வங்க மொழி இலக்கிய உலகில் ரவீந்திரநாத் தாகூருக்கு அடுத்தபடியாக மிக உயர்ந்த இடத்தைப் பெற்றவர் இலக்கியப் போராளி மகாஸ்வேதா தேவி. இவரது தந்தை மணிஷ் கட்டக் – கவிஞர், நாவலாசிரியர். தாயார் தாரித்ரி தேவியும் எழுத்தாளர், சமூக சேவகர். அறிவார்ந்த சூழலில் வளர்ந்து, சுயமதிப்பும் சமூகப் பார்வையும் கொண்ட ஆளுமையாக உருவானவர் மகாஸ்வேதா தேவி.
தாகூரின் சாந்திநிகேதனில் உள்ள பாட பவனாவில் மேல்நிலைப்பள்ளிக் கல்வியும், விஸ்வபாரதி பல்கலைக் கழகத்தில் ஆங்கிலத்தில் பி.ஏ. பட்டமும், கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றவர். தனது கல்வியறிவு, எழுத்துத் திறன் மட்டுமன்றி தனது வாழ்வையே ஒடுக்கப்பட்ட மக்களுக்காக அர்ப்பணித்துக்கொண்டவர்.
வீரியமிக்க படைப்புகள்
தலைமுறை தலைமுறையாகச் சுரண்டலுக்கு உள்ளாகும் ஏழைகள், பழங்குடிகள், பெண்கள் ஆகியோரைத் தமது கதைமாந்தர்களாகப் படைத்தவர் மகாஸ்வேதா தேவி. அவர்களுடன் ஒன்றுகலந்து வாழ்ந்து, அவர்களது துயர்மிக்க வாழ்க்கையைப் பதிவுசெய்தவர்.
மலைவாழ் பழங்குடி மக்கள், விளிம்புநிலை மக்கள் ஆகியோரை அக்கறையுடன் அணுகி, அவர்களது வாழ்வுக்கான போராட்டங்களில் தன்னையும் இணைத்துக்கொண்ட போராளி. குறிப்பாக, சஃபார் என்கிற பழங்குடி மக்கள் இவரைத் தமது தாய் என்றே அழைத்தனர்.
‘கைதி எண் 1084இன் அம்மா’ என்ற நாவல் (பின்னர் கோவிந்த் நிஹலானி இயக்கத்தில் ‘ஹஸார் சவுராஸி கி மா’ என்னும் திரைப்படமாகவும் வந்தது) மூலம் தமிழ்நாட்டில் மகாஸ்வேதா தேவி மிகப் பிரபலமடைந்தார்.
தலைமறைவு இயக்கத்தில் இணைந்து, கைதாகி, சிறையில் சித்திரவதைப்படும் தன்னுடைய மகனைக் காப்பாற்றத் தன்னந்தனியாளாகப் போராடும் ஓர் அன்னையின் துயரை மிஞ்சிய மனஉறுதியும் கோழைகளாகி விட்ட பிற குடும்ப உறுப்பினர்களுமே நாவலின் கதைக் களம்.
பிர்சா முண்டாவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட ‘காட்டின் உரிமை’ என்கிற நாவல், பழங்குடி மக்களின் ஒடுக்குமுறை, சுரண்டல், நில உரிமைப் போராட்டங்கள், எல்லையற்ற அதிகாரத்துக்கு எதிரான அவர்களின் கிளர்ச்சி ஆகியவற்றைச் சொல்கிறது. இந்நாவலுக்காக 1979ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி விருதை மகாஸ்வேதா தேவி பெற்றார். வீரியமிக்க படைப்பு களுக்காக மகாஸ்வேதா தேவியை பத்மசிறீ, பத்ம விபூசண், ரமோன் மகசேசே விருது, ஞானபீட விருது ஆகியவையும் தேடி வந்தன.
ஏறத்தாழ 100 நாவல்களையும் 20 சிறுகதைத் தொகுதிகளையும் அவர் எழுதியிருக்கிறார். அவரது சிறுகதைகள், குறுநாவல்கள், கட்டுரை நூல்கள் என அனைத்து வகைப் படைப்புகளும் தமிழுக்கு வந்துள்ளன. தமிழ்நாட்டிலிருந்து வங்காளத்துக்கு வேலை நிமித்தம் சென்று கொல்கத்தாவில் வாழ்ந்து மறைந்த மொழிபெயர்ப்பாளர் சு.கிருஷ்ணமூர்த்தி, மகாஸ்வேதா தேவியின் பல நூல்களைத் தமிழுக்குக் கொண்டுவந்திருக்கிறார்.
கைதிகளுக்காகக் குரல் கொடுத்தவர்
1996ஆம் ஆண்டு, குடியரசுத் தலைவர் கே.ஆர்.நாராயணனிடமிருந்து மகாஸ்வேதா தேவி ஞானபீட விருதைப் பெற மேடை ஏறினார். பரிசைப் பெறும்முன் அவரிடம், “உங்களுக்கு நானும் ஒன்று தர விரும்புகிறேன்” என்று கூறி ஒரு மனுவைத் தந்தார். பரிசு பெற வந்த படைப்பாளி தந்த மனுவைக் குடியரசுத் தலைவரும் வாங்கிக்கொண்டார்.
மறுநாள் காலை தூக்குத் தண்டனை பெறவிருந்த மூன்று பேருக்காக மகாஸ்வேதா தேவி அளித்த கருணை மனு அது. அந்த மனுவைப் பரிசீலித்த குடியரசுத் தலைவர், குற்றவாளிகளின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றினார். இப்படித்தான் எங்கோ தொலைவில் இருண்ட சிறையறையில், – கண் முன்னால் தொங்கும் தூக்குக் கயிற்றைப் பார்த்தபடி இருந்த குற்றவாளிகளுக்காக அவர் இரங்கியதோடு நில்லாமல், இந்தியாவின் முதல் குடிமகனும் அவர்களை மனிதர்களாகப் பார்க்கும்படி செய்தார்!
சுதந்திர இந்தியாவில் (1980களில்), கொத்தடிமைகளாக விற்கப்படும் (ஆயிரக் கணக்கான பெண்களில்) பழங்குடிப் பெண்கள் நால்வரின் நெஞ்சைப்பிழியும் துயரக் கதைகளை மகாஸ்வேதா தேவி ‘ஒதுக்கப்பட்டவர்கள்’ என்கிற தலைப்பில் எழுதியுள்ளார். இவை அண்மையில் போதிவனம் பதிப்பகத்தால் தமிழில் வெளியிடப்பட்டுள்ளன.
பழங்குடிப் பெண்கள், மலைவாழ் பெண்கள், பட்டியல் ஜாதிகளைச் சேர்ந்த பெண்கள் மத்தியில் படைப்பாற்றலும் உழைப்பாற்றலும் வீரமும் நெஞ்சுரமும் கொண்ட பெண்கள் இருந்திருக்கிறார்கள். இத்தகைய பெண்களை மகாஸ்வேதா தேவி நமக்கு அறிமுகப்படுத்துகிறார். ‘வேட்டை’, ‘திரவுபதி’, ‘குந்தியும் நிஷாதப் பெண்ணும்’ ஆகியவை வெவ்வேறு சூழல்களில் வாழ நேர்ந்த வித்தியாசமான பெண்களின் இயல்பை விவரிக்கும் பல பரிமாணங்கள் கொண்ட கதைகள்.
பெண்களின் முன்னுதாரணம்
சுயமரியாதையைக் கண்ணெனக் கொண்ட பெண்கள், ஆணவம் ஒன்றையே பலமாகக் கொண்ட ஆண்களுடன் இணைந்து வாழ முடியாதல்லவா? அதுதான் மகாஸ்வேதா தேவிக்கும் நடந்தது. அவரது திருமண வாழ்க்கை நீடிக்கவில்லை. முதல் திருமணம் முறிந்தபோது பெரும் மன அழுத்தத்துக்கும் பொருளாதார நெருக்கடிக்கும் ஆளானார் மகாஸ்வேதா.
மன அழுத்தத்தில் இருந்தும் பொருளாதார நெருக்கடியில் இருந்தும் பல பெண்கள் சுய முயற்சி களால் மீண்டு வருகிறார்கள். மகாஸ்வேதா தேவியும் இதற்கு விலக்கு அல்ல. அவர் தன்னைச் சுற்றிலும் வாழ்ந்த கடைக்கோடி மக்களின் வாழ்க்கையைப் படம்பிடிக்கும் இலக்கியங்களைப் படைத்தளித்தார். பழங்குடி மக்களின் உரிமைகளை வென்றெடுக்கப் பல போராட்டங்களுக்குத் தலைமை ஏற்றார்.
அவர்களது நல்வாழ்வுக்காகப் பல நிறுவனங்களை அவர் தோற்றுவித்தார். புகழ்பெற்ற வங்கமொழி இயக்குநர் அரிந்தம் சில், மகாஸ்வேதா தேவியின் வாழ்வை ‘மகாநந்தா’ (2022) என்ற பெயரில் திரைப்படமாக எடுத்துள்ளார். மேற்கு வங்க மாநிலத்தின் முர்ஷிதாபாத்தில் உள்ள ஜாங்கிப்பூரில் மகாஸ்வேதா தேவி நினைவு அகாடமி 2018இல் நிறுவப்பட்டது. துயரில் தோய்ந்து காரிருளில் கதியற்றுக் கிடக்கும் பெரும்பான்மைப் பெண்கள் வெளிச்சத்தைக் காண விழைவார்களானால், விடியலைக் காணப் புறப்படுவார்களானால் அவர்களது பஞ்சடைந்த கண்களுக்குக் கலங்கரை விளக்கமாக என்றென்றும் ஒளியைப் பாய்ச்சிக்கொண்டிருப்பார் மகாஸ்வேதா தேவி!
மகாஸ்வேதா தேவி நூற்றாண்டு: 14.1.2026
எழுத்தாளர் அமரந்த்தா
நன்றி: ‘இந்து தமிழ் திசை’
