்கும் ஏச்சுக்கும் தளரா நின்றே
சமத்துவத்தை யாம்பெறவே நடை நடந்தாய்!!
மேடைக்கும் மாலைக்கும் தூர மாகி
விடியலுக்காய் நூல்விற்றாய்! எங்கள் வாழ்வின்
கோடைக்கு மருந்தானாய்! மணியம் மைநீ
கொள்கைவாழ் நாள்வரைக்கும் வாழ்வாய் தாயே!!
சிந்தைசெயல் எல்லாமே பெரியார் வீச்சில்!
சீர்திருத்தம் ஒன்றேதான் எழுத்தில் பேச்சில்!!
நொந்தவுடல் புறந்தள்ளி தமிழி னத்தின்
நுடம்நீக்கப் பாடுபட்டாய் தாயே! நீயே!!
தந்தைபணி முடிப்பதற்குக் களமும் கண்டாய்!
தடைவந்தால் உடைத்தெறிந்தே சிறையும் சென்றாய்!!
வந்தவசை அத்தனையும் உரமாய்க் கொண்டே
வாழ்ந்தாயே ஒப்புவமை யில்லா வாழ்வே!!
காலமெல்லாம் பெரியாரைக் காத்தாய் நீயே!
களங்கத்தைத் தின்றுயிர்த்தே வென்றாய் நீயே!!
காலத்தின் கோலத்தால் பெரியார் அய்யா
கலங்கவிட்டே சென்றபின்னே தலைமை யேற்றாய்!
ஓலமிட்டே அழுகாமல் உறுதி யேற்க
ஊரெல்லாம் சுற்றிவந்தாய் தாயே! நீயே!!
ஞாலமெல்லாம் பெரியாரைக் கொண்டு சேர்க்க
நற்றொண்டர் வீரமணி தந்தாய் வாழ்க!!
– பாவலர் சுப.முருகானந்தம்
மாநிலச் செயலாளர்
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், தமிழ்நாடு.
