ஆசிரியர் அவர்களின் அறிவுரைகளை அறிவாயுதமாக ஏந்துவோம்!
பெண்ணாடம் கூட்டத்தில் ம.தி.மு.க. கொள்கை விளக்க அணி செயலாளர் ஆ.வந்தியத்தேவன் உரை
பெண்ணாடம், ஏப்.20- சமூகநீதி விழிப்புணர்வு தொடர் பிரச்சாரப் பயணம் மேற்கொண்ட தமிழர் தலைவர், திராவிடர் கழக தலைவர் ஆசிரியர்
கி.வீரமணி அவர்களுக்கும், பயணக் குழுவினருக்கும் வரவேற்பு அளிக்கும் பொதுக் கூட்டம் பெண்ணாடம் வானொலித் திடலில் 28.3.2023 அன்று மாலை 5 மணிக்கு விடுதலை வாசகர் வட்ட தலைவர் தா.கோ.சம்பந்தம் தலைமையில் நடைபெற்றது.
அனைத்துக் கட்சித் தலைவர்களும் கலந்து கொண்ட இக்கூட்டத்தில், கடலூர் மேற்கு மாவட்டப் பொறுப்பாளர் எம்.பிச்சை, மாவட்ட பொருளாளர் செல்ல செந்தில்குமார், ஒன்றியச் செயலாளர் ரவிச் சந்திரன், பேரூர் கழகச் செயலாளர் ரமேஷ், மேனாள் ஒன்றியச் செயலாளர் பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
கழகக் கொள்கை விளக்க அணிச் செயலாளர் ஆ.வந்தியத்தேவன் தமிழர் தலைவர் ஆசிரியர்
கி.வீரமணி அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து நினைவுப்பரிசு வழங்கி, பாராட்டி உரையாற்றினார். அப்போது ‘ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் அறிவுரை களை அறிவாயுதமாக ஏந்துவோம்!’ என குறிப்பிட்டார். அவருடைய உரை வருமாறு:
“சமூக நீதிப்பயணம் மேற்கொண்டு இருக்கிற தமிழர் தலைவர் ஆசிரியர் அய்யா கி.வீரமணி அவர்களையும், அவரோடு இலட்சியப் பயணம் மேற்கொண்டு இருக்கும் தோழர்களையும் வரவேற்பதற்காகவும், வாழ்த்துவதற் காகவும், பாராட்டுவதற்காகவும், பெண்ணாடம் நகரில் நடை பெற்றுக் கொண்டு இருக்கும் எழுச்சி மயமான இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்று இருக்கும் உங்கள் அனைவருக்கும் மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் சார்பிலும், திராவிட இயக்கப் போர்வாளாம் தலைவர் வைகோ அவர்களின் சார்பிலும் அன்பான வாழ்த்துகளை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன்.
அறிஞர் பெருந்தகை அண்ணாவின் நினைவு நாளில் அறிவாசான் அய்யா பெரியார் பிறந்த ஈரோடு மண்ணில் இருந்து, தமிழர் தலைவர் நம் ஆசிரியர் அவர்களின் சீரிய தலைமையில் புறப்பட்ட சமூக நீதிப் பயணத்தின் 27 ஆம் நாள் இன்று! இது 51 ஆவது கூட்டம்!
இப்பொழுது 90 வயதில் அடி எடுத்து வைத்துள்ளவர் நம் ஆசிரியர்; 33 ஆண்டுகளுக்கு முன்பே இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டு அதன் பின்பும் உடல்நலக் குறைவை எதிர்கொண்டு அதற்கான சிகிச்சையினை மேற்கொண்டு வருபவர் நம் ஆசிரியர்; இந்த நிலையில், சமூக நீதி விழிப்புணர்வு தொடர் பிரச்சாரத்தை ஆசிரியர் அறிவித்தபோது, நம்முடைய முதலமைச்சரும், தலைவர் வைகோ உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளின் தலைவர்களும், இந்த தொடர் பயணத்தை தவிர்க்குமாறு நல்லெண்ணத் துடன் அவரிடம் கேட்டுக் கொண்டார்கள். ஆனால் ஆசிரியர் அதனை ஏற்க மறுத்துவிட்டார்கள். 95 வயதிலும் அய்யா பெரியார் அவர்கள், மூத்திரவாளியை தூக்கிக் கொண்டு, மூப்பையும், உடல் கோளாறுகளையும் சமாளித்துக் கொண்டு, ஊர் ஊராக பயணம் செய்தாரே; அந்த வயதிலும் போராட்டக் களத்தில் அரிமாவாய் நின்று போராடினாரே, அந்த ஒப்பாரும் மிக்காரும் இல்லாத ஒப்பற்ற தலைவர் பெரியாரின் தொண்டன் நான் என்கிற உணர்வோடு தமிழ் மக்களை சந்தித்து வருகிறார் நம் ஆசிரியர் அய்யா வீரமணி! தொடர் பிரச்சாரப் பயணத்திற்கு இடையிலும், தமிழர் உரிமை மீட்பு போராட்டக்களத்திலும் போராளித் தலைவராக களமாடி வருகிறார் நம் ஆசிரியர் அய்யா வீரமணி!
நீண்ட இடைவெளிக்குப் பிறகு நம் பெண்ணாடம் நகருக்கு வருகை தந்துள்ள அவரை வரவேற்க ஆயிரக்கணக்கான தோழர்கள் இங்கே அணிதிரண்டு வந்துள்ளார்கள். பெண்ணாடம் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. இதனைக் காணும் போது எவ்வளவோ நினைவுகள் என் நெஞ்சில் நிழலாடுகின்றன.
பெண்ணாடம் நகரில் பெரியாரின் பாசறையான திராவிடர் கழகத்தை வேரூன்றச் செய்ய அரும் பணியாற்றிய சுயமரியாதைச் சுடரொளிகளின் உருவங்கள் எல்லாம் என் நெஞ்சத் திரையில் ஓவியமாய் ஒளிர்கின்றன. ஆசிரியர்களாக இருந்து நம் இயக்கத்திற்கு இங்கே அகரம் தீட்டிய, புலவர் அய்.அரங்கநாதன், புலவர் தொ.துரைபாண்டியன், க.நாராயணசாமி, புலவர் குழந்தைவேலன், புலவர் அமிர்தலிங்கம், செ.சுவாமி நாதன், நல்.பெரியசாமி, திருஞானசம்பந்தம், ஓட்டுநர் இராமச்சந்திரன், கென்னடி ஆறுமுகம், இரா.சுப்பையா, உமாராணி சுப்பையா, இராசம் துரைபாண்டியன், சி.மு.கோவிந்தராசன், வங்கி மேலாளர் கோவிந்தராசன், வெங்கடேசன், க.இராசவேல் என எண்ணற்ற தியாக மறவர்களின் தன்னிகரற்ற பேருழைப்பினால்தான், இங்கே நம் இயக்கம் எஃகுக் கோட்டையாக இன்றைக் கும் வலிமையுடன் இருக்கிறது.
இந்தக் கூட்ட மேடைக்கு அருகில் மின்விளக்குகளின் அலங்காரத்தினால் எழிலோடு காட்சி அளிக்கிறதே பகுத்தறிவாளர் கழக கட்டடம்; ‘பெரியார் நூலகம்’ அதன் வரலாறு நம்மை மெய் சிலிர்க்க வைக்குமே! இந்த சாலையிலே இப்போதும் இயங்கிக் கொண்டிருக்கிற அரசு மாணவர் விடுதியான திருவள்ளுவர் இல்லத்தின் முன்புறத்தில் ஓலைக்குடிசையாக அப்போது அமைக்கப் பட்டதுதான் பகுத்தறிவாளர் கழக அலுவலகம்! தந்தை பெரியார் அவர்கள்தான் அதனை திறந்து வைத்தார்கள்! அந்த அலுவலகம்தான் இடம் மாற்றம் செய்யப்பட்டு இப்போது ஓட்டுக் கட்டடமாக நகரின் மய்யப்பகுதியில் இயங்கிக் கொண்டு இருக்கிறது. அனைத்துக் கட்சித் தோழர்கள், நன்றி உணர்ச்சி உள்ள தமிழ் மக்கள் ஆகியோரின் ஆதரவோடு 50 ஆண்டுகளாக பெரியார் நூலகமாக அது இயங்கி வருகிறது என்றால், எவ்வளவோ இடர்ப்பாடுகளை இந்தக் கட்டடம் எதிர்கொண்டது. மிசா காலத்தில் இந்தக் கட்டடத்தை அகற்றிட மேற்கொண்ட முயற்சிகளை எல்லாம் தடுத்து நிறுத்தி, காப்பாற்றியது திராவிடர் கழகத்தின் தலைமை! அந்த நினைவுகள் திரைப்படம் போல என் நெஞ்சில் ஓடிக் கொண்டு இருக்கின்றன! சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பாகவே நம் நினைவில் வாழும் சிவ.பழமலை போன்றவர்களின் அரும்பெரும் முயற்சியால், தமிழ் மொழியை ஆட்சி மொழியாக்குக என்று மாநாடு கூட்டி ஆட்சியா ளர்களிடம் முறையிட்ட பெருமைமிகு ஊர்தான் நம் பெண்ணாடம்!
பெண்ணாடம் பேரூராட்சியின் சார்பில் இந்த மேடை அமைக்கப்படுவதற்கு முன்பாக, இதே இடத்தில் அறிவு ஆசான் அய்யா பெரியார் உரையாற்றி இருக்கிறார். அறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், நாவலர் நெடுஞ்செழியன், சொல்லின் செல்வர் ஈ.வெ.கி.சம்பத் ஆகிய தலைவர்கள் இதே இடத்தில் பேசியதை நாமெல்லாம் கேட்டு இருக்கிறோம். இங்கே நம் அன்பான வரவேற்பை பெற்றுக் கொண்டு இருக்கிற தமிழர் தலைவர் ஆசிரியர் அய்யா வீரமணி பலமுறை இதே இடத்தில் எழுச்சி முழக்கமிட்டு இருக்கிறார். சுமை தாங்கி என்று அழைக்கப்படுகிற இடத்தில் இருந்து நம்முடைய ஆசிரியர் அய்யா அவர்களை அலங்காரத் தேரில் அமர வைத்து ஊர்வலமாக நாம் அழைத்து வந்து இருக்கிறோம்.
அலகு குத்தி, தீச்சட்டி எடுத்து, சுயமரியாதைச் சுடரொளியான அகரம் சீகூர் மு.ஆறுமுகம் அவர்களின் சிலம்ப விளையாட்டுடன் நாம் நடத்திய மூட நம்பிக்கை ஒழிப்பு ஊர்வலம் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினைக் கண்டித்து நடத்திய தமிழர் எழுச்சிப் பேரணி, மே நாள் எழுச்சிப் பேரணி என எண்ணற்ற ஊர்வலங்களை நம் தமிழர் தலைவர் முன்னிலையில் இங்கே நடத்தி இருக் கிறோம். அந்த நிகழ்ச்சிகளின் துண்டு அறிக்கைகளைக் கூட, நம்முடைய தமிழர் தலைவர் அய்யா அவர்களிடம் இப்போது கொடுத்த போது அதனைக் கண்டு அளவற்ற மகிழ்ச்சி அடைந்தார்கள்.
இந்த நீண்ட வரலாற்றுப் பயணத்தின் தொடர்ச்சி யாகத்தான் நம் ஆசிரியர் அய்யா வீரமணி பங்கேற்கும் சமூக நீதிப் பயண தொடர் கூட்டமும் இன்றைக்கு நடை பெற்றுக் கொண்டு இருக்கிறது. இதற்கான அவசியம் என்ன? சமூக நீதிக் கொள்கைக்கு ஏற்பட்டுள்ள சவால்கள் என்ன? அதனை எப்படி நாம் முறியடிக்கப் போகிறோம்? என்பதனை எல்லாம் விளக்கி நம்முடைய ஆசிரியர் அய்யா வீரமணி இங்கே சிறப்புரை நிகழ்த்த உள்ளார்கள். இந்த நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு, ஆண்டிமடத்தில் நடைபெற உள்ள கூட்டத்தில் ஆசிரியர் உரையாற்றிட வேண்டும். எனவே மிக சுருக்க மாக என்னுடைய உரையை அமைத்துக் கொள்ள விரும்புகிறேன்.
மோடி தலைமையிலான பாஜக அரசு, டில்லியில் அமைந்துவிட்ட பிறகு, சமூக நீதி கொள்கைக்கு, மதச் சார்பின்மை கொள்கைக்கு மக்களாட்சிக் கொள்கை களுக்கு மாபெரும் சீரழிவு ஏற்பட்டு விட்டது. அதனைத் தடுத்து நிறுத்திட, மக்களை தயார்படுத்திட, அவர் களிடையே விழிப்புணர்வை உருவாக்கிடத்தான் நம்முடைய ஆசிரியர் சமூக நீதி விழிப்புணர்வு தொடர் பிரச்சாரப் பயணத்தை இப்போது நடத்தி வருகிறார். நம்முடைய ஆசிரியர் தமிழ் மக்களுக்கு மட்டும் அல்ல, நம்மைப் போன்ற பொதுவாழ்வில் பயணிக்கிற தோழர் களுக்கும், விழிப்புணர்வூட்டும் வகையில், வாழ்வியல் சிந்தனைகளை விடுதலையில் அறிக்கையாக வெளியிட்டுள்ளார்கள். அவைகளை நாம் பாடம் படிப்பதைப் போல ஊன்றிப் படித்தால், அதன் வழி நின்றால், அதன் மூலம் வெற்றிக் கனியை எளிதில் பறித்திட முடியும் என்பதை மட்டும் அன்புத் தோழர்களே, உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். 46 ஆண்டுகளுக்கு முன்பு அவர் கழகத்தின் தலைமைப் பொறுப்பேற்றதை நினைவு கூர்ந்து, விடுதலையில் (18.03.2023) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இருந்து அவரின் சிந்தனை முத்துக்களை உங்களின் அன்பான கவனத் திற்கு கொண்டுவர விரும்புகிறேன்.
‘குடி செய்வார்க் கில்லை பருவம்
மடி செய்து மானங்கருதக் கெடும்’
என்ற குறள்தான் பெரியாருக்கு மிகவும் பிடித்தமான குறள் என்று குன்றக்குடி அடிகளார் அடிக்கடி சொல்வார். நேரம், காலம் பார்க்காமல் பொதுமக்கள் நலனுக்காக நாம் தொண்டாற்ற வேண்டும் என்ற அந்த கருத் தினையே,
“காலம் என்ற ஜீவநதி எதையும் பொருட்படுத்தாமல் ஓடிக் கொண்டே இருக்கிறது! அது புயலானால் என்ன? சுட்டெரிக்கும் வெயிலானாலும், சுகம் தரும் குளிர் இரவானாலும், தென்றல் வீசிய நிலையானாலும் எதைப் பற்றியும் கவலைப்படாமல் அதன் கடமையை – அது இயற்கை வழியே அயராது ஆற்றிக் கொண்டே இருக் கிறது. அதுபோலத்தான் தந்தையாலும், அன்னையா ராலும், உருக்கி வார்க்கப்பட்ட உலைக் கூடத்து உற் பத்திப் பொருள்களான நமது கழக பாசறைத் தோழர் களான பெரியார் படை வீரர்களும்” என்று நம் ஆசிரியர் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டுகிறார்.
நேரம் காலம் பாராது பாடுபட்டால் மட்டும் போதாது, அதனையும் தாண்டி சில பண்பு நலன்களைப் பின்பற்றி வாழ வேண்டியது நம் அடிப்படைக் கடமை என்று பாடம் நடத்துகிறார் நம் ஆசிரியர்! என்ன உயர்ந்த பண்பு நலன்கள்? இதோ கேளுங்கள், ஆசிரியர் பேசுகிறார்.
“அச்சம் – நாம் அறியாதது.
அயர்வு – நமக்குத் தெரியாதது.
சபலம் – நம் அகராதியில் காணாதது.
சாதனை – நம் அன்றாட மூச்சுக்காற்று.
அவதூறு – நம் கொள்கை விளைச்சலுக்கான உரம்.
சுயநலம் – நம்மை ஒட்டக் கூடாத மனக்கிருமி.
அடக்குமுறை – நமக்குக் கிடைத்த அறைகூவல்.
எதிர்ப்பு – என்றும் நமக்குத் துச்சம். நம்மை என்றும் அசைத்துப் பார்க்க முடியாதது”
ஆசிரியர் குறிப்பிட்ட இவைகள்தான் நம் அணி கலன்கள்; நம்முடைய சீருடைகள் என்ற உணர்வோடு நாம் செயல்பட வேண்டும்!
இலட்சியத்தில் வெற்றி வாகை சூட நாம் எவ்வாறு களமாட வேண்டும் என்பதற்கும் பயிற்சி அளிக்கிறார் நம் ஆசிரியர்.
“புகழ் வேட்டையைத் துறந்து, தன்னலம் மறந்து, மான அவமானத்தை அலட்சியப் படுத்திடும் எந்தப் பொதுத் தொண்டனும் என்றும் இலட்சியத்தின் வெற்றிக் கனி பறிக்கும் வீரனே ஆவார் என்பது நமது எதிர்நீச்சல் அனுபவத்தால் நாம் கற்ற பாடம் – பெற்ற படிப்பினைகள்!
ஏச்சும், பேச்சும், ஏளனங்கள் எல்லாம் நம்மை அசைத்துப் பார்க்க முடியாது! கொள்கையும், கட்டுப் பாடும் மிக்க ஒரு பாசறைப்படையில் சாதிக்க முடியாதது எதுவுமில்லை! நமது தோழர்கள் வயது இடைவெளி சிறிதுமின்றி நம் பணியை கூட்டுப்பணியாக்கி கொண் டாடத்தக்க பெருமித உணர்வோடு, குறையொன்று மில்லை; நிறை உள்ளமே நேரிய பாதையே நம் ஈரோட் டுப் பாதை என்ற உணர்வுடன் செயல்பட வேண்டும்.
ஆர்ப்பரிக்கும் எதிரிகளிடம் – அதுவும் அறிவு நாணயமற்ற இன எதிரிகளிடம் நாம் நமது அறிவுப் போரை – கொள்கை லட்சியப் போரை நடத்திட முன் வருகிற நேரமிது! மிகுந்த எச்சரிக்கையோடு – தக்க கவசங்களுடன், குலையாத – சீரிய கட்டுப் பாட்டோடு நாம் போராட முன்வர வேண்டும்! சனாதனத்தின் சதிராட்டம் சதிவட்டமாகி, வஞ்சக வலை விரிப்பதை நமது மக்களுக்கு போதிய பிரச்சாரம் – போராட்டம் ஆகியவை மூலம் வெளிப்படுத்தி அவர்களை ஒருங் கிணைக்க வேண்டும். தமிழ்நாடு திராவிட மண் – பெரியார் மண் – சமூகநீதி மண் என்று முழங்கினால் மட்டும் போதாது!
அம்மண்ணை காவிமயமாக்கிட ஆரியம் வகுத்திடும் வியூகமும், அதன் கருவிகளும், அரசியலில் நித்தம் நித்தம் புது அவதாரங்கள் எடுத்து வரும் நிலையில் நம் மக்களுக்கு புரிதலை ஏற்படுத்தி, பொல் லாங்குகளை பொடிபடச் செய்து, எதிரித் தத்துவங்களை பின்னங்கால் பிடரியில் பட்டு ஓடும்படி விரட்டி அடித்து வெற்றி காணும் வரை நமக்கு ஓய்வில்லை! ‘முடியும் வரை’ செய்வேன் என்று கூறியதை சற்று திருத்தி அப்பணியை முடிக்கும் வரை உழைப்பதில் இன்பம் காணுவதே நம் அனைவரின் ஒரே கடமையாக அமைய வேண்டும்.”
அன்பின் இனிய தோழர்களே, ஆசிரியரின் இந்த அறிவுரைகள் திராவிடர் கழக தோழர்களுக்கு மட்டும் அல்ல; நமக்கும்தான்! இந்த அறிவுரைகளை வாழ்வியல் நெறிகளாக – வழிகாட்டும் கலங்கரை விளக்கின் ஒளியாக நாம் எண்ணி அதன் வழி நிற்க வேண்டும். எதிரிகளோடு களத்தில் நிற்கும் நமக்கு அவைகள் அறிவாயுதங்கள் – படைக்கலன்கள் என்பதை உணர்ந்து அவைகளை இதயத்தில் ஏந்தி போர் முனையில் கம்பீரமாக அணிவகுத்துச் செல்ல வேண்டும்.
இவ்வளவு சீரழிவுகளுக்கும் மூலக் காரணமான சங்பரிவார் காவிக் கூட்டத்தை டில்லி ஆட்சி பீடத்தில் இருந்து அகற்றும் ஜனநாயக அறப்போரில், ஆசிரியர் அய்யா வீரமணியின் அறிவார்ந்த சிந்தனைகளை அறி வாயுதமாக ஏந்தி, நம் இலட்சியங்களை வென்றெடுப் போம்! – வாகை சூடுவோம்! என்று சூளுரைத்து என் உரையை நிறைவு செய்கிறேன். நன்றி வணக்கம்.
இவ்வாறு ஆ.வந்தியத்தேவன் உரை ஆற்றினார்.