எந்த நிலையிலும், “நம் பாரம்பரியத்தை மறக்கவோ, விட்டுக்கொடுக்கவோ கூடாது,” என சென்னையில் நடந்த நிகழ்ச்சியில், காஞ்சி மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி பேசினார். சென்னை, எழும்பூரில் உள்ள தனியார் மண்டபத் தில், 1,000 மாணவியர் பங்கேற்ற, ‘சஹஸ்ரதல பத்மா ராதனம்’ என்ற ஸ்லோகம் பாடும் நிகழ்ச்சி அண்மையில் நடந்தது. அதில், விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பேசியதாவது:
‘‘நம் பாரம்பரியத்தை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் நிகழ்ச்சியான இந்த ஸ்லோகம் பாடும் நிகழ்ச்சி, ஆறாவது ஆண்டாக நடைபெறும் இந்த நிகழ்ச்சி குழந்தைகளின் மனதில், நம் பாரம்பரியத்தின் வேர்களை ஆராயும் உத்வேகத்தைத் தரும்.
நம் பாரம்பரியம் அமைதியானது. உலகில் நாகரிகங்கள் எத்தனையோ தோன்றி, அது வெவ்வேறு திசைகளில் சென்று, மிகவும் பெருமையான அடையாளங்களை இழந்துவிட்டன. நாகரிக நாடுகள் என பேசப்பட்ட நாடுகள் தற்போது இந்திய பாரம் பரியத்தை ஆராய்ந்தும் வருகின்றனர். வெளிநாடுகளில் 1,000, 2,000 ஆண்டு வரலாறு என்பதெல்லாம் பெரிய விஷயமாக உள்ள போது, நம் நாட்டில் அது சர்வ சாதாரணமானதாக உள்ளதற்குக் காரணம், நாம் நம் பாரம்பரியத்தை விடாமல் கடைப்பிடிப்பதுதான்.’’
‘‘குடிசை – வீடாகவும்; வீடு-அடுக்ககங்களாகவும் தொடர்கிறது. மாறி வரும் காலம். படிப்பு, வேலைக்கு ஏற்ப மாறுகிறது. ஆனால், அன்றிருந்த ஸ்லோகங்கள்தான் என்றும் நிலைக்கும். அதுதான், நம் குரு பரம்பரையின் சிறப்பு!’’
‘‘நாம் எந்த நிலைக்கு சென்றாலும், நம் பழமையை மறக்காமல், சமஸ்கிருதம், வேதம், சங்கீதம் மற்றும் பூஜைகளைத் தொடர வேண்டும்.’’
‘‘நெறிகளைக் கடைப்பிடிக்க நம் வேதங்களில் கூறிய படி, வாழ்க்கையில் தர்மம் உதவும். எந்த நிலையிலும் இது போன்ற நிகழ்ச்சிகளை, விட்டுக்கொடுக்கவோ நம் பாரம்பரியத்தை மறக்கவோ, விலக்கவோ கூடாது.’’ இவ்வாறு அவர் பேசினார்.
‘தினமலர்’ 26.1.2026
நம் பாரம்பரியம் என்று புகழ்ந்த தள்ளுகிறாரே காஞ்சி சங்கராச்சாரியார் – அது என்ன ‘நமது பாரம்பரியம்’ – அதை விளக்க வேண்டியதுதானே!
மாற்றம் என்பதுதான் மாறாதது என்பது உலகியலாகும்.
சமுத்திரத்தைத் தாண்டிப் போகக் கூடாது என்கிறது ஹிந்து சாஸ்திரம். இந்த அறிவுரையைப் பார்ப்பனர் களிடத்தில் சொல்லுவாரா விஜயேந்திர சரஸ்வதி காரு?
‘‘பழைய நாளில் பிராம்மணன் பிச்சை எடுப்பான்; மற்ற ஜாதிக்காரர்கள் நாமாகக் கொடுத்தாலும் வாங்கிக் கொள்ள மாட்டார்கள். ‘பிச்சைக்காரப் பார்ப்பான் தெரு’ என்று கும்பகோணத்தில் ஒரு தெருகூட இருக்கிறது; பிராம்மண சந்நியாசிகள் அன்னப் பிச்சை வாங்குவார்கள்; பிராம்மணர்கள் சந்தி விருத்தி செய்வார்கள்; மற்ற ஜாதிக்காரர்கள் பிச்சை வாங்குவதில்லை; ‘ஏதாவது வேலை செய்துவிட்டு, அதைக் கூலியாகப் பெற்றுக் கொள்கிறேன்’ என்பார்கள். இப்போது இவன் செய்கிற காரியம் நல்லதோ, கெட்டதோ அப்படியே மற்றவர்களும் செய்ய ஆரம்பித்து விட்டார்கள்’’ என்று காஞ்சி மூத்த சங்கராச்சாரியார் என்று கூறப்பட்ட சந்திரசேகரேந்திர சரஸ்வதி கூறியுள்ளார். (‘காஞ்சி காமகோடி உபந்நியாசங்கள் (முதற்பகுதி) ‘கலைமகள்’ 1957–1958 பக்கம் 28).
மூத்த சங்கராச்சாரியாரின் இந்த உபதேசப்படி ‘பார்ப்பனர்கள் பிச்சை எடுத்து வாழ வேண்டும்’ என்று கூறுவாரா விஜயேந்திரர்?
‘‘எந்த நிலையிலும் நம் பாரம்பரியத்தை மறக்கவோ, விட்டுக் கொடுக்கவோ கூடாது’’ – என்று எழும்பூர் நிகழ்ச்சியில் பேசி இருக்கிறாரே விஜயேந்திரர் – இவரின் மூத்த குரு சந்திரசேகரேந்திர சரஸ்வதி கூறி இருப்பதுதானே அந்தப் பாரம்பரியம் – அதனைப் பின்பற்றத் தயாரா?
தந்தை பெரியாரால் ‘பல்லக்கில் போகும் காலம்’ மலையேறி, கால்நடையாகத்தானே நடந்து சென்றனர் சங்கராச்சாரியார்கள். ஆனால், விஜயேந்திரர் விலை உயர்ந்த நவீன காரில் தானே பவனி வருகிறார் – ஏன், விமானத்திலும் பறக்கத்தானே செய்கிறார்!
ஊருக்குத்தான் உபதேசமோ? ‘‘வைத்தியரே முதலில் உங்கள் நோயைக் குணப்படுத்திக் கொள்ளுங்கள்!’’ என்ற பழமொழிதான் நினைவிற்கு வருகிறது.
