இந்தியாவிலேயே முதல்முறையாக விளையாட்டு வீரர்களுக்கு சிகிச்சை அளிக்க ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிறப்பு மய்யம் திறப்பு

4 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, மார்ச் 6 விளையாட்டு வீரர்களுக்கு ஏற்படும் காயங்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்கவும், அவர்களின் உடல் திறனை மேம்படுத்தவும் இந்தியாவிலேயே முதல்முறையாகச் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் பிரத்யேக உயர் திறன் மய்யம் அமைக்கப்பட்டுள்ளது.

ஏறத்தாழ ரூ.6.50 கோடி மதிப்பீட்டில் இந்த மய்யம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் விளையாட்டு வீரர்களுக்கான பிரத்யேக உடற்பயிற்சிக் கூடங்கள், பிசியோதெரபி பிரிவுகள் மற்றும் காயங்களைக் கண்டறியும் நவீனக் கருவிகள் இடம்பெற்றுள்ளன.

தசைப்பிடிப்பு, எலும்பு முறிவு மற்றும் தசைநார் கிழிதல் போன்ற விளையாட்டுத் தொடர்பான அனைத்து பாதிப்புகளுக்கும் ஒரே இடத்தில் தீர்வு காணப்படுகிறது. காயங்களுக்குச் சிகிச்சை அளிப்பது மட்டுமின்றி, ஒரு வீரரின்  உடல் வலிமையை எவ்வாறு அதிகரிப்பது என்பதற்கான ஆலோசனைகளும், பயிற்சியும் இங்கு வழங்கப்படவுள்ளன. அரசு சார்பில் விளையாடும் வீரர்கள் முதல் பன்னாட்டு போட்டிகளில் பங்கேற்கும் தமிழ்நாட்டு வீரர்கள் வரை அனைவரும் இங்குப் பயனடையலாம். இதுவரை இதுபோன்ற உயர்தர சிகிச்சைகளைப் பெற விளையாட்டு வீரர்கள் தனியார் மருத்துவமனைகளையோ அல்லது வெளிநாடுகளையோ நாட வேண்டிய சூழல் இருந்தது. தற்போது அரசு மருத்துவமனையிலேயே உலகத்தரம் வாய்ந்த வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதால், ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த திறமையான வீரர்களுக்கு இது ஒரு பெரும் வாய்ப்பாக அமையும். “தமிழ்நாட்டை இந்தியாவின் விளையாட்டுத் தலைநகராக மாற்றுவதே இந்த முயற்சியின் முக்கிய நோக்கம்.” இந்த மய்யத்தின் மூலம் தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் அதிக பதக்கங்களை வென்று நாட்டிற்குப் பெருமை சேர்க்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

பகுதி நேர ஆசிரியர்களின் ஊதியம் ரூ.15 ஆயிரமாக உயர்வு

 தமிழ்நாடு அரசு ஆணை வெளியீடு

சென்னை, மார்ச்.06  பகுதிநேர ஆசிரியர்கள் ஊதியம் ரூ.15 ஆயிரமாக உயர்த்தி பள்ளிக்கல்வித் துறை அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறையை சமாளிக்க பகுதிநேர ஆசிரியர்கள் 2012-ஆம் ஆண்டு முதல் தொகுப்பூதியத்தில் பணி நியமனம் செய்யப்படுகின்றனர். அந்தவகையில் தற்போது 11,773 பகுதிநேர ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் பள்ளிகளில் வாரம்தோறும் 3 நாட்கள் பாடம் நடத்துவர். அதற்கு மாத ஊதியமாக ரூ.12,500 வழங்கப்படுகிறது.

ரூ.15 ஆயிரம்

இதற்கிடையே பகுதிநேர ஆசிரியர்கள், தங்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி சென்னையில் கடந்த ஜனவரியில் தொடர் போராட்டம் நடத்தினர். அந்த போராட்டத்தின்போது பெரம்பலூரைச் சேர்ந்த ஆசிரியர் கண்ணன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சர்ச்சையானது.

இதையடுத்து ‘பகுதிநேர ஆசிரியர்களின் ஊதியம் ரூ.2,500 உயர்த்தப்பட்டு ரூ.15 ஆயிரமாக வழங்கப்படும். இதுவரை வழங்கப்படாத மே மாத ஊதியம் இனி குறைந்தபட்சமாக ரூ.10 ஆயிரம் அளிக்கப்படும்’ என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவித்தார். இந்நிலையில் அதற்கான அரசாணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது

இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை செயலர் பி.சந்திரமோகன் வெளியிட்ட அரசாணையில், ‘‘பகுதி நேர ஆசிரியர்களுக்கு 2026 ஜன, 1-ஆம் தேதி முதல் ஊதியம் ரூ.2,500 உயர்த்தி ரூ.15 ஆயிரமாக வழங்கவும், மே மாதம் மட்டும் சிறப்பு உதவித்தொகையாக ரூ.10 ஆயிரம் அளிக்கவும் அனுமதி அளிக்கப்படுகிறது.இதற்கான தொடர் செலவினமாக ஆண்டுக்கு ரூ.44 கோடி நிதி ஒதுக்கவும் ஆணையிடப்படுகிறது’’ என்று கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே, ‘தேர்தல் வாக்குறுதியின்படி தங்களை பணி நிரந்தரம் செய்ய முன்வர வேண்டும்’ என தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் வலியுறுத்தியுள்ளார்.

ஓட்டுநர், நடத்துநர்
தகுதி பெற்ற முதல் பெண்

தஞ்சாவூர், மார்ச் 6 அரசு போக்குவரத்து கழக கும்பகோணம் கோட்டத்தில், ஓட்டுநர், நடத்துநருக்கான தகுதி பெற்று, முதல் பெண் பயிற்சி முடிந்து, விரைவில் பணியில் சேர உள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதுார் அருகே சூரியனார்கோவிலைச் சேர்ந்தவர் ரம்யா, 33, கடந்த, 2018இல் சென்னையில் உள்ள தனியார் ஓட்டுநர் பயிற்சிப் பள்ளியில் (டிரைவிங் ஸ்கூல்) பயிற்றுநராக பணியாற்றினார். இந்நிலையில் கும்மிடிப்பூண்டி சாலை போக்குவரத்து நிறுவனத்தின் கீழ் உள்ள அரசு போக்குவரத்து பயிற்சி பள்ளியில், கடந்த, 2023இல் பயிற்சி பெற்று தேர்வானார். பிறகு, கோவையில் உள்ள தனியார் பேருந்தில் ஓட்டுநராக ஒன்றரை ஆண்டு பணியாற்றி வந்தார். இதற்கிடையில், ரம்யா பேருந்து நடந்துநர்  தகுதிக்கு விண்ணப்பித்து தேர்ச்சி பெற்றார்.

இதையடுத்து, அரசு போக்குவரத்து கழகத்தில், ஓட்டுநர் -– நடத்துநருக்கான வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டது. அந்த வேலைக்கு ரம்யா விண்ணப்பித்து, தேர்வு மற்றும் நேர்முக தேர்வில் தேர்ச்சி பெற்று, தற்போது கும்பகோணம் அரசுப் போக்குவரத்து கழக ஓட்டுநருக்கான பயிற்சி பெற்று வருகிறார். விரைவில், சீர்காழியில் பணியில் சேர உள்ள நிலையில், நேற்று கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் அன்பழகனிடம் வாழ்த்து பெற்றார்.

இதுகுறித்து, அரசுப் போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில், ‘கும்பகோணம், கோட்ட அளவில், அரசுப் போக்குவரத்து கழகத்தில், ஓட்டுநர் -– நடத்துநருக்கான பயிற்சி, உரிமம் (லைசன்ஸ்) பெற்ற பணியில் சேரும் முதல் பெண் ரம்யா. இதே போல் மற்ற மண்டலங்களில், ஓட்டுநர், நடத்துநர் பணிகளில் ஏதேனும் ஒன்றில் பணியில் பெண்கள் சேர உள்ளார்கள்’ என்றனர்.

 

 

 

 

- Advertisement -

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *