இப்பதிவானது காந்தியாருக்கும், மன்னார்குடி சக்கரவர்த்தியாச்சாரியார் அவர்களுக்கும் 1927ஆம் ஆண்டு நடந்த விவாதமாகும். இவ்விவாதம் வர்ணாஸ்ரம தர்மம் எப்படி மதத்தின் பெயரால் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளதையும், இந்துத்துவ ஸநாதன வாதிகள் காந்தியாரை ஏன் கொலை செய்தனர் என்பதையும் மிகத் தெளிவாக விளக்கும்.
காந்தியார் அவர்களுக்கும் மன்னார்குடி அஹோபிலமடம், வித்வான் தில்லயம்பூர் சிறீமான் சக்கரவர்த்தியாச்சாரியாருக்குமிடையில் நடந்த உரையாடல்தான் இந்தப் பதிவு. இந்த விவாதத்தை “இவரா மஹாத்மா?”எனும் தலைப்பில், அய்ப்பசி 1927 ஆம் ஆண்டு, ‘ஆர்ய தர்மம்’ எனும் சஞ்சிகையில் கட்டுரையாக எழுதியிருக்கிறார் செம்மங்குடி எம்.எஸ்.சுந்தரேசய்யர்.
காந்தியாருக்கு எதிராக வைதிக ஸநாதனவாதிகள் வைத்த கடுமையான குற்றச் சாட்டுகள் அடங்கிய கட்டுரை இது. வாசிக்கிறவர்களுக்கு ஸநாதனத்தின் உண்மை விளங்கும் என்பது திண்ணம்.
இனி கட்டுரை:

‘இவரா மஹாத்மா?’
‘‘மன்னார்குடி றாஜாந் தோப்பில் அஹோபில மடம், வித்வான் தில்லயம்பூர் சிறீமான் சக்கரவர்த்தி யாச்சாரியாருக்கும் மஹாத்மாவென்ற போர்வைக்குள் மறைந்து,சாஸ்திரங்களுக்கு விருத்தமாகப் பிரச்சாரம் செய்யக் கிளம்பியிருக்கும் காந்தியாருக்கும், நடந்த சம்பாஷணையை நம் நேயர்களுக்குத் தெரியப் படுத்துவது நலம் என்று எண்ணி இதை சுதேசமித்திரனி லிருந்து எழுதுகிறேன். நம் வாசகர்கள் இதிலிருந்து காந்தியாரின் விபரீதபுத்திப் போக்கை நன்கு தெரிந்து இவர் மஹாத்மாவா என்பதை ஊகித்துக் கொள்ளுங்கள். சம்பாஷனை பின்வருமாறு:
சுவாமிகள்: இந்த மஹாத்மாகிய காந்தியே நமது புராதனமான வர்ணாசிரம தர்மங்களை காப்பாற்ற வேண்டும். அப்படிக் கில்லாது அந்த தர்மத்திற்கு விருத்தமாக, தீண்டாமை, விதவா விவாகம் முதலிய வற்றைப் பற்றி பிரச்சாரம் செய்தால், பாமர ஜனங்கள் அக்கொள்கைகளை நம்பி அதைப் பின்பற்றுவார்கள். ஆகையால் அப்படிச் செய்யாமல், வர்ணாசிரம தர்மங்களைப் பிரச்சாரம் செய்ய வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன். கீதையில் 13 ஆவது அத்தியாயம் 4 ஆவது ஸ்லோகத்தில் கூறியிருப்பதாவது:-
ஹே அர்ஜுனா! நான் உனக்குச் சொல்லுகிற இந்த விஷயமானது முன்னமேயே வேதங்கள், மகரிஷிகள், வியாசர், பிரம்மசூத்திரம் இவைகளில் சொல்லப்பட்டிருக்கிறது. ஆகையால், அதன் படிக்கு வேதம், ஸ்மிருதிகள் முதலியவைகளெல்லாம் ஹிந்து மதத்திற்கு ப்ரமாணம்தான். அப்படி மன்வாதி ரிஷிகளால் சொல்லப்பட்ட ஸ்மிருதிகளில், தீண்டாமை அவசியமென்றும், விதவா விவாஹம், ப்ரௌடா விவாஹம் (பெண்கள் வயதுக்கு வந்த பிறகு விவாஹம் செய்வது) கூடாதென்றும் காணப்படுகிறது. கலியுகத்திற்கு முக்கியமான பராசர ஸ்மிருதியும் அப்படியே சொல்கிறது. பராசர ஸ்மிருதியும், மன்வாதிஸ்மிருதிகளும் ஒருமைப்பட்டு சொல்லுகிற விஷயத்தில் அவைகளெல்லாம் ப்ரமாணமே.
காந்தி: இந்த கீதாச்லோகமானது தெய்வத்தைப் பற்றிச் சொல்வதால் இந்த இடத்திற்கு இப்படி அர்த்தம் சொல்லக் கூடாது. அப்படி அர்த்தம் சொன்னால் என் கண்ணில் மண்ணை போடுகிறது போல் இருக்கிறது.
சுவாமிகள்: அந்த இடம் தெய்வத்தைப் பற்றி சொல்லவில்லை என்று அதன் அர்த்தத்தை மறுபடியும் சொல்ல ஆரம்பித்த பொழுது
காந்தி: அந்தச்லோக அர்த்தம் இப்பொழுது வேண்டாம். நான் பண்டிதனல்ல.என்னிடம் யுக்திவாதம் சொல்லாமல், குழந்தைகளுக்குச் சொல்லுகிறது போல் தெளிவாகச் சொல்லவேண்டும்.
சுவாமிகள்: யுக்தி வாதமில்லாமலேயே சொல்லுகிறேன். அந்த ஸ்மிருதிகளின்படி நம்மவர்களில் தீண்டக் கூடாதவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் இருவகைப்பட்டவர்கள். அதில் கிரியையினால், அதாவது தன் ஜாதி கர்மாக்களை அனுஷ்டிக்காமல், பிரஷ்டர்களாய்ப் போகிறவர்கள், அவஸ்தையால் (அதாவது பிரசவித்த ஸ்திரீகள்,தூர ஸ்திரீகள் முதலியன) இவர்களும், இவர்களுக்கு இவ்வளவு தூரம் விலக வேண்டுமென்றும் இவர்கள் நிழல் இவ்வளவு தூரம்மேல் படக் கூடாதென்றும், சொல்லப் பட்டிருக்கின்றது.இதே மாதிரி ஜாதியால்(பிறப்பால்) தீண்டப்படாதவர்களும் உண்டு.அவர்களுக்கும் விலக வேண்டிய முறையைப் பற்றி சாஸ்திரம் சொல்லுகிறது.இவர்கள் நம்போல் தேவாலயங்களில் பிரவேசிக்கக் கூடாதென்றும்,தெளிவாயும்,நிஷ்பக்ஷபாதமாயும் காணப்படுகிறது.
காந்தி: இப்போது தீண்டாமையைப் பற்றி மட்டும் பேசுவோம்.
சுவாமிகள்: வியாசர் பிரம்ம சூத்திரத்திலும் தீண்டாமையின் அவசியத்தைப் பற்றி சொல்லப்படுகிறது.
காந்தி: ஸ்மிருதிகளெல்லாம் ஹிந்து தர்மத்தைப் போதிய அளவு சொல்லவில்லை. இம்மாதிரியான இடங்களை ப்ரமாணமாக ஒத்துக்கொண்டால் எங்கள் கொள்கைகளுக்கு விரோதம்.சில இடங்களைத்தான் ப்ரமாணமாகக் கொள்ளலாம்.
சுவாமிகள்: அந்த ஸ்மிருதிகளில் எது பிரமாணம்? எது அப்பிரமாணம்? ப்ரமாணமாக வைத்துக்கொள்ள வேண்டிய அம்சங்களை எந்தக் காரணங்களைக் கொண்டு ஒத்துக் கொள்ளுகிறது. விலக்க வேண்டியதை எப்படி விலக்குகிறது.ஒரு ஸ்மிருதியில் சில பாகம் பிரமாணம், சிலது இல்லை என்று சொல்ல முடியாது. ஒத்துக்கொண்டால் முழுமையும் ஒத்துக்கொள்ள வேண்டும், அப்படிக்கில்லாமல் ஒரு பாகத்தை மட்டும் ப்ரமாணமாக ஒத்துக் கொள்ள என்ன காரணம்?
காந்தி: சத்தியம்தான் ப்ரமாணம். சத்தியத்தைக் கொண்டு பார்க்குமிடத்தில் எது யுக்தமாகத் தோன்றுகிறதோ அதுதான் பிரமாணம்.மற்றவை அப்ரமாணம்.
சுவாமிகள்: அப்படியானால் சாஸ்திரம் ப்ரமா ணமா? அல்லது அப்ரமாணமா? அல்லது சொந்த அபிப்பிராயம் ப்ரமாணமா? அப்படி அபிப்ராயமே ப்ரமாணமாயிருந்தால் தன் தகப்பனுக்கு ச்ரார்த்தம் செய்ய வேண்டிவர அவன் நல்ல லோகத்திற்குப் போயி ருக்கிறானா, மறு உலகம் இருக்கிறதா, இல்லையேல் அவன் சரீரமே ஆத்மாவாக இருக்கும் பட்சத்தில்,இவனோட ஆத்மாவும் போய்விட்டதால்,ச்ரார்த்தம் பண்ண வேண் டுமா வேண்டாமா என்று சந்தேகம் வர அதற்காக சாஸ்தி ரங்களைப் பார்த்து சிராத்தம் செய்வது வேண்டாமா?
காந்தி: அவ்விஷயம் உண்மையாக அவன் மனதுக்கு படாவிட்டால்,ச்ரார்த்தம் செய்ய வேண்டியதில்லை.
சுவாமிகள்: தூர ஸ்திரீகளை நாம் ஏன் விலக்க வேண்டும்?
காந்தி: அவர்களிடம் அசுத்தமிருக்கிறது.
சுவாமிகள்: அவர்கள் முகம் அசுத்தமா? கைகள் அசுத்தமா? எவை அசுத்தம்? அவர்களை நாம் பார்க்கும் பொழுது யாதொரு அசுத்தமும் தெரியவில்லையே, அவர்கள் பர்த்தா முதலியவர்கள் அவர்களிடம் தினம்தோறும் பழகியவர்கள் தானே.
காந்தி: மனோ அபிப்ராயம்தான் மேலும், தீண்டக் கூடாதவர்கள், நம்போல் மனிதர்கள் தானே. அவர்களை மனிதரென்று கருதினால் ஏன் விலக்க வேண்டும்?
சுவாமிகள்: நல்லது நமது நாட்டில் சமையல் செய்ய நெருப்பில்லாவிட்டால் அதற்காக பக்கத்து வீட்டில் நெருப்பு வாங்கிக் கொள்கிறோம்.ஸ்மசான நெருப்பை ஏன் உபயோகப்படுத்துகிறதில்லை, அதனால் சத்தியத்திற்கு என்ன பங்கம் இரண்டும் நெருப்பு தானே.
காந்தி: அம்மாதிரி நெருப்புப்போல் தீண்டப்படாதவர் களுக்கும், நமக்கும் என்ன ஸ்வரூப பேதமிருக்கிறது?
சுவாமிகள்: ஸ்ரீ ராமாயணத்தில் திருசங்கு மகாராஜனுக்கு வஸிஷ்ட புத்ர சாபத்தால் மறுநாள் காலையில் எழுந்திருக்கும்போது, ராஜரூபம் மாறிச் சண்டாள ரூபம் வந்துவிட்டது.தலை மயிர் கருப்பு மாறி செம்மட்டைய்ப் போய்விட்டது.இடுப்பில் அணிந்திருந்த பட்டு பீதாம்பரங்களெல்லாம் அழுக்கடைந்து கந்தலாயின.அவன் ஆபரணங்களெல்லாம் இரும்பாய் போய்விட்டன.அவன் மந்திரி முதலான பரிஜனங்கள் அவனைச் சண்டாளனென்று, தனியாக விட்டு விலகி விட்டார்கள். ஆகையால் ஸ்வரூப பேதமுண்டு. (பாலகாண்டம் பார்க்கவும்)
காந்தி: அப்படியானால் எங்கள் கொள்கைகளெல்லாம் போய்விடும், கருணையினால் அவனுக்கு ஆலயப் பிரவேசம் செய்து வைக்கிறதா? வேண்டாமா? அவனுக்கு தெய்வம் வேண்டாமா?
சுவாமிகள்: உத்ஸவ காலங்களிலும் தேர் இழுக்கும் காலங்களிலும்,சுவாமியை தரிசனம் செய்து கொள்ளலாம்.கோயிலுக்குள் நுழைந்து சுவாமி தரிசனம் செய்ய வேண்டும் என்பது அவசியமில்லை.
கருணையினால் ஆலயப்பிரவேசம் முதலியவைகள் பண்ணி வைக்காமல், வேறு அவர்களுக்கு நாம் என்ன செய்யக் கிடக்கிறது?
அவர்களுக்கு நாம் வீடு கட்டிக் கொடுக்கலாம்.அன்ன வஸ்திர தானம் செய்யலாம்.கைராட்டினம் வாங்கிக் கொடுத்துதவலாம்.வர்ணாசிரம தர்மத்திற்கு ஒன்றும் விரோதமாக செய்யக்கூடாதென்று மட்டுமே என் கோரிக்கை. நம் புராதனமான வர்ணாசிரம தர்மங்களை காந்தி அவர்கள் ரக்ஷணம் செய்ய வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன். இத்துடன் சம்பாஷனை முடிந்தது.
மேற்கண்ட சம்பாஷனை நடக்கும் பொழுது சிறீ மான்கள் குன்னியூர் சிவசுப்பிரமணிய்யர், எம்.எல்.சி. தாலுகா போர்டு பிரசிடென்ட் கோபாலசாமி முதலியார்,கும்பகோணம் வி.பந்துலுவைய்யர், பிச்சையா முதலியார், சேரங்குளம் எஸ்.ஆர். ராஜகோபாலய்யங்கார் முதலிய பலரும் கூட இருந்ததாகத் தெரிகின்றது.
செட்டிநாட்டில் இவர் இந்நாட்டில் உள்ள கோயில்கள் விபச்சார விடுதிகளை விட எவ்விதத்திலும் சிறந்தனவாகவில்லையென்று நான் வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்று உபதேசம் செய்கிறார்.
தஞ்சாவூரில் செய்த பிரசங்கத்தில் வர்ணாசிரம தர்மங்களை ஒப்புக் கொண்டும் அதை எவ்விதத்திலும் அழிக்கவும் முடியாதென்று கூறுகிறார்.
கோயில்களில் தெய்வமேயில்லை என்று சொல்லும் இவர் ஏன் பஞ்சமர்களை கோயிலுக்குள் விட வேண்டுமென்று கூறுகிறார்?
ஒரு சமயம் கோயிலுக்குள் தெய்வமிருந்தால்,தான் பிரசங்கம் செய்யும் பொழுது ஏன் நேரில்வந்து தன் பிரசங்கம் நடைபெறாமலோ,அல்லது நாக்கை இப்படி பேச முடியாமல் செய்திருக்கக் கூடாதென்று கருதுகிறாரோ தெரியவில்லை.
ஏ கிருஷ்ண பகவானே! கலியுக ஆரம்பத்திலேயே இப்படி வர்ணாசிரம தர்மங்களை அழிக்க முற்பட்டிருக்கும் துராத்மாக்களை அடக்காமல் விட்டு விட்டீரே. இனியும் பொறுத்துக் கொண்டிருப்பீரேயானால் இனி ஈஸ்வர நாமாவை உச்சரிக்கவே(ஸ்மரிக்க) கூடாதென்றும் கோயில்களில் தெய்வமில்லாத தாலும்,கோயில்கள் எல்லாவற்றையும் இடித்தும் நிலங்களையும் விற்று ஸ்வராஜ்யம் வாங்க சட்டமும் செய்ய பல துராத்மாக்கள் கிளம்பி விடுவார்கள்.
– M.S. சுந்தரேசய்யர், செம்மங்குடி
(‘ஆர்யதர்மம்’ சஞ்சிகை – அய்ப்பசி – 1927)
