சென்னை, ஜன.30 இந்திய பன் னாட்டு கல்வி மாநாட்டில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திருவள் ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே 872 ஏக்கர் பரப்பளவில் அமைய உள்ள தமிழ்நாடு அறிவுசார் நகரத்துக்கு அடிக்கல் நாட்டினார்.
அறிவுசார் நகரம்
இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு நேற்று (29.1.2026) வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: வறுமை ஒழிப்பு, கல்வி, சுகாதாரம் ஆகியவற்றில் மற்ற மாநிலங்களைவிட சிறந்த முன்னோடி திட்டங்களை செயல்படுத்தியதன் மூலம், தமிழ்நாடு உற்பத்தித்துறையின் மய்யமாகவும், இந்தியாவில் கல்வித் தலைநகரமாகவும் திகழ்கிறது. உலகின் முதல் 50 பொருளாதாரங்களுக்கு நிகரான வலிமையுடன், 11.19 சத வீதம் என்ற இரட்டை இலக்க வளர்ச் சியை எட்டிய இந்தியாவின் ஒரே மாநிலமாகவும் விளங்குகிறது. வலுவான உயர்கல்வி கட்டமைப்பைக் கொண்ட மாநிலங்களில் ஒன்றாகவும், மிக அதிக மாணவர் சேர்க்கை கொண்ட மாநிலமாகவும் திகழ்கிறது
உலகளாவிய கல்வியில் பங்கேற்பது மட்டுமின்றி, அதில் தலைமை தாங்கு வதுதான் தமிழ்நாடு அரசின் லட்சியம். அதனால்தான் இங்கிலாந்தை சேர்ந்த தேசிய இந்திய மாணவர்கள் மற்றும் முன்னாள் மாணவர் சங்கத்துடன் இணைந்து, முக்கியத்துவம் வாய்ந்த இந்திய பன்னாட்டு கல்வி மாநாட்டை, இந்தியாவில் முதல்முறையாக தமிழ்நாடு அரசு நடத்துகிறது. கல்வி, புத்தாக்கம், வேலைவாய்ப்பு, உலகளாவிய கூட் டாண்மை ஆகிய அனைத்தும் ஒன்றி ணையும் ஒரு தளமாக இந்த மாநாடு விளங்குகிறது.
மாநாட்டின்போது, திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை வட்டத்தில் உள்ள செங்காத்துகுளம், மேல்மளிகைப்பட்டு, இனாம்பாக்கம் கிராமத்தில் 872 ஏக்கர் பரப்பில் அமைக்கப்பட உள்ள தமிழ்நாடு அறிவுசார் நகரத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
உயர்கல்வி, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவு ஆகியவற்றை ஒருங்கிணைத்து, தமிழ்நாட்டை அறிவுசார் சிறப்புக்கான உலகளாவிய மய்யமாக நிலைநிறுத்தும் நோக்குடன் இந்த நகரம் அமைக்கப்படுகிறது. இது கல்வி, ஆராய்ச்சி மற்றும் தொழில் நிறுவனங்கள் தடையின்றி ஒன்றிணையும் ஒருங்கிணைந்த நிலப்பரப்பாக இருக்கும்.
ரூ.355 கோடிக்கு ஒப்பந்தம்
மாநாட்டில், தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனம் பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்களுடன் 5 விருப்பக் கடிதங்களில் கையெழுத்திட் டது. மேலும், 8 புரிந்துணர்வு ஒப்பந்தங் களையும் மேற்கொண்டது. இதன் மூலம் ரூ.355 கோடி முதலீட்டில் நேரடியாக 2,255 பேர், மறைமுகமாக 9,650 பேர் என மொத்தம் 11,905 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
மாநாட்டில் அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, கோவி.செழியன், டி.ஆர்.பி. ராஜா, நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு, வர்த்தகத் துறை செயலர் வி.அருண்ராய், உயர்கல்வித் துறை செயலர் பொ.சங்கர், டிட்கோ தலைவர் சந்தியா வேணுகோபால் சர்மா, மேலாண் இயக்குநர் சந்தீப் நந்தூரி ஆகியோர் பங்கேற்றனர்.
