தி.மு.க. கூட்டணி நாளும் வலுப்பெற்று வருகிறது – தே.மு.தி.க.வின் முடிவு பாராட்டுக்குரியது!
*காங்கிரசின் பொறுப்புமிக்க தலைவர்களும் சரியான முடிவை எடுப்பார்கள்!
* தி.மு.க. தலைமையிலான கூட்டணி, கொள்கைக் கூட்டணி!
* தி.மு.க. ஆட்சியின் சாதனைகளும், அறிவிப்புகளும் கூடுதல் பலமே!
* எதிரணியில் உள்ளவர்களிடையே குழப்பமே நிலவுகிறது!
தி.மு.க. தலைமையிலான கூட்டணி அரசு கொள்கைக் கூட்டணியாக நாளும் வலுப் பெற்று வருகிறது. ‘திராவிட மாடல்’ அரசின் சாதனைகளும், அறிவிப்புகளும் கூடுதல் பலமே! மதியூகத்தோடு செயல்பட்டு வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ‘திராவிட மாடல்’ அரசே தமிழ்நாட்டில் மீண்டும் மலர வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை வருமாறு:
நான்கு தேர்தல்களுக்குமேல்,
வெற்றி வாகை சூடிவரும் கூட்டணி!
திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மானமிகு மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களது சீரிய தலைமை யில், கடந்த சுமார் 10 ஆண்டுகளாக – தி.மு.க. எதிர்க்கட்சி யாக சட்டமன்றத்தில் இருந்த காலத்திலேயே, மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியாகவே அமைந்து, நான்கு தேர்தல்களுக்குமேல், வெற்றி வாகை சூடிவரும் கூட்டணியாகத் தொடர்ந்து, தற்போது சிறப்பாக சாதனை சரித்திர ஆட்சியை நடத்தி வருகிறது! ‘திராவிட மாடல்’ ஆட்சி – திக்கெட்டும் பரவுகிறது அதன் புகழ் என்ற சிறப்புடன், நடைபெற்று வருகிறது!
ஊடகங்கள், சமூக வலைத்தளங்கள், பா.ஜ.க., அ.தி.மு.க. போன்ற கட்சிகள், தி.மு.க. கூட்டணிக் கட்சிகளைப்பற்றி தங்களது கற்பனைச் செய்திகளைப் பரப்பி, எப்படியாவது இந்தக் கூட்டணியைச் சிதைத்து, தாங்கள் விரும்பும் சில வேரற்ற புதிய கவர்ச்சி அரசியல் பக்கம் ஈர்க்கச் செய்த முயற்சிகள் அனைத்தும் ‘பொய்யாய், பழங்கதையாய்’ கனவாக இடிந்து வீழ்ந்து விட்டன!
‘சீட்டு’களுக்கான கூட்டணியல்ல –
கொள்கைக்கான கூட்டணி!
காரணம், இந்தத் தி.மு.க. தலைமையிலான கூட்டணி, ‘சீட்டு’களுக்கான கூட்டணியாக உரு வெடுக்காமல், கொள்கைக்கான கூட்டணியாகவே சரியான அடிக்கட்டுமானத்துடனேயே உருவாக்கப்பட்ட கூட்டணி என்பதே!
நேற்று (19.2.2026) தே.மு.தி.க.வின் பொதுச்செய லாளர் திருமதி. பிரேமலதா விஜயகாந்த் அவர்கள், அதன் முக்கிய பொறுப்பாளரான திரு.சுதீஷ் உள்ளிட்ட, அக்கட்சியின் முக்கிய பொறுப்பாளர்களையும் அழைத்துச் சென்று, அண்ணா அறிவாலயத்தில், தி.மு.க. கூட்டணித் தலைவரான மு.க.ஸ்டாலின் அவர்களைச் சந்தித்து, வரும் 2026 – சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் தமது கட்சியை இணைத்துக் கொண்டு, அடுத்து நடைபெறவிருக்கும் ஜனநாயகக் காப்புப் போராட்டத்தில், தங்களது பங்களிப்பும் இருக்கும் என்பதை நாட்டுக்கே பறைசாற்றியுள்ளனர்!
இது 10 ஆண்டுகளுக்கு முன்பே கலைஞர், தி.மு.க. தலைவராகவும்,நண்பர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் தே.மு.தி.க. தலைவராகவும் இருந்தபோதே நடைபெற்றிருக்க வேண்டிய ஒன்று; எப்படியோ அப்போது தவறினாலும்கூட, இப்போது நடை பெற்றுள்ளது என்பது வரவேற்கத்தக்கது!
சமூகநீதி – பாலியல் நீதிக்கு
ஒரு நல்ல எடுத்துக்காட்டு!
கேப்டன் விஜயகாந்த் மறைவிற்குப் பின், அக்கட்சி யினைத் தலைமையேற்று நடத்திவருபவர் ஒரு மகளிர் என்பதும், அக்கட்சி பல சோதனைகளைத் தாண்டி, வீறுநடை போடுவதும், சமூகநீதி – பாலியல் நீதிக்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு!
சரியான முடிவை எடுத்து, ஓர் அரசியல் திருப்பம் ஏற்பட, தனது பங்களிப்பை இப்போது அவர் செய்துள்ளார்.
கலைஞர் முன்பு கூறிய, ‘பழம் நழுவி பாலில் விழ இருக்கிறது’ என்ற விழைவு, இப்போது அவரது அரசியல் வாரிசான முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களது ‘அரசியல் மதியூகத்தால்’ செயல்வடிவம் பெற்றுள்ளது!
அவர்களுக்கான ராஜ்ஜியம் அல்ல;
வெறும் பூஜ்யம்தான்!
எத்தனை முறை பா.ஜ.க. தலைவர்கள் தமிழ்நாட்டிற்கு ‘அதிகார அரசியல் படையெடுப்பை’ நடத்தினாலும், பெறவிருப்பது அவர்களுக்கான ராஜ்ஜியம் அல்ல; வெறும் பூஜ்யம்தான் என்பதை பெரியார் மண்ணான சமூகநீதி, சுயமரியாதை மண் உலகுக்கே உயர்த்தி, உணர்த்தியிருக்கிறது!
தி.மு.க. தலைமையிலான இந்தியா கூட்டணியாகிய மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் பலம் நாளும் கூடுதலாகி, வலுப்பெற்றுள்ளது – வளர்பிறை போல்!
ஒரு பரிதாப அரசியல் அங்கே!
மோடி, அமித்ஷா ஆகியோர் தமிழ்நாட்டில் உருவாக்கியுள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) தேர்தல் களத்தில் நிற்கிறது.
அ.தி.மு.க. பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமிதான் அதன் தலைவர் என்பதைக்கூட, அழுத்தந்திருத்தமாக அவர்கள் கூற முடியாத ஒரு பரிதாப அரசியல் அங்கே!
வடபுலத்துப் பா.ஜ.க. தலைவர்கள்தான் அரசியல் கூட்டணிப் பேச்சுவார்த்தைகளை நடத்திடுகிறார்கள்!
சிறுபிள்ளையின் கையில் மூக்கணாங்கயிற்றைக் கொடுத்து, பின் உள்ளவர்கள் பிடித்து வண்டி ஓட்டும் நிலைதான் அங்கு உள்ளது!
சென்ற முறை இருந்த கட்சிகள் இப்போது இல்லாத நிலை மட்டுமல்ல; சென்றவர்களும் உடைபட்ட சிதறு தேங்காயைப் போன்றே சென்றுள்ள நிலை!
பாறைமீது கட்டப்பட்ட கோட்டை போல
கம்பீரமாக நிற்கிறது தி.மு.க. கூட்டணி!
தி.மு.க. கூட்டணிக் கட்சிகளின் எண்ணிக்கை மட்டுமல்ல, உண்மையிலேயே பயனடைந்த மக்கள் – குறிப்பாக, மகளிர், இளைஞர்கள், மாணவர்களின் பேராதரவு புதிய கூடுதல் பலத்தை நாளும் தந்து, பாறை மீது கட்டப்பட்ட கோட்டை போல அக்கூட்டணி கம்பீரமாக நிற்கிறது.
ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. வழி நடத்தும் அ.தி.மு.க. கூட்டணிக் கட்சிகள் பலம் தேய்ந்துள்ளன.
‘‘தோல்வியைப் பரிசாக’’ ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. – அ.தி.மு.க. கூட்டணிக்கு அச்சாரம்போல் தந்திருக்கிறார்!
எதிர்க்கட்சிகளின் பல சூழ்ச்சிகளை முன்கூட்டியே அறிந்து, அந்தந்த ஆயுதங்களை மிக லாவகமாகப் பிடுங்கி விட்டு, களம் காணும் முன்னரே, ‘ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. – அ.தி.மு.க. கூட்டணிக்கு அச்சாரம்போல் ‘தோல்வியைப் பரிசாக’’ தரும், தி.மு.க. கூட்டணித் தலைவர் ஒவ்வொரு நாளும் – சிறந்த ‘அரசியல் மதியூகி’ (Sagacious Statesman) என்று அரசியல் விற்பன்னர்களால் அழைக்கப்படும் வகையில் நாளும் உயருகிறார்!
- கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை, உரியவர்களின் கைகளுக்குச் சேராமல் தடுக்கத் திட்டமிட்டதைத் தனது ஆற்றல்மிகு ஆளுமைத் திறத்தால் அறிந்து, மூன்று மாதங்களுக்கான தொகை ரூ.3000 + கோடைப் பயனாக ரூ.2000 ஆக மொத்தம் ரூ.5000–த்தை மகளிர் கண் விழித்தெழுமுன் அவர்களுடைய வங்கிக் கணக்கில் அளித்து, காலைப் பொழுதிலேயே இன்ப அதிர்ச்சியைத் தந்தார்!
ஒவ்வொரு குடிமகனின் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் செலுத்தப்படும் என்று சொன்ன மோடியின் தேர்தல் வாக்குறுதி, வெறும் ‘ஜூம்லா’வாகிய நிலை யையும், எதிர்பாராமலே வங்கியில் ரூ.5,000 வந்து விழுந்ததையும் ஒப்பிட்டுப் பாருங்கள்!
‘திராவிட மாடல்’ ஆட்சியின் சிறப்பு – தானே உங்களுக்குப் புரியும்!
நமது முதலமைச்சரின்
கூர்மையான அணுகுமுறையால்!
- அரசு ஊழியர்களின் பழைய ஓய்வூதியத் திட்டப் பிரச்சினையை வைத்து, தாங்கள் குளிர் காய்ந்து, குறுக்கு வழியில் தாங்கள் ஆட்சிக்கு வர, அது வாய்ப்பளிக்கும் என்ற எதிர்க்கட்சிகளின் கனவு, வெறும் ‘புஸ்வாணமாக்கப்பட்டது’ – நமது முதலமைச்சரின் கூர்மையான அணுகுமுறையால்!
- அதுபோலவே, கட்சிகளைப் பெருக்கி, தி.மு.க. கூட்டணி தனி வரலாறு படைக்கிறது. ஆனால், எதிர ணியிலோ, பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு வருவதற்குக் கூட பல தேதிகளை மாற்றிக் கொண்டே இருக்கிறார்.
அச்சுறுத்தலைக் கண்டு அஞ்சாத ஆளுமை, தமிழ்நாட்டைத் ‘தலைகுனிய விடமாட்டேன்’ என்று தலைநிமிர்ந்து சொல்லும் ஒரு முதலமைச்சரை வழிகாட்டியாகக் கொண்ட கூட்டணி, மேலும் விரிவடைந்த வண்ணம் உள்ளது (நண்பர் கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம், ஏற்கெனவே தி.மு.க. கூட்டணியில் இணைந்துவிட்டது).
தே.மு.தி.க. பொதுச்செயலாளருக்கு
நமது பாராட்டுகள்!
சரியான கூட்டணி எனத் தேர்வு செய்த தே.மு.தி.க. பொதுச்செயலாளர் திருமதி பிரேமலதா அவர்களுக்கும், அவரது கட்சிப் பொறுப்பாளர்களுக்கும் பாராட்டுகள்!
காங்கிரசை வைத்து, சில ஊடகங்கள் பொய்யான செய்திகளைக் கருவியாக்கிடும் நிலையில், அதன் பொறுப்புமிகு தலைவர்கள் சிறந்த முடிவை எடுப்பார்கள் என்றே எதிர்பார்க்கிறோம்.
ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க.வின் பாசிசத்தைத் தடுக்கின்ற வல்லமை – ஆற்றல் – அஞ்சாமை – கொள்கைப்பூர்வ மாக – ‘திராவிட மாடல்’ ஆட்சியின் நாயகர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கே உண்டு என்பதால், அங்குள்ள முக்கியத் தலைவர்கள் அதனை உணர்ந்து, தங்களது சகோதரப் பாசத்தை மேலும் வலுவாக்கிக் கொள்வது காலத்தின் கட்டாயம் – லட்சியப் பயணத்தின் இலக்காகவும் ஆகவேண்டும். அதுவே நல்ல முடிவு!
நாட்டை பாசிசப் பாதையில் செல்லாமல் தடுக்க அது ஒன்றே வழியாகும்!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
20.2.2026
