ஈழவர் மட்டுமல்லாது கிறிஸ்துவர், இஸ்லாமியர் என்று பலரும் நாராயண குருவைத் தேடி வந்தனர். தேடி வந்த அனைவரையும் சமமாக நடத்திய அவரைத் தேடி மேலும் மக்கள் கூட்டம் வரத் தொடங்கியது. “உலகமே ஒரே குடும்பம்” என்ற பொருளுடைய “வசுதைவ குடும்பகம்” என்ற கருத்தை மக்களுக்குப் போதித்தார்.
“கடவுளுக்கு ஜாதி, மத பேதமில்லை. கடவுளை அடைய அன்பு ஒன்றே வழி”, “பூஜை, புணஸ்காரங்களால் கடவுளை அடைய முடியாது” என்று தன்னை நாடி வரும் மக்களுக்கு அறிவுரை வழங்கினார். நாட்டில் நிலவும் சமூக சிக்கல்களுக்குக் காரணம் ஜாதியும், ஜாதிச் சட்டங்களுமே காரணம் என்று உணர்ந்த அவர் இரண்டு செயல் திட்டங்களை வகுத்தார். ஜாதிக் கொடுமைகளைக் களைதல், மூடநம்பிக்கைகளைக் களைதல் என்பவையே.
ஈழவர்கள், இவரிடம், நாயர்கள் தங்களை ஜாதிய ரீதியில் கொடுமைப்படுத்துவதாகக் கூறியபோது அவரோ, “நீங்கள் உங்களுக்கு கீழ் இருக்கும் புலையர்களைத் தீண்டத்தகாதவர்களாக நினைத்து ஒதுக்குவதை முதலில் நிறுத்துங்கள். அவர்களை ஜாதிய வேறுபாடின்றி உங்களோடு இணைத்துக் கொள்ளுங்கள்” என்று அறிவுறுத்தினார்.

தீண்டாமைக் கொடுமைகளிலிருந்தும், ஜாதிய இழிவுகளிலிருந்தும் அடிமைப்பட்ட கீழ் ஜாதியினர் விடுபட வேண்டுமானால் கல்வியிலும், பொருளாதாரத்திலும் அவர்கள் முன்னேறுவதுதான் ஒரே வழி என்று அவர் நம்பினார். அதனால், அவர் கொள்கைகளை ஏற்றுக் கொண்டவர்களை பள்ளிக் கூடங்களைத் தொடங்க அறிவுறுத்தினார். அவர்களும் அதைச் செய்தனர். அன்று அவர் பெயரால் பல கல்வி நிலையங்கள் தொடங்கப்பட்டன. ஈழவ மக்களும் மற்ற கீழ் ஜாதி மக்களும் கல்வியறிவு பெற இந்தக் கல்வி நிலையங்களே காரணமாயின.

நாராயண குரு ஆரம்பத்தில் மேல் ஜாதிக் கடவுள்கள் என்று கூறப்பட்ட சிவன், விஷ்ணு கடவுள் வழிபாடுகளை கீழ்ஜாதியினருக்கு வழிபாட்டு முறையை அறிமுகப்படுத்தினாலும் நாளடைவில் அதிலும் மாற்றத்தைக் கொண்டு வந்தார்.
வைகுண்டசாமி நிறுவியதுபோல் களவங்கோடு என்ற ஊரில் அவர் உருவாக்கிய கோயிலில், கருவறையில் கடவுள் சிலைகளுக்குப் பதில் ஒரு பெரிய நிலைக் கண்ணாடியை வைத்தார். அதற்கு முன் ஒரு விளக்கை வைத்தார்.
இதன் மூலம் அவரவர் உருவத்தையே அவரவர் வணங்கும் முறையை அவர் கோயிலில் உருவாக்கினார். கோயில்கள் வழிபடும் இடங்களாக இருக்காமல், அதன் ‘தொழுதல்’ என்ற அடிப்படையே மாற்றினார் நாராயண குரு. கல்வி, தொழில், சமூக நலம் ஆகியவற்றைப் பற்றி விவாதிக்கும் மய்யங்களாக அவற்றை மாற்ற வேண்டும் என்று அவர் எண்ணினார்.
அவருடைய மக்கள் முன்னணி அமைப்பு அவர் நிறுவிய வழிபாட்டுத் தலங்களில் அவர் எண்ணத்தை நிறைவேற்றும் வண்ணம் அமைந்தது. ஒருமுறை ‘மதம்’ பற்றி கேட்டதற்கு, நாராயண குரு, “மதத்திற்காக மனிதன் இல்லை; மனிதனுக்காகத்தான் மதம்” என்று பதில் அளித்தார். மற்றொரு முறை, “ஜாதி, மதங்களுக்கிடையே நடக்கும் போட்டிகளிலிருந்து விடுபட்டால்தான் நாடு முன்னேறும்” என்று கூறினார்.
நாராயண குரு, ‘யோகம்’ என்று மூன்று படி நிலைகளை சொன்னார்.
யோகம் ஒன்று: “கல்வி பெற்றால் மட்டுமே ஒரு சமூகம் நிரந்தரமான முன்னேற்றத்தைப் பெற முடியும். நமது சமூகத்தில் கல்வி கற்காதவர் என்று யாருமே இருக்கக் கூடாது. வயதானவர்கள்கூடத் தொடக்கக் கல்வியாவது கற்றிருக்க வேண்டும். அடித்தட்டு மக்கள் அனைவரும் எழுதவும், படிக்கவும் தெரிந்தவர்களாக இருக்க வேண்டும்” என்பது மக்களின் முக்கிய குறிக்கோளாக இருக்க வேண்டும். (அன்று அவர் செய்த அந்த முயற்சியின் விளைவாகத்தான் கேரளா, இந்த நாட்டில் கல்வியில் சிறந்த மாநிலமாகத் திகழ்கிறது.)
கல்வியின் முக்கியத்துவத்தை மக்களிடையே உணர்த்தி, அவர்களிடையே ஒரு விழிப்புணர்வை உண்டாக்கியதில் நாராயண குருவின் பங்களிப்பு முக்கியமானது. ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையில் ஒளியேற்ற யோகம் ஒன்று முக்கிய பங்காற்றியது.
யோகம் 2: கல்வி பெற்ற மக்கள் ஒழுக்கம், கட்டுப்பாடு ஆகியவற்றை வாழ்க்கை நெறியாகக் கொண்டு நேர்மையாக உழைத்து, உற்பத்தியைப் பெருக்கி, பொருளாதார தன்னிறைவு பெற்று வளமோடு வாழ வேண்டும்.
யோகம் 3: கிடைக்கின்ற பொருள்களைக் கொண்டு, கைத்தொழில்களைச்செய்து அந்தப் பொருள்களை அயல்நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து பொருள் ஈட்ட வேண்டும்.
இந்த மூன்று செயல்பாடு களையும் மூன்று யோகங்களாக நாராயண குரு குறிப்பிட்டார். இதன் அடிப்படைக் கல்வியும், உழைப்பும், பொருளாதார வளர்ச்சியும் மக்களின் அடிமைத்தனத்தை ஒழித்து, அவர்கள் சமூகத்தில் அங்கீகாரம் பெறவேண்டும் என்பதற்காகத்தான்.
ஜாதிய சட்டங்களும், ஜாதிய அடக்கு முறைகளும், மக்களின் இழிவுக்குக் காரணம் என்று திட்டமாக எண்ணிய நாராயண குரு, “ஜாதிக்கென்ற தனி அடையாளம் என்று ஏதும் இல்லை. பிறப்பு வழியே திணிக்கப்பட்டு, பெரும்பான்மை மக்களை அவமானத்திற்குள்ளாக்குகிறது” என்று கூறினார்.
(‘சூத்திரன்’ என்ற இன இழிவு பிறப்பிலேயே நம்மேல் திணிக்கப்பட்ட கொடுமை என்று தந்தை பெரியார் கூறியதற்கு ஒப்பானது நாராயண குருவின் கருத்து). ஒரு கூட்டத்தில் ஒரு இளைஞன், “பார்ப்பனர்களின் பூணூலை அறுத்து நெருப்பில் போட வேண்டும்” என்றான். அதைக் கேட்டு மகிழ்ந்த நாராயணகுரு, “இதுபோன்ற உணர்வு கொண்ட ஆறு இளைஞர்கள் இருந்தால் போதும். ஜாதியையும், தீண்டாமையையும் இந்த சமூகத்திலிருந்தே ஒழித்துவிடலாம்” என்று குறிப்பிட்டார்.
பொதுவாகக் கடவுள் நம்பிக்கையாளர்கள், “சிறு தெய்வ வழிபாடு, முழுமுதல் தெய்வ வழிபாடு, தத்துவார்த்தத் தெய்வ வழிபாடு” என்று மூன்று நிலையில் வணங்குவர்.
சிறு தெய்வ வழிபாடு என்பது மதுரை வீரன், முனியப்பன், சுடலைமாடன், மாரியாத்தா, பேச்சி போன்ற தெய்வங்களை வணங்குவது.
முழுமுதல் தெய்வ வழிபாடு என்பது நம்பூதிரிப் பார்ப்பனர்கள் சிவன், விஷ்ணு போன்ற தெய்வங்களை வணங்குதல்.
தத்துவார்த்த வழிபாடு என்பது குறிப்பான கடவுள் என்று ஏதுமில்லாமல் தூய தத்துவங்களை மனதால் நினைத்துத் தொழுதல். இந்த பிரபஞ்சம் குறித்து ஒரு புரிதல் மட்டுமே இந்த வழிபாட்டில் இருக்கும்.
நாராயண குரு முதலில் ஒடுக்கப்பட்ட மக்களின் சிறு தெய்வ வழிபாட்டை முதலில் கைவிடச் சொன்னார். நம்பூதிரிப் பார்ப்பனர்களின் சிவன், விஷ்ணு, சுப்பிரமணியன் ஆகிய தெய்வங்களையே வணங்கச் சொன்னார். அடுத்த கட்டத்தில் உருவ வழிபாடில்லாத நிலைக் கண்ணாடியில் தெரியும் தன்னையே வணங்கும் முறையை, அந்தக் கண்ணாடிக்கு முன் உள்ள விளக்கை வணங்கும் முறையை அறிமுகப்படுத்தினார்.
இந்த முறை நாளடைவில் வெறும் விளக்கை மட்டும் வணங்கும் முறையாக மாற்றம் பெற்றது. இன்றும் பல ஈழவ சமூக மக்கள் விளக்கை ஏற்றி வணங்கும் முறையைப் பின்பற்றுகின்றனர். நாராயணகுரு தன்னையே “பவுத்தன்” என்று அழைத்துக் கொண்டார். (தந்தை பெரியார், “புத்தியுள்ள அனைவரும் புத்தன்” என்று கூறியது நினைவு கூறத்தக்கது!)
நாராயண குருவிடம் ஒருவர், “தந்தையின் தொழிலையே மகன் செய்வது சிறப்பு. எனவே, ஜாதி வழி தொழில் முறை சரியானதுதானே?” என்று வினவ, அதற்கு அவர் அதில் திறமையும், ஆர்வமும் இருந்தால் செய்து விட்டுப் போகட்டும்.
ஆனால், ஜாதியை அடிப்படையாக வைத்து அவர் அப்பாவின் தொழிலைத்தான் செய்ய வேண்டும் என்று சொல்வதில் என்ன நியாயம் இருக்கிறது? (மேலை நாடுகளில் யார் வேண்டுமானாலும் எந்தத் தொழிலையும் தேர்ந்தெடுத்துச் செய்ய முடியும்.
அவர்களுக்கு அந்தத் தொழில்மேல் ஆர்வம் இருக்க வேண்டும் என்பது மட்டுமே அடிப்படைத் தேவை. ஆனால், நம் நாட்டில் தொழில்கள், ஜாதியை இணைத்து விட்டதால் அந்தந்த ஜாதியினர் மட்டுமே அந்த ஜாதிக்குரிய தொழிலைச் செய்ய முடியும்.
மற்றவர்கள் மாறி செய்ய முடியாது. அது வர்ண (குல) தர்மத்திற்கு எதிரானது என்று இந்த நாட்டின் வேதங்களும், கீதையும், மனுதர்மமும் கூறுகிறது. (பார்க்கவும், படிக்கவும்: டாக்டர் அம்பேத்கர் எழுதிய “ஜாதியை ஒழிக்க வழி” நூல்.)
(சான்றுகள்: “மறைக்கப்பட்ட மாமனிதர்கள்”
– மஞ்சை வசந்தன்)
(தொடருவேன்…)
