👉திராவிடர் கழகம் அரசியல் கட்சியல்ல; ஆனாலும், இவ்வளவு இளைஞர்கள் கூடியிருக்கிறீர்கள் மகிழ்ச்சி!
👉காற்று வீசும் திசையில் படகுகள் செல்கின்றன; எல்லையைக் கடந்து வந்துவிட்டார்கள் என்று கைது செய்யலாமா?
👉மீனவர்களை விடுதலை செய்தாலும், படகுகளை விடுவிக்காதது ஏன், ஏன்?
👉 அருமை மீனவக் குடும்பத்தினரே, மீன்பிடி தொழில் உங்கள் தலைமுறையோடு முடிவுக்கு வரட்டும்!
உங்கள் பிள்ளைகள் அய்.ஏ.எஸ்.களாக, டாக்டர்களாக, நீதிபதிகளாக வரவேண்டாமா? அதற்குத்தான் நாங்கள் பாடுபடுகிறோம்!
ஜெகதாப்பட்டினம், ஏப்.16 தண்ணீரிலும், கண்ணீரிலும் மிதக்கும் மீனவர்களின் மீன்பிடி தொழில் உங்கள் தலைமுறையோடு முடிவுக்கு வரவேண்டும்; உங்கள் பிள்ளைகள் அய்.ஏ.எஸ்., அதிகாரிகளாக, டாக்டர்களாக, நீதிபதிகளாக வரவேண்டும். அதற்காகத்தான் நாங்கள் பாடுபடுகிறோம் என்றார் மாநாட்டுக்குத் தலைமை வகித்த திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
மீனவர் மாநாடு
கடந்த 14.4.2023 அன்று மாலை ஜெகதாப்பட்டினத்தில் திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெற்ற மீனவர் நலப் பாதுகாப்பு மாநாட்டில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமை யுரையாற்றினார்.
அவரது சிறப்புரை வருமாறு:
எந்த நோக்கத்திற்காக இந்த மாநாடு கூட்டப்பட்டதோ, அந்த நோக்கத்தை தெளிவுபடுத்தினார்கள்!
ஒரு நீண்ட உரையாற்றவேண்டும் என்ற அவசிய மில்லை. மனம் நிறைந்து இருக்கிறது இன்றைக்கு; அமைச்சர்கள் மூவருடைய உரை. அதோடு நம்முடைய கவுதமன் அவர்களுடைய உரை. நம்முடைய நவாஸ்கனி போன்ற அத்துணை பேரும் எந்த நோக்கத்திற்காக இந்த மாநாடு கூட்டப்பட்டதோ, அந்த நோக்கத்தை அவர்கள் தெளிவுபடுத்தினார்கள்.
ஒருபோதும் கருஞ்சட்டைப் பட்டாளம் இடந்தராது!
நம்முடைய மீனவ சமுதாய சகோதரர்களுக்குப் போதிய பாதுகாப்பு வேண்டும். இது ஒரு வாழ்வாதாரப் பிரச்சினை; இதை அரசியல் பார்வையோடு பார்க்கக் கூடாது. அரசியல் குறுக்கே வரும் – ஏனென்றால், மீனவர்களைப் பகடைக்காய்களாகப் பயன்படுத்தலாம் என்று நினைக்கிறார்கள், அதற்கு ஒருபோதும் கருஞ்சட்டைப் பட்டாளம் இடந்தராது என்பதற்கு அடை யாளம்தான் இந்த மாநாடு.
ஏமாறாதே, ஏமாற்றாதே என்கிற இந்த இரண்டு சொற்களும் மிகவும் முக்கியம்.
நீங்கள் ஏமாறவும் நாங்கள் விடமாட்டோம்; உங்களை மற்றவர்கள் ஏமாற்றவும் நாங்கள் விடமாட்டோம். அதற்கு உங்களுக்குத் தெரிந்த ஒரு இளைஞர் பட்டாளம் இருக்கிறது.
இந்த மாநாட்டைக் கூட்டியது யார் என்றால், இளைஞர்கள்தான். இந்த மாநாட்டிற்காக பெரிய பெரிய வசதி வாய்ப்பு படைத்தவர்களிடம் சென்று பெரிய அளவில் நன்கொடை வாங்கவில்லை. எல்லா ஊர்களிலும் கடைவீதிகளில் வசூல் செய்துதான் இந்த மாநாட்டை நடத்துகிறார்கள்.
இந்த மாநாட்டை சிறப்பாக நடத்தியிருக்கிறார்கள். தோழர் குமார் திருமணத்தின் போதுதான் இந்த மாநாட்டை இங்கே நடத்தவேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.
திராவிடர் கழகத்தில் குறைந்தபட்சம் ஒரு பஞ்சாயத்து உறுப்பினர் பதவிகூட கிடைக்காது!
திராவிடர் கழகத்தை நோக்கி இவ்வளவு இளைஞர் கள் வந்திருக்கிறார்கள் என்றால், எல்லோருக்குமே அதிசயமாக இருக்கும். ஏனென்று கேட்டால், இந்த இயக்கம் ஓர் அரசியல் கட்சி அல்ல. குறைந்தபட்சம் ஒரு பஞ்சாயத்து உறுப்பினர் பதவிகூட கிடைக்காது.
சிறைச்சாலைக்கு அழைத்துப் போகின்ற வாய்ப்புதான் கிடைக்கும்!
அரசியல் கட்சிகளில் சேர்ந்தால், அவர்கள் விரும்பு கின்ற பதவிகள் கிடைக்கலாம். ஆனால், எங்களோடு வந்தால், பெரியார் இயக்கத்திற்கு வந்தால், சட்டமன்றத் திற்கு அனுப்புகின்ற வாய்ப்பு இல்லை. சிறைச்சாலைக்கு அழைத்துப் போகின்ற வாய்ப்புதான் கிடைக்கும். நல்ல வாய்ப்பாக இங்கே அமைச்சரும் பக்கத்தில் இருக்கிறார். ஏனென்றால், அவர் நிறைய சீர்திருத்தங்களை செய்து கொண்டிருக்கிறார், சிறைச்சாலைகளில். அந்த சீர்திருத்தம் நமக்கு முக்கியமாகப் பயன்படக்கூடியது; ஏனென்றால், அது ஒன்றுதான் பொது இடம்; மாறி மாறி நாம் எல்லோரும் போகக்கூடிய இடம்.
‘‘இறைச்சி சாப்பிடுவதை நிறுத்திவிட்டு, மீன் சாப்பிடுங்கள்!’’
இங்கே தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நான் கடலூரில் பிறந்தவன். ஆனால், கடலூரிலேயே வாழக் கூடியவர்கள் மீனவச் சகோதரர்கள்; உங்களுடைய வாழ்வு என்பது மற்றவர்களுக்காக. ஏனென்றால், மருத்துவத் துறையில் என்ன சொல்கிறார்கள்? ஓர் இதய நோயாளிக்கு சிகிச்சை அளித்த பிறகு, உணவில் மிகவும் விழிப்பாக இருக்கவேண்டும் என்று சொல்லிவிட்டு, கடைசியாக சொல்கின்ற மிக முக்கியமான அறிவுரை என்னவென்றால், ‘‘இறைச்சி சாப்பிடுவதை நிறுத்திவிட்டு, மீன் சாப்பிடுங்கள்” என்று சொல்வார்கள்.
அந்த மீனை நாம் சாப்பிட்டு உயிர் வாழ்வதற்காக, தங்களுடைய வாழ்க்கையை இழக்கக்கூடியவர்கள்தான் மீனவச் சகோதரர்கள்.
அந்தச் சகோதரர்களுடைய உரிமைகள் பாதுகாக்கப் படவேண்டாமா?
அந்தச் சகோதரர்கள் கதறுகிறார்களோ, அந்தக் காட்சியை தொலைக்காட்சியில் பார்க்கின்றபொழுது எங்கள் நெஞ்சமெல்லாம் வெடித்துவிடுவதுபோல இருக் கிறது.
இங்கே சொன்னாரே, அவரும் சட்டம் படித்தவர்; நானும் சட்டம் படித்தவன். ஒரு நாட்டினுடைய கடற் பரப்பில், அவர்களுடைய எல்லை, மற்ற பொது எல்லை என்பதற்கு இடையில் ஒரு பகுதி உண்டு.
கடலில் மீன்பிடிக்கப் போகும்பொழுது, காற்றடித்தால் படகு தானாகவே போகும். காற்றுக்கு என்ன வேலி? காற்றுக்கு வேலி உண்டா? அல்லது எல்லைக்கு நடுவில் மதிற்சுவர் கட்ட முடியுமா?
காற்று அடிக்கும்பொழுது படகு தானாகவே எல்லையைத் தாண்டிப் போகிறது!
எல்லை மீறினார்கள் என்றால், நம்முடைய மீன வர்கள் வேண்டுமென்றே எல்லை மீறவில்லை. எல்லை மீறுவது என்றால், ஒரு நாட்டினுடைய நிலப்பரப்பு எல்லையிலிருந்து, அடுத்த நாட்டு எல்லைக்குச் சென்று உளவு பார்த்தால்தான் தவறு; அப்படி செய்தால், அவர்களைப் பிடித்துத் தண்டனை விதிக்கலாம். ஆனால், அதேநேரத்தில் நண்பர்களே, கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும் நம்முடைய சகோதரர்கள், காற்று அடிக்கும்பொழுது படகு தானாகவே எல்லையைத் தாண்டி வேகமாகப் போகிறது; அதை எப்படி அவர் களால் தடுக்க முடியும்?
நமக்குச் சொந்தமான இடத்தில் நம்முடைய மீனவர்கள் தங்களுக்குத் தெரிந்த தொழிலை உயிரைக் கொடுத்து, மீன் பிடித்துக் கொண்டிருக்கும்பொழுது, இலங்கைக் கடற்படையினர் அவர்களை விரட்டுகிறார் கள்; அதைத்தான் நம்முடைய அமைச்சர் அவர்களும் இங்கே சொன்னார்கள்; மற்றவர்களும் சொன்னார்கள்.
மனிதாபிமானமற்ற செயல் அல்லவா!
இது எவ்வளவு வேதனையான விஷயம்! மனிதாபி மானமற்ற செயல் அல்லவா! மனிதநேயத்தோடு பாருங் கள், உயிர்கள் அல்ல. மீனவர்களுடைய வாழ்வாதாரம் என்ன? அவர்களைப் பிடித்துக்கொண்டு இலங்கைச் சிறையில் அடைக்கின்றனர்.
2024 ஆம் ஆண்டு தேர்தலுக்காக சொல்கிறார்கள் என்று நினைப்பீர்கள். அதுவும் முக்கியம்தான். அதனால்தான் சொல்கிறோம், ஏமாறாதே, ஏமாற்றாதே என்று சொல்கிறோம்.
கச்சத்தீவை மீட்கவேண்டி
முதல் மாநாட்டை நடத்தியது இராமேசுவரம் திராவிடர் கழகம்
ஆனால், அதைவிட மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், கச்சத்தீவை மீட்க வேண்டும் என்ற கோரிக்கை மிக நீண்ட நாள் கோரிக்கையாகும். அதற்கு இராமேசுவரத்தில், 1985 ஆம் ஆண்டு காலகட்டத்தில், முதலில் கச்சத்தீவை மீட்கவேண்டி முதல் மாநாட்டை ஏற்பாடு செய்தது இராமேசுவரம் திராவிடர் கழகம். அந்த
மாநாட்டில் யார் கலந்துகொண்டது தெரியுமா? அன்றைக்கு இருந்த ஜார்ஜ் பெர்னாண்டஸ் அவர்கள்.
பல போராட்டங்களுக்கு அவசியமில்லாமலேயே செய்துவிடுகிறார் நம்முடைய முதலமைச்சர்
இன்றைக்குத்தான் நாங்கள் மீனவர் மாநாட்டினை திடீரென்று நடத்துகிறோம் என்று யாரும் அரசியல் கண்ணோட்டத்தோடு சொல்ல முடியாது. இன்றைக்கு ஒரு நல்ல ஆட்சி தமிழ்நாட்டில் நடைபெறுவதால், பல போராட்டங்களுக்கு அவசியமில்லாமலேயே செய்து விடுகிறார் நம்முடைய முதலமைச்சர்.
மற்ற ஆட்சியில், போராடியும் நடைபெறாதது; இந்த ஆட்சியில், போராட்டம் இல்லாமலேயே நடை பெறுகிறது.
போரில்லாமல் வெற்றி காணுகின்ற முதலமைச்சராக நம்முடைய
திராவிட மாடல் முதலமைச்சர்!
கடுமையான ஒரு திட்டத்தை அறிவித்தாலும், போரில்லாமல் வெற்றி காணுகின்ற முதலமைச்சராக நம்முடைய திராவிட மாடல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இருக்கிறார்.
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் ஆளுநரைக் கண்டித்துப் போராட்டம் நடத்துவ தற்கு முடிவு செய்திருந்தோம். ஆனால், அந்தப் போராட்டத்தை நடத்துவதற்கு அவசியமில்லாமல், பொதுக்கூட்டமாக மாற்றினார், 24 மணிநேரத்தில்.
சட்டம் மனிதனுக்காகத்தான் – சட்டம் சமுதாயத்திற்காகத்தான்!
எனவே, நண்பர்களே! இங்கே நாம் தீர்மானங்களை நிறைவேற்றியிருக்கின்றோம். இதைச் செய்யக்கூடிய ஆட்சி இங்கே இருக்கிறது. சில சட்ட சிக்கல்கள் இருக்கலாம். சட்டம் மனிதனுக்காகத்தான் – சட்டம் சமுதாயத்திற்காகத்தான். தலைக்காகத்தான் குல்லாவே தவிர, குல்லாவிற்காக தலை கிடையாது.
அதுபோன்று, மக்களை நாம் தயார் செய்யவேண்டும். அந்தப் பணியைத்தான் நாங்கள் செய்துகொண்டிருக்கி ன்றாம். ஏனென்றால், நம்முடைய அரசமைப்புச் சட்டப் படி, அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் எடுத்தவர்கள்; ஆளுநர் உறுதி மொழி எடுத்தவர்; குடியரசுத் தலைவர் உறுதிமொழி எடுத்தவர்; பிரதமர் உறுதிமொழி எடுத் தவர்; முதலமைச்சர் உறுதிமொழி எடுத்தவர். எல் லோரும் உறுதிமொழி எடுக்கக்கூடிய அந்த அர சமைப்புச் சட்டத்தினுடைய முதல் வரி எப்படி தொடங்குகிறது தெரியுமா?
We the People of India….
இந்தியாவினுடைய பொதுமக்களாகிய நாம், நமக்கு நாமே வழங்கிக் கொண்ட இறையாண்மை என்பது எங்கே இருக்கிறது என்றால், வேறு யாரிடத்திலும் இல்லை, மக்களாகிய நம்மிடத்தில்தான் இருக்கிறது என்பதை மக்களுக்குத் தெரியப்படுத்தி, தெளிவுப்படுத்தி நம்முடைய உரிமைகளை வற்புறுத்தவேண்டும் என்ப தற்காகத்தான் இந்த மாநாடு நண்பர்களே!
204 வியாதிகளுக்கும் ஒரே மருந்து என்று
வித்தை காட்டுகிறார்கள்!
சில பேர் வித்தை காட்டுகிறார்கள்; 204 வியாதி களுக்கும் ஒரே மருந்து என்று. 204 வியாதிகளையும் தெரிந்துகொள்வதற்கே பல நாள் ஆகும். அதுபோன்று, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் எல்லா பிரச்சினைகளும் தீர்ந்து போய்விடும் ஒன்றியத்தில் ஆட்சிக்கு வந்தால் என்று பா.ஜ.க.வினர் சொன்னார்கள். அப்படி நடந்ததா?
நாங்கள் ஆட்சிக்கு வந்ததும், மீனவர்கள் பிரச்சினைக்காக தனி அமைச்சரை நியமிப்போம் என்று சொன்னார்கள். நம்ப வைத்தார்கள்; ஆனால், நம்பியோர், நம்பினார்கள்; அது நடந்ததா?
இதுதான் இப்பொழுதைய கேள்வி!
நடைமுறைச் சிக்கல்கள் இருந்தாலும் – அதை சரிப்படுத்தி நிறைவேற்றுகிறார் முதலமைச்சர்!
மாநில அரசிடம் பல நேரங்களில் மீனவச் சகோதரர்கள் கோரிக்கைகளை வைக்கிறார்கள். அக் கோரிக்கைகளில் நடைமுறைச் சிக்கல்கள் இருக்கின்றன. அப்படி இருந்தாலும், அதை சரிப்படுத்திக் கொண்டு அதனை நிறைவேற்றுகிறார் நம்முடைய முதலமைச்சர்.
வாங்கிய கடனுக்கே வட்டி கட்டுவதற்காக இன் னொரு கடன் வாங்குகிற நிலைக்கு இருந்த ஆட்சியை, ஓரளவிற்கு சரி செய்து, நிதிப் பொறுப்புகளையும் சமாளிக்கிறார். மக்களுக்கு எதைச் செய்யவேண்டுமோ அதைச் செய்கிறார்.
எல்லா சமூகத்தினரும் படிக்கவேண்டும்; பெண் களும் படிக்கவேண்டும் என்பதற்காக கல்லூரியில் செல்லும் பெண்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாயை தமிழ்நாடு அரசு வழங்குகிறது.
கல்லூரி மாணவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்குவதில் பொருளாதாரச் சிக்கல்கள் இருந் தாலும், அதை சமாளித்து, வழங்குகிறது தமிழ்நாடு அரசு.
மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட ஏழு தீர்மானங்கள்!
எனவேதான் நண்பர்களே, இங்கே ஏழு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு இருக்கின்றன. அந்தத் தீர்மானங்களை ஒவ்வொன்றாக எடுத்து, இந்த மேடையிலேயே அதற்குரிய பதிலையும் சொன்னார்கள்.
இவ்வளவு ஆற்றல் படைத்த அமைச்சர்கள், இந்த அமைச்சரவையில்தான் உண்டு.
நம்முடைய ‘திராவிட மாடல்’ ஆட்சியின் அமைச்சர்கள்!
தீர்மானக் கோரிக்கைகளை இந்தக் கையில் வாங்கி, அந்தக் கைகளில் தூக்கிப் போடுவது என்பது கிடையாது. அந்தக் கோரிக்கை தீர்மானங்களைப் படித்துவிட்டு, சட்டப்பூர்வமான பதிலை சொல்லக்கூடிய நிலையில் இருக்கிறார்கள் – நம்முடைய ‘திராவிட மாடல்’ ஆட்சி யின் அமைச்சர்கள்.
பல நேரங்களில், மாநில உரிமைகளுக்காக ஒன்றிய அரசின் கதவைத் தட்டுவதாக இருக்கிறது. பல நேரங்களில் மாநில அரசு சுதந்திரமாக இயங்க முடியாத சூழ்நிலை இருக்கிறது. அப்படி இருந்தாலும், தன்னுடைய அதிகாரத்திற்குட்பட்டு அதிகபட்சமாக செய்ய முடியுமோ, அவற்றை செய்யக்கூடிய மனம் படைத்தவர் நம்முடைய முதலமைச்சர் அவர்கள்.
மனம் இருந்தால், மார்க்கமுண்டு. தெளிவிருந்தால், துணிவிருந்தால், செயல் வெற்றிகரமாக அமையும்.
இங்கே ஒரு செய்தியை எழுதிக் கொடுத்திருக் கிறார்கள்; அதைப் படிக்கும்பொழுது சங்கடமாக இருக்கிறது; அந்தச் செய்தியை அமைச்சர்களும், மற்றவர்களும் பார்த்தார்கள்.
மீனவர்களின் கோரிக்கை
அந்தச் செய்தி என்னவென்று சொன்னால்,
‘‘ஏழு மீனவர்கள் இலங்கை அரசால் கைது செய்யப் பட்டு, அதில் 6 பேர் விரைவில் விடுதலை செய்யப்பட விருக்கிறார்கள் என்றாலும், 7 பேரில் ஒருவருக்கு, சிறைத்தண்டனை கொடுக்கப்பட்டு இருக்கிறது. அவர் விடுதலை பெற வழிவகை செய்யப்பட வேண்டும்” என்று கேட்டிருக்கிறார்கள்.
இது மனிதநேய பிரச்சினையல்லவா!
ஏழு பேரை இலங்கைக் கடற்படையினர் சிறை பிடித் திருக்கிறார்கள். அவர்களுடைய படகுகளையும் கொண்டு போயிருக்கிறார்கள். படகுகளைத் திருப்பிக் கொடுக்க வேண்டாமா?
சட்டத்தினுடைய தார்மீக உரிமை என்ன?
முன்பெல்லாம் மீனவர்களைக் கைது செய்தால், படகுகளைத் திருப்பிக் கொடுப்பார்கள். இரண்டாவதாக, ஒரு மனிதன் குற்றம் செய்தார் என்றால் அவருக்குத் தண்டனை விதித்து, சிறைச்சாலையில் அடைப்பார்கள். பிறகு அவரை விடுதலை செய்யும்பொழுது, சட்டப்படி என்ன செய்யவேண்டும்? அவர் வைத்திருந்த பொருள் களைத் திருப்பி ஒப்படைப்பதுதான் – இது சாதாரண சட்டத்தினுடைய தார்மீக உரிமையாகும்.
விசைப்படகு – அதைத் திருப்பிக் கொடுக்கவேண்டும் அல்லவா!
மீனவர்களுடைய வாழ்வாதாரமே அவர்களின் படகுகள்தானே!
அதுதானே அறம்! அதுதானே மிக முக்கியம். அறத்திற்கு விரோதமாக அல்லவா நடந்துகொள்கிறார்கள். இதைக் கேட்பது மனித உரிமை! அவருடைய வாழ் வாதாரமே அந்த விசைப்படகில்தான் இருக்கிறது.
கைது செய்த மீனவர்களை மட்டும் விடுதலை செய்கிறோம் என்று சொல்வது; அவர்களின் விசைப் படகுகளைத் திருப்பித் தராமல் இருப்பது என்பது கண்ணாமூச்சி விளையாட்டுப் போன்றதல்லவா!
நம்முடைய முதலமைச்சர் அவர்கள் உடனடியாக ஒன்றிய அமைச்சருக்குக் கடிதம் எழுதினார். 24 மணி நேரத்தில் ஒரு முடிவு ஏற்பட்டது என்று சொன்னார்கள்.
இப்படி செயல்படுவதுதான் ‘திராவிட மாடல்’ ஆட்சி. இதுதான் பாரம்பரியமாக வரக்கூடிய ஆட்சி.
ஆகவேதான், இந்த ஆட்சியைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் இருக்கிறது. நாங்கள் நேரிடையாக அரசாங்கத்தைத்தான் கேட்கமுடியும்.
அமைச்சரிடம் கோரிக்கை வைத்த அமைச்சர்!
இந்த மாநாட்டிற்கு ஒரு தனிச் சிறப்பு என்னவென்றால், நம்முடைய ஒரு அமைச்சர், இன்னொரு அமைச்சரிடம் கோரிக்கை வைத்தார்.
சுற்றுச்சூழல் துறை அமைச்சர் அவர்கள், நம் முடைய மீன்வளத் துறை அமைச்சரிடம் கோரிக்கை வைத்தார். நாளைக்கு செய்தித்தாள் களில் தலைப்பாகக் கூட வரும் – ‘‘அமைச்சரே, அமைச்சரிடம் கோரிக்கை வைத்தார்” என்று. அப்படி போட்டாலும் அதனை நாம் வரவேற்கிறோம்.
பகுத்தறிவுப் பல்கலைக் கழகம்,
திராவிடப் பல்கலைக் கழகம்
ஏனென்றால், நம்முடைய குடும்பம் – இது நல்ல குடும்பம் ஒரு பல்கலைக் கழகம்; அதுவும் பகுத்தறிவுப் பல்கலைக் கழகம், திராவிடப் பல்கலைக் கழகம்!
மீனவ சகோதரர்களுக்கு, உங்கள் வாழ்வாதாரத்திற்குச் சம்பந்தப்பட்ட இந்தப் பிரச்சினையோடு நின்றுவிடாமல், திராவிடர் கழகம் முன்னெடுக்கும் பிரச்சினை இன் னொன்றும் இருக்கிறது; சமூக மாற்றம் ஏற்படவேண்டும். சமூகநீதி எல்லோருக்கும் கிடைக்கவேண்டும் என்பதற் காகப் பாடுபட்டுக் கொண்டிருக்கின்ற இயக்கம் திராவிடர் கழகம்.
சமூகநீதி நாள் – சமத்துவ நாள் என்று அறிவித்த சமூகநீதிக்கான சரித்திர நாயகர்!
அதனால்தான், புரட்சியாளர் பாபா சாகேப் அண்ணல் அம்பேத்கர் அவர்களுடைய பிறந்த நாளில், இந்த மாநாடு கூட்டப்பட்டு இருக்கிறது; அவருடைய பிறந்த நாளை, நம்முடைய முதலமைச்சர் அவர்கள் தெளிவாக இந்த நாளை ‘‘சமத்துவ நாள்” என்று அறிவித்து, உறுதிமொழி எடுக்கிறார்.
தந்தை பெரியாருடைய பிறந்த நாளை ‘‘சமூகநீதி நாள்” என்று அறிவிப்பு செய்து உறுதிமொழி எடுத்தார்.
சமூகநீதியும், சமத்துவமும் பிரிக்கப்பட முடியாதவை. எப்படி அம்பேத்கரும், பெரியாரும் பிரிக்கப்பட முடியாத வர்களோ, அதேபோல. இருவரும் மிக முக்கியமான ஓர் அடிப்படையைக் கொண்டவர்கள்.
அந்த வகையில், மீனவ சமுதாய சகோதரர்களுக்கு, பெருமக்களுக்கு, அவர்கள் எங்கே இருந்தாலும், அவர் களுக்கு என்னுடைய அன்பான வேண்டுகோள் என்னவென்றால், இந்தத் திராவிட மாடல் ஆட்சியில், எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க, சமூகநீதி நாள் என்று அறிவித்த நம்முடைய முதலமைச்சர் அவர்கள் அதற்கு விளக்கம் சொன்னார்.
தந்தை பெரியார் அவர்கள், சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கிய நேரத்தில் என்ன வாசகத்தைச் சொன்னாரோ, அதே வாக்கியத்தை எடுத்து நம்முடைய முதலமைச்சர் கையாண்டார்.
1925 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது சுயமரியாதை இயக்கம்; நூறாண்டை அடையப்போகிறது. அதுதான் திராவிடப் பாரம்பரியம்.
சமூகநீதிகாத்த சரித்திர நாயகராக இன்றைக்கு இந்தியாவிற்கே வழிகாட்டக் கூடிய முதலமைச்சராக, இந்தியாவே எதிர்பார்க்கக் கூடிய ஓர் ஆட்சியாக – எடுத்துக்காட்டான ஆட்சியாக இருக்கின்றது.
அந்த வகையில் நண்பர்களே, அனைவருக்கும் அனைத்தும் – ஒரே வார்த்தைதான்.
சமூகநீதி என்றால் என்ன?
அனைவருக்கும் அனைத்தும். எங்களுக்கு மட்டும் தான் என்று சொல்லவில்லை – பார்ப்பனர்களுக்கும்கூட – முன்னேறிய ஜாதியினருக்கும்கூட! அவர்களுடைய பங்கை அவர்கள் அனுபவிக்கவேண்டும்; மற்றவர்களு டைய பங்கை எடுத்துக்கொண்டு, ‘‘நீ படிக்காதே! படித்தால் உனக்கு தண்டனை” என்று சொன்னதுதானே சனாதனம்!
சனாதனத்திற்கு என்ன அடையாளம்?சனாதனம் ஒரே மாதிரி இருக்குமா?
ஆனால், இன்றைக்கு இருக்கக்கூடிய சூழலை நன்றாக நீங்கள் நினைத்துப் பாருங்கள்.
கதவுகளைத் தட்டித் தட்டி உங்களுக்காக மண்டல் கமிசன் கிடைத்திருக்கிறது. உங்களுக்காக மாநில அரசு, 69 சதவிகித இட ஒதுக்கீட்டிற்காகப் போராடிப் பெற்றி ருக்கின்றோம்.
அருள்கூர்ந்து மீனவ சமுதாய சகோதரர்களே, சகோதரிகளே, குடும்பத்தில் உள்ள நண்பர்களே, உங்கள் பிள்ளைகள் உங்களைப் போலவே மீன் பிடிக்கத்தான் வரவேண்டும் என்பதை மாற்றி, உங்கள் பிள்ளைகள் டாக்டர்களாக வரவேண்டும்; உங்கள் பிள்ளைகள் அய்.ஏ.எஸ். அதிகாரிகளாக வரவேண்டும்; உங்கள் பிள்ளைகள் அய்.பி.எஸ். அதிகாரிகளாக வரவேண்டும்; உங்கள் பிள்ளைகள் பெரிய பெரிய நிலைக்கு வர வேண்டும் என்கிற நிலைக்கு ஆக்குங்கள். அதுதான் மிகவும் முக்கியம்.
வடநாட்டில், பாபு ஜெகஜீவன்ராம் அவர்களிடம் ஒரு கேள்வி கேட்டார்கள்.
‘‘என்னங்க, நாங்கள் உத்தியோகத்திற்கு வந்தால் போதுமா? பெரிய பணக்காரன் ஆகவேண்டும் என்று சொல்லவில்லையே; அதற்குரிய ஏற்பாடுகளை செய்ய வில்லையே?” என்று.
பாபு ஜெகஜீவன்ராம் அவர்கள் மிகவும் கெட்டிக்காரர்; மிகவும் கெட்டிக்காரத்தனமாக பதில் சொல்லக்கூடியவர்; சமூகநீதியில் நம்பிக்கை உள்ளவர்.
அவர் சொன்னார்,
‘‘ஊரில் உள்ள பெரிய பணக்காரரைக்கூட, பெரிய மிராசுதாரரரைக்கூட, ஒரு சாதாரண சர்க்கிள் சப்-இன்ஸ்பெக்டர் அழைத்து வந்து காவல் நிலையத்தில் வைப்பார்” என்றார்.
அதிகாரப் பங்களிப்பு, சமூகநீதி என்பது சமத்துவம் மட்டுமல்ல; அதிகாரப்பங்களிப்பு. அந்த அதிகாரப் பங்களிப்பு மீனவ சமுதாயத்தினருக்கு வரவேண்டும்.
எத்தனைப் பேர் அய்.பி.எஸ். அதிகாரிகள் இருக் கிறார்கள்; எத்தனைப் பேர் அய்.ஏ.எஸ். அதிகாரிகள் இருக்கிறார்கள்? நான் மாணவனாக இருக்கின்ற காலத்தில், எங்கள் ஊர் கடலூரில் செல்வராஜ் என்ற ஒருவர் இருந்தார்; அத்திப்பூத்தது போன்று, மிக அபூர்வமாக.
யார் யாரோ உள்ளே வந்து உட்கார்ந்துகொண்டுதானே, சட்டபூர்வமாக நிறைவேற்றவேண்டியவற்றை செய் யாமல் தடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் என்று சொல் வதில்கூட குறுக்குசால் விட்டுக் கொண்டிருக்கிறார்களே!
ஒடுக்கப்பட்ட சமுதாயத்திலிருந்து வரவேண்டாமா?
அப்படியென்றால், நீதிபதிகளாக ஒடுக்கப்பட்ட சமு தாயத்தைச் சேர்ந்த, உரிமை பறிக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் குறிப்பாக மீனவ சமுதாயத்திலிருந்து வரவேண்டாமா?
நீங்கள், வயதானவர்கள், மற்றவர்கள் மீன்பிடித் தொழிலுக்குச் செல்லுங்கள்; இளைஞர்களே, நீங்கள் கட்டாயம் கல்வித் துறையிலும், அறிவுத் துறையிலும் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளுங்கள்.
அந்த வகையில், மிகப்பெரிய அளவிற்கு ஒரு சமுதாய மாற்றத்தை உருவாக்கவேண்டும். அப்படி உருவாக்கினால்தான், எல்லோருக்கும் அந்த வாய்ப்பு கிடைக்கும்.
பயன்படுத்தக் கூடிய வாய்ப்புக் கொடுத்தால்தான் திறமைகள் வெளிப்படும்!
அறிவு என்பது மேல்ஜாதிக்காரர்களுக்கு மட்டும்தான் என்பது இல்லை; எல்லோருக்கும் அறிவு இருக்கிறது; பயன்படுத்தக் கூடிய வாய்ப்புக் கொடுத்தால்தான் திறமைகள் வெளிப்படும்.
ஒரு சிலர் புரியாமல் கேட்கிறார்கள், பெரியார் என்ன செய்துவிட்டார் என்று?
நான்தானே தேர்வு எழுதினேன்; அதனால், அதனுடைய பயனைப் பெற்றேன் என்று சொல்கிறார்கள்.
நீதான் தேர்வு எழுதினாய், ஆனால், நீ தேர்வு எழுதுவதற்குக் கதவு திறந்துவிட்டது பெரியார் அல்லவா!
மூடிய கதவைத் திறந்தது யார்?
நீ தேர்வு எழுதி, உன்னுடைய அறிவை காட்டியிருக்கலாம். ஆனால், நீ தேர்வு எழுத முடியாமல், கதவு மூடியிருந்ததே! அதற்கு வாய்ப்பு இல்லாமல் இருந்ததே! திராவிட இயக்கம்தானே அதைச் செய்தது – நீதிக்கட்சிதானே அதை செய்தது – இன்றைய ‘திராவிட மாடல்’ அரசுதானே மூடிய கதவைத் திறந்தது.
மக்களை ஆயத்தப்படுத்துவது எங்களுடைய வேலை – அதற்காகத்தான் இந்த மாநாடு!
மூடி இருந்தால், திற என்று சொல்கிறார் முதலமைச்சர். திறக்கவில்லை என்றால், தட்டுவோம் என்று சொல்கிறார். அப்படியே தட்டியும் கதவு திறக்கவில்லை என்றால், கதவை உடைப்போம் என்று சொல்லக்கூடிய அளவிற்கு மக்களை ஆயத்தப்படுத்துவது எங்களுடைய வேலை. அதற்காகத்தான் இந்த மாநாடு – அதற்காகத்தான் இந்த உரிமைக் குரல்.
ஆகவே, இது மனிதநேய மாநாடு! இது மனித உரிமை மாநாடு!
மனிதம் வெல்லட்டும்!
மீனவர்களின் வாழ்வு சிறக்கட்டும்!
மனித உரிமைக்காகப் பாடுபடக் கூடிய அமைச்சர்கள் இங்கே இருக்கிறார்கள்.
எனவேதான், மனிதம் வெல்லட்டும்!
மீனவர்களின் வாழ்வு சிறக்கட்டும்!
அவர்களுடைய பறிக்கப்பட்ட உரிமைகள் – அது படகாக இருந்தாலும், படிப்பாக இருந்தாலும், வாழ்வாக இருந்தாலும் அவர்கள் அத்துணைப் பேரும் பயன்பட வேண்டும். அவர்கள் மீண்டும் தாங்கள் சுகப்பட வாழ்க்கை நடத்தவேண்டும் என்பதற்கு, உங்களுக்குப் பிள்ளையாக இருக்கின்ற கூட்டம்தான் நாங்கள். எங்களுக்கு வேறு வேலை இல்லை.
‘‘கருப்புச் சட்டைக்காரன் – காவலுக்குக் கெட்டிக் காரன்” – அதற்குத் துணையாகத்தான் இரட்டைக் குழல் துப்பாக்கியாக இருக்கக்கூடிய திராவிட முன்னேற்றக் கழகம்.
உங்கள் உரிமையைப் பெறுவதற்கு நாங்கள் துணை நிற்போம்!
ஆகவே, வாய்ப்பளித்த உங்களுக்கு நன்றி கூறி, தங்களுடைய நேரத்தை ஒதுக்கி இம்மாநாட்டில் பங்கேற்ற நம்முடைய மாண்புமிகு அமைச்சர் பெருமக் களுக்கும், தலைவர்களுக்கும், திராவிட முன்னேற்றக் கழக சகோதர்களுக்கும், அனைத்து மீனவ சங்க அமைப்புகளும் ஒத்துழைத்ததற்கு என்னுடைய தலைதாழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். பணிவன்பான நன்றியைக் கூறிக் கொள்கிறேன்.
சந்திப்போம், மீண்டும் உங்கள் உரிமையைப் பெறுவதற்கு நாங்கள் துணை நிற்போம்.
அமைச்சர்கள் சொன்னதுபோல, உங்களை ஏமாற்ற பலர் வருவார்கள்; நீங்கள் ஏமாறக்கூடாது. அதுதான் மிகவும் முக்கியம்.
எச்சரிக்கும் மணிதான் இந்த மாநாடு!
அதை எச்சரிக்கும் மணிதான் இந்த மாநாடு என்று சொல்லி உங்களிடமிருந்து விடைபெறுகிறேன்.
வாழ்க பெரியார்!
வருக மீனவர்களின் உரிமைகள்!
வெல்லட்டும்! வெல்லட்டும், மீனவர் உரிமை வெல்லட்டும்!
நன்றி, வணக்கம்!
– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமை யுரையாற்றினார்.