பெரியார் பிஞ்சுகளின் பெருமைமிகு பேரணி!

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

வி.சி.வில்வம்

ஆம்! ஒவ்வொன்றில் இருந்தும் ஒன்றைக் கற்றுக் கொள்வதைப் போல, இந்த மாநாட்டின் மூலமாகப் பெரியார் பிஞ்சுகளுக்கு என்றே தனி பேரணி நடத்தினால் எப்படி இருக்கும் என நினைக்கத் தோன்றுகிறது. அந்தக் காட்சியை நினைத்துப் பார்த்தாலே அழகாய் இருக்கிறது. குறிப்பாக அப்படியொரு கொள்கை சார்ந்த குழந்தைகள் பேரணி எங்கும் நடந்திருக்குமா எனவும் யோசிக்கத் தோன்றுகிறது!

குழந்தைகள் நடந்து வரக் கண்டோம்!

உலகத் தாய்மொழி தினமான பிப்ரவரி 21 ஆம் தேதி தஞ்சையில் நடைபெற்ற மாநாட்டுப் பேரணி பல விதங்களில் தனித்தன்மையுடன் இருந்தது. குடும்பம், குடும்பமாக நம்மவர்கள் நிகழ்ச்சிகளில் பங்கேற்பது இயல்பான ஒன்றுதான்! வழக்கத்திற்கு மாறாக அத்தனைக் குடும்ப உறுப்பினர்களும் இதில் கலந்து கொண்டனர். ஆம்! ஒரு வயது, இரண்டு வயது, அய்ந்து வயது, ஆறு வயது, ஏழு வயது என ஒவ்வொரு எண்ணிலும் குழந்தைகள் நடந்து வரக் கண்டோம்!

சில பிஞ்சுகளின் வயதையே கணிக்க முடியவில்லை. காரணம் அவர்களின் செயல்கள் நம்மை வியக்க வைத்ததோடு, நமக்கும் கொள்கை உணர்வைத் தூண்டினர். திராவிடர் கழக மகளிரணி, மகளிர் பாசறைப் பதாகைக்கு முன்னால், மெல்லிய பாதங்களுடன், மிடுக்காக வந்த அந்த இரண்டு பிஞ்சுகளைக் இங்கே படத்தில் பாருங்கள். கழகக் கொடியின் உயரத்தில் கால்வாசி இருப்பார்களா? ஒரு இடத்தில் நிறுத்தி, ஒளிப்படம் எடுக்க நமக்குச் சிரமமாய் போய்விட்டது. நிற்காமல் நடந்து கொண்டே இருக்கிறார்கள்.

சிறப்புக் கட்டுரை

வேட்டியை மடக்கிக் கட்டி,
கொடியைத் தூக்கிப் பிடித்து!

சற்று தூரம் சென்றால் ஒரு குட்டிச் சிறுவன் வேட்டியை மடக்கிக் கட்டி, கொடியைத் தூக்கிப் பிடித்து, குதூகல மனநிலையில் நடந்து செல்கிறான். இதுபோன்ற ஏராளமான சிறுவர், சிறுமியர்களின் “ராஜ்ஜியத்தை” அங்கே காண முடிந்தது. மழலையர் (எல்.கே.ஜி) வகுப்பு தொடங்கி அய்ந்தாம் வகுப்பு வரை என்று கூட சொல்ல முடியாது. பள்ளிக்கே செல்லாத பிஞ்சுகள் கூட பரபரப்பாய் வந்தனர், நடக்கப் பழகாத பாப்பாக்களோ அம்மாவின் மடியில் ஏறி அமர்ந்து கொண்டனர். ஒரு பெண்மணி மிக நிதானமாக நடந்து வந்தார். அவரின் இணையர் பாதுகாப்பாய் பக்கத்தில் வந்தார். விசாரிக்கையில் தெரிந்தது, அந்தப் பெண்மணி கருவுற்ற நிலையில் இருக்கிறார். ஆக… இந்த உலகத்தையே பார்க்காத அந்தப் பெரியார் பிஞ்சும் இந்தப் பேரணியில் வந்தது!

நம் குழந்தைகளுக்கு என்ன பயிற்சி கொடுத்தோம்? எந்தளவு மனநிலையை ஒருங்கிணைத்தோம்? எதுவும் இருக்காது. கருங்கடலைப் பார்த்ததும் அவர்களே நீந்திவிட்டார்கள். குழந்தைகளுக்குக் கடும் உடற்பயிற்சியைச் சீனாவில் கொடுப்பார்கள்; தமிழ்நாட்டுக் குழந்தைகளுக்கான மனப்பயிற்சியைப் பெரியார் கொள்கை கொடுக்கும்!

சிறப்புக் கட்டுரை

அய்யாவின் “குட்டீஸ்கள்!”

இதில் காணக் கிடைக்காத, விதவிதமான காட்சிகளைக் காண முடிந்தது. சற்றொப்ப பேரணி 4 கிலோமீட்டர் என்றார்கள். தொடங்கியது முதல் ஒரு இடத்தில் கூட, பெரியார் பிஞ்சுகள் ஓய்வெடுக்கவில்லை. அம்மா, அப்பாவோடு நடந்து வந்தவர்கள், பேரணியில் திடீரென உருவான நண்பர்களுடன் வந்தவர்கள், கொடி தூக்கி வந்தவர்கள், முழக்கமிட்டு வந்தவர்கள், நடையையே ஒரு நாட்டியமாக்கி அசைந்து, அசைந்து வந்தவர்கள், வேடிக்கைப் பார்த்துக் கொண்டே வந்தவர்கள், அமைதியாக ஆழ்ந்த யோசனையில் வந்தவர்கள் எனப் பேரணிக்கே பெரும் அழகூட்டிவிட்டனர் “அய்யாவின் குட்டீஸ்கள்!”.

இவர்கள் வயதையொத்த பிற குழந்தைகள் அன்றைய சனிக்கிழமையில் விளையாடிக் கொண்டும், தொலைக்காட்சி முன்பாகவும், கைப்பேசியை பார்த்துக் கொண்டும் இருந்திருப்பார்கள். ஆனால் இந்தக் கருஞ்சட்டைப் பிஞ்சுகள் வருங்காலத் தமிழ்நாட்டிற்காக மதிய உணவு நேரத்தில், சூரிய வெப்பத்தில் 4 கிலோமீட்டர் தூரம் நடந்து வருகிறார்கள் என்றால், இதுபோன்ற குழந்தைகள் அமைப்பு இந்த உலகத்திலேயே எங்கும் உண்டா? பொதுவாக நமது பேரணிகளே சிறப்பானவை தான். நெய்ப் பொங்கல் யாருக்குத்தான் பிடிக்காது. ஆனால் அதிலுள்ள முந்திரிக்குக் கூடுதல் முக்கியத்துவம் அல்லவா! அதுபோலத்தான் நம் பிஞ்சுகளின் அணிவகுப்பும் இருந்தது!

சிறப்புக் கட்டுரை

அடி 50%  இடி 50%

அதேபோல இந்தப் பிஞ்சுகளின் அக்காக்கள் அடித்த கோலாட்டத்தில் மயங்காதவர்கள் யாருமுண்டோ! எளிய உடையில், ஏற்றமிறக்க நடையில், இசைத் துள்ளலுடன், தஞ்சை மக்களைக் கிறுகிறுக்க வைத்தனர் இந்தக் கிராமத்துப் பிள்ளைகள்! அதேபோல இவர்களின் அண்ணன்மார்கள், “அடி 50 %  இடி 50 % எனப் பறையில் எழுதி வைத்து, எதிரிகளின் கொட்டத்தை இனமுரசு கொட்டி அடித்து விரட்டினர்.

திராவிடர் கழக மகளிரணி, மகளிர் பாசறை, இளைஞரணி, மாணவர் கழகம் ஆகியவற்றின் ஒருமித்த பதாகையைக் கல்லூரி மாணவிகள் ஏந்தி வந்தனர். அவர்களே ஒருவர் மாற்றி ஒருவர் முழக்கமிட்டு வந்தனர். நமது பேரணியில் ஒரு சிறப்பு இருக்கிறது. யார் விண்ணதிர முழக்கம் எழுப்பி, உச்சரிப்பில் அக்கறைச் செலுத்தி, உடல்மொழியில் ஈர்ப்பை உருவாக்குகிறார்களோ, அந்த இடத்தில் கூட்டமும் அதிகம் இருக்கும்; கொள்கை முழக்கமும் உயர்ந்து அதிரும்!

தொடரும் “சல்யூட்”

அதேபோல பதினைந்து சிலம்பாட்ட சிறுமிகளும் சிலிர்க்க வைத்தனர். “வருகுது பார் வருகுது பார், கருஞ்சிறுத்தைப் பட்டாளம்” என்கிற வரிகளை எப்போது கேட்டாலும் உடலில் ஓடும் இரத்தம் மேலும், கீழும் வேகமாய் பாய்கிறது; மெல்லிய நரம்புகள் கூட, உணர்களைப் பெற்று நம்மை உற்சாகம் கொள்ள செய்கிறது. கருஞ்சட்டைப் படையின் இராணுவ அணிவகுப்பான “பெரியார் சமூகக் காப்பு அணி” துல்லியமாய் தம் பணியைச் செய்தது. அதிலும் ஆசிரியரைச் சந்திக்கும் இடங்களில் அவர்கள் அடிக்கும் “சல்யூட்” மிகவும் ஈர்க்கத்தக்கது. அண்மையில் செங்கல்பட்டு மறைமலை நகரில், 2026 ஆம் ஆண்டிலும் தமிழ்நாட்டின் முதலமைச்சராக வரக்கூடிய முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் நம் இயக்கத்திற்கு ஒரு “சல்யூட்” அடித்தார். தமிழர் தலைவர், ஆசிரியர் கி.வீரமணி அவர்களோ, பெரியார் திடலுக்கு வந்த முதலமைச்சருக்கு இரண்டு”சல்யூட்” வழங்கினார். அதை நினைவு செய்தார்கள் பெரியார் சமூகக் காப்பு அணியினர்!

சிறப்புக் கட்டுரை

பல்சுவை மிகுந்த மாநாடு!

இந்த மாநாட்டிற்கு ஒவ்வொரு அணியினருமே போட்டி, போட்டு வந்திருந்தனர். அதேபோல பெரியார் வேடமிட்டு வந்த பிஞ்சுகளும், சிறுவர்களும் இந்த முறை அதிகம். 75 வயதிற்கு மேற்பட்ட பெரியார் பெருந்தொண்டர்களும் இந்த மாநாட்டில் அதிகம் காணப்பட்டனர். 5 வயது குழந்தையும், 75 வயது பாட்டியும் வேகாத, வெயிலில் நடந்து வருகிறார்கள் என்றால், அதுதான் இந்த இயக்கத்தின் வரலாறு. அந்த வரலாறு படைத்த சாதனைதான் “இந்தத் தமிழ்நாடு!”

இப்படியான பல்சுவை மிகுந்த இந்த மாநாடு, ஒரு இடத்தை முழுமையாகக் கடக்க 15 நிமிடங்கள் எடுத்துக் கொண்டது. மாலை 5.30 மணிக்குப் பேரணியைக் கண்டு களிக்க ஆசிரியர் ஓர் இடத்தில் காத்திருந்தார். தூரத்தில் வந்த பேரணியை, தொலைநோக்கி கருவி போல, இரண்டு கைகளையும் புருவத்தின் மேல் வைத்துக் கவனித்து வந்தார். தூரத்தில் நின்று கேட்ட போது கோலாட்டக் குச்சிகளின் மெல்லிய சத்தமும், பறை இசையின் அதிரடி சத்தமும், விண்ணதிரும் முழக்கங்களின் ஒலியும் இணைந்து கலவையாகக் காதில் விழுந்தது.

கருப்புச் சட்டைகளின் குடும்ப அரசியல்!

ஊர்ந்து வந்த பேரணியினர் ஆசிரியரின் காத்திருப்பு மேடைக்கு அருகில் வந்ததும் ஒரு ஆட்டம் காட்டிச் சென்றனர். அதில் கோலாட்டச் சிறுமிகள் 4 கிலோ மீட்டரும் அசராமல் அடித்ததோடு, ஆசிரியர் மேடைக்கு எதிரில் ஒரு “ரவுண்ட்” கட்டி ஆட்டம் போட்டனர். சுற்றி நின்ற நூற்றுக்கணக்கான மக்களும் ரசித்து மகிழ்ந்தனர். அதேபோல ஆசிரியரைப் பார்த்ததும் பறை அடித்தவர்களுக்கு வந்த  உற்சாகத்திற்கு, இடி முழக்கத்தை ஒரே இடத்தில் இறக்கி வைத்துச் சென்றனர்.

இப்படியாக வந்த அந்தப் பேரணியில்  கருப்புப் பேண்ட், கருப்புச் சட்டை அணிந்து, கொடி பிடித்து வந்த ஒரு  சிறுவன் ஆசிரியரைப் பார்த்ததும், குழந்தைச் சிரிப்பு ஒன்றைச் சிரிக்க, ஆசிரியர் மேடைக்கே அழைத்துவிட்டார். இப்படியான இந்த மாநாட்டுப் பேரணி 18 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள், சிறுவர், சிறுமியர், இளைஞர்கள் போன்றாரால் நிரம்பி வழிந்தது. எங்கள் கொள்கைக் குடும்பத்தின் குழந்தைகளுக்குக் கூட கடவுள் நம்பிக்கை இல்லை என்பதை எங்களால் உரக்கச் சொல்ல முடியும்; அந்தக் கடவுளும், இந்தப் பிஞ்சுகளின் கருப்புச் சட்டைக்கு முன்னால் காணாமல் போய்விடும்!

தாத்தா அணிந்த கருப்புச் சட்டையை அப்பா அணிந்து, அதே நிறத்திலான சட்டையை மகன் அணிந்து, பின்னர் பெயரன் அணிந்து… தொட்டுத் தொடரும் கருப்புப் பாரம்பரியம் எங்களுடையது! எங்களின் குடும்ப அரசியலும் இதுதான்! எனவே தான்  சொல்கிறோம், திராவிடம் வெல்லும்! அதை வரலாறு சொல்லும்!!

- Advertisement -

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *