நாகர்கோவில், பிப்.26 நாகர்கோவில் கன்கார்டியா பள்ளி மைதானத்தில் நடைபெற்ற அரசு விழாவில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு ரூ.1,789 கோடி மதிப்பிலான பல்வேறு புதிய திட்டப்பணிகளைத் தொடங்கி வைத்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்த விழாவில் மாவட்டத்தின் தொழில் வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில், ரூ.30 கோடி மதிப்பீட்டில் அமையவுள்ள மினி டைடல் பூங்காவிற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். மேலும், மாற்றுத் திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதமாக அவர்களுக்கு மூன்று சக்கர வாகனங்களையும் அவர் வழங்கி சிறப்புரையாற்றினார்.
முதலமைச்சரின் முக்கிய அறிவிப்புகள்
அப்போது அவர் பேசியதாவது: கன்னியாகுமரியில் குடிநீர்மற்றும் கழிவுநீர் மேலாண்மை: ரூ.28.20 கோடி மதிப்பீட்டில் புதிய குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும். வளையாற்றிலிருந்து கன்னியாகுமரி நகராட்சிக்கு குடிநீர் வழங்க புதிய திட்டம் தீட்டப்படும். ரூ.250 கோடி மதிப்பீட்டில் நவீன கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும். வரலாற்றுச் சிறப்புமிக்க ஏவிஎம் கால்வாய் ரூ.1.20 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்படும். முளகுமூடு கிறிஸ்தவ கோயில் அதன் பழமை மாறாமல் ரூ.2 கோடி மதிப்பீட்டில் சீரமைக்கப்படும்.
போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், களியக்காவிளை முதல் கன்னியாகுமரி வரையிலான சாலை ரூ.9 கோடி மதிப்பீட்டில் அகலப்படுத்தப்படும்.
இந்தத் திட்டங்கள் அனைத்தும் குமரி மாவட்டத்தின் உட்கட்டமைப்பை மேம்படுத்தி, பொதுமக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும்’’ இவ்வாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது உரையில் குறிப்பிட்டார்.
