புதுச்சேரி, பிப். 20- புதுச்சேரி விடுதலை வாசகர் வட்டச் செயலாளர் ஆ.சிவராசன்- வீ.விமலா இணையரின் இரண்டாவது மகள் சி.தமிழ்பிரபா, புதுச்சேரி, பவழ நகர் செ.சீனிவாசன்- சீ.குணசுந்தரி இணையரின் மகன் சீ.அரவிந், இணையரின் இணையேற்பு விழா நேற்று (19.02.2026) காலை 8.30 மணி யளவில் புதுச்சேரி வள்ளலார் சாலை பிரின்ஸ் மாகாலில் சிறப்பாக நடைபெற்றது.
முன்னதாக மொழி வாழ்த் துடன் தொடங்கிய விழாவில் மாவட்ட கழகத் தலைவர் வே.அன்பரசன் வரவேற்புரை ஆற்றினார். புதுச்சேரி மாநிலத் கழகத் தலைவர் சிவ.வீரமணி முன்னிலை ஏற்று மணமக்களின் பெற்றோர்களை அறிமுகம் செய்து வைத்து மணமக்களை வாழ்த்தினார். சுயமரியாதைத் திருமணத்தின் நன்மைகள் பற்றியும், அது கடந்து வந்த பாதையைப் பற்றியும் எடுத்துக் கூறிய அவர் சுயமரியாதை வாழ்வே சுகவாழ்வு அதற்கு பெரியார் தொண்டர்களாகிய மேடையில் இருக்கும் நாங்களே எடுத்துக் காட்டு என்றார்.
கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் மணமக்களுக்கு இணையேற்பு உறுதி மொழியைக் கூறிட, அதனை அவர்கள் ஏற்றுக் கொண்டனர், இருவரும் மலர் மாலை மற்றும் பொன் அணி மாற்றிக் கொண்டனர்.
மணமக்கள் வாழ்க! வாழ்க!! என்ற அனைவரின் வாழ்த்து முழக்கத்துடன் எளிமையான முறையில் ஜாதி மறுப்பு, சுயமரியாதைத் திருமணம் நடந்தேறியது.
இவ் இணையேற்பு விழாவில் கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் பேசுகையில், “இதனைப் போன்ற திருமணத்தை ஞாயிற்றுக்கிழமை இராகு காலத்தில் செய்து கொண்ட தமிழர் தலைவர் ஆசிரியர் அய்யாவும், துரை.சந்திரசேகரன் ஆகிய நானும் நல்ல வண்ணம் வாழ்ந்து வருகின்றோம். எனவே இதனைப் போன்ற திருமணம் செய்ய யாரும் பயப்பட வேண்டியது இல்லை” என்றார்.
“அந்த காலத்தில் நடைபெற்ற மூடத்தனம் நிறைந்த அடிமைத் தனமான திருமண முறையின் சீர்கேடுகள் பற்றியும், அதனை அகற்றுவதற்காக தந்தை பெரியார் உழைத்த உழைப்பு கடந்துவந்த பாதை பற்றியும்” எடுத்து கூறினார்.
மேலும், “ஆ.சிவராசன் அரசு ஊழியராக இருந்தாலும் கடந்த 33 ஆண்டுகளுக்கு முன்பு என் தலைமையில் திருமணம் செய்து கொண்டார். இன்று தன்னுடைய மகளின் திருமணத்தையும் என் தலைமையில் நடத்துகிறார். தொடர்ந்து ஒரே கொள்கை, ஒரே தலைமை என கொண்ட கொள்கையில் உறுதியாக இருக்கும் ஆ.சிவராசன் அனைவருக்கும் ஒரு முன் மாதிரியாக உள்ளார்” எனக் கூறி அவரை வெகுவாகப் பாராட்டி உரையாற்றினார்.
நிகழ்ச்சியை விடுதலை வாசகர் வட்டத் தலைவர் கோ.மு.தமிழ்ச்செல்வன் தொகுத்தளித்தார்
நிறைவாக மணமகனின் தந்தை செ.சீனுவாசன் நன்றி கூறினார்.
வந்திருந்த அனைவருக்கும் ஆ.சிவராசன் மற்றும் குடும்பத் தினர் ஆ.கலைநிதி, சி.பிரபாவதி, சி.தனுபிரபா, ஆகியோர் சால்வை அணிவித்து சிறப்பு செய்தனர்.
விருந்துண்ட பிறகு உறவி னர்கள், நண்பர்கள், கொள்கைத் தோழர்கள், அரசு ஊழியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் திருமணத் தாம்பூலப் பையுடன் சேர்த்து சிந்தியுங்கள்! செயல்படுங்கள்!! என்ற தலைப்பில் “பெண் ஏன் அடிமையானாள்?” என்ற புத்தகம் வழங்கப்பட்டது.
