தூத்துக்குடி, ஜன. 31- தென் தமிழ் நாட்டின் தொழில் நுழைவு வாயிலான தூத்துக்குடி, இந்தியாவின் மிக முக்கிய மான கப்பல் கட்டும் மய்யமாக உரு வெடுக்கத் தயாராகி வருகிறது. இதற்காக ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் இணைந்து புதிய முன்னெடுப்புகளை மேற்கொண்டுள்ளன
இத்திட்டத்தைச் செயல்படுத்த ‘தேசிய கப்பல் மற்றும் கனரக தொழில் பூங்கா – தமிழ்நாடு’ (National Shipbuilding and Heavy Industry Park – Tamil Nadu) என்ற சிறப்பு நோக்க முகமை (எஸ்.பி.வி.) உருவாக்கப்பட்டுள்ளது.
கூட்டு முயற்சி
வ.உ.சி. துறைமுக கழகமும், தமிழ்நாடு அரசின் ‘சிப்காட்’ (SIPCOT) நிறுவனமும் இணைந்து இத்திட்டத்தை முன்னெடுக்கின்றன.
இந்த புதிய முகமையில் சிப்காட் மற்றும் வ.உ.சி. துறைமுகம் ஆகிய இரண்டு அமைப்புகளும் தலா 50 சதவீத பங்குகளைக் கொண்டிருக்கும்.
இந்தியாவின் கடல்சார் வணிகத் திறனை வலுப்படுத்துவதும், தென் மாவட்டங்களில் பல்லாயிரக்கணக்கா னோருக்குப் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதுமே இத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும். இதுகுறித்து தமிழ்நாடு வழிகாட்டி நிறுவன அதிகாரி கூறுகையில், இந்த மெகா கப்பல் கட்டும் தளம் அமைப்பதன் மூலம் தூத்துக்குடி பன்னாட்டுத் தரத்திலான தொழில் மய்யமாக மாறும் என்றும், இது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் பக்கபலமாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
