இந்திய ஒன்றியம் முழுமைக்கும் தேவைப்படும் திராவிட மாடல்
சி.ஆர்.பி.எப். எனப்படும் ஒன்றிய காவல் துறையில் 10,000 பணியிடங்களில் 596 தமிழ் நாட்டிற்கானவை. இவைகளை நிரப்பிடுவ தற்கான தேர்வு ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் மட்டுமே நடத்தப்படும் என்ற அறிவிப்பு வெளியானதுமே தமிழ்நாட்டில் எதிர்ப்பு கிளம்பியது. பிற மாநில முதலமைச்சர்கள் வாளாயிருந்த நிலையில் சமூக நீதிக்கான திராவிட மாடல் ஆட்சி நடத்தும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். ‘இது சமூக நீதிக்கு எதிரான தமிழர் விரோதச் செயல்’ என்று தன் கண்டனத்தைத் தெரிவித்ததோடு நில்லாமல் ‘ தமிழிலும் இத் தேர்வை எழுத அனுமதிக்க வேண்டும்’ என ஒன்றிய அரசுக்குக் கடிதம் எழுதினார்.
‘இதுவரை மாநில மொழிகளில் இத்தேர்வை நடத்தியதில்லை’ என்று ஆணவமாக அறிக்கை விட்டது சி.ஆர்.பி.எப்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இதற்காக நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவித்தார். தமிழ்நாட்டின் கடுமை யான எதிர்ப்பிற்குப் பணிந்த ஒன்றிய உள்துறை அமைச்சகம் ‘தமிழ் உள்ளிட்ட 13 மாநில மொழிகளில் இத் தேர்வினை எழுதலாம்’ என்று 15.4.2023 அன்று அறிவிக்கிறது.
இதற்கு முன் பல நிகழ்வுகளில் இப்படிப் பணிந்த ஒன்றிய அரசுக்கும், அதன் ஏவலரான ஆளுநருக்கும் – தன் செயல்பாடுகள் மூலம் இந்திய ஒன்றியம் முழுமைக்குமானத் தேவை ‘திராவிட மாடல்’ ஆட்சிதான் என்பதை ‘முதலமைச்சர் கட்கெல்லாம் முதலமைச்சராக’ உயர்ந்து நிற்கும் சமூகநீதி காக்கும் மாண்பாளர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் உறுதி செய்துள்ளார்.
ஞான.வள்ளுவன்,
வைத்தீசுவரன்கோயில்.