பாஜகவுடன் கூட்டணி தற்கொலை முயற்சியே!
சரத் பவார் கருத்து
‘சாம்னா’வில் சஞ்சய் ராவத் தகவல்
மும்பை, ஏப்.18- மராட்டிய மாநிலத்தில் இப்போது சிவசேனை (ஷிண்டே) -பாஜக கூட்டணி ஆட்சியில் உள்ளது. எதிர்க்கட்சியாக தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ், சிவசேனை (உத்தவ்) ஆகிய கட்சிகள் அடங்கிய கூட்டணி உள்ளது.
இந்நிலையில், சிவசேனை (உத்தவ்) கட்சி பத்திரிகை சாம்னாவில் சஞ்சய் ராவத் எழுதியுள்ள கட்டுரையில் கூறப்பட்டுள்ளதாவது:
உத்தவ் தாக்கரேவை சரத் பவார் அண்மையில் சந்தித்துப் பேசினார். அப்போது, மகாராட்டிர எதிர்க்கட்சிக் கூட்டணியில் இருந்து விலகிச் செல்ல யாரும் விரும்பவில்லை. அதே நேரத்தில் தனிப்பட்ட நபர்கள் யாரும் தேசியவாத கட்சியில் இருந்து விலகிச் செல்ல விரும்பினால், அது அவர்களது சொந்த விருப்பம். தேசியவாத காங்கிரஸ் கட்சி பாஜகவுடன் ஒருபோதும் கைகோக்காது என்பது உறுதி. பாஜக வுடன் யாராவது கூட்டணி வைக்க விரும்பினால், அது தற்கொலை முயற்சிதான் என்று சரத்பவார் உத்தவ் தாக்கரேவிடம் கூறியுள்ளார்.
மேலும், எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த யாராவது பாஜக கூட்டணிக்குச் சென்றாலும், அவர்களுக்கு எதிரான சிபிஅய், அமலாக்கத்துறை வழக்கு விசாரணை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுமே தவிர வழக்கு ஒருபோதும் முடியாது என்றும் சரத்பவார் கூறியதாக சஞ்சய் ராவத் தனது கட்டுரையில் கூறியுள்ளார்.