சென்னை, ஜன.30 சர்க்கரை நோயைக் கண்டறிய இனி ஊசி செலுத்தி ரத்தம் எடுக்கத் தேவையில்லை; கண்ணின் விழித்திரையை ஒளிப்படம் எடுப்பதன் மூலமே பாதிப்பைக் கண்டறியலாம் என்ற புரட்சிகரமான புதிய நுட்பத்தை மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இந்த அதிநவீன ஆய்வை மெட்ராஸ் சர்க்கரை நோய் ஆராய்ச்சி மய்யம், மங்களூரு ஏனபோயா நிகர்நிலைப் பல்கலைக்கழகம் மற்றும் அமெரிக்காவின் எமோரி பல்கலைக்கழகம் ஆகிய கல்வி நிறுவனங்கள் இணைந்து மேற்கொண்டுள்ளன. இந்த ஆய்வின் முடிவுகள் தற்போது பன்னாட்டு மருத்துவ ஆய்விதழில் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளன.
10 கோடிக்கு அதிகம்
இது குறித்து மெட்ராஸ் சர்க்கரை நோய் ஆராய்ச்சி மய்யத்தின் தலைவர் டாக்டர் வி. மோகன் கூறியதாவது: “இந்தியாவில் 10 கோடிக்கும் அதிகமானோர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். பலருக்கு தங்களுக்கு நோய் இருப்பதே தெரிவதில்லை. ரத்தப் பரிசோதனை செய்யத் தயங்குவதே இதற்கு முக்கியக் காரணம். ஆனால், இந்த புதிய முறையில் கண்ணின் பின்புறத்தில் உள்ள விழித்திரையை (Retina) மிகத் துல்லியமாகப் ஒளிப்படம் எடுத்தால் போதும். அதில் உள்ள ரத்த நாளங்களில் ஏற்படும் நுட்பமான மாற்றங்களை செயற்கை நுண்ணறிவு (ஏஅய்) தொழில்நுட்பம் கொண்டு ஆராய்ந்து, சர்க்கரை நோய் பாதிப்பை ஆரம்ப நிலையிலேயே துல்லியமாகக் கண்டறிய முடியும்.”
ஊசி இல்லா பரிசோதனை
ரத்த மாதிரிகள் சேகரிக்கத் தேவையில்லை என்பதால் வலி இல்லாத முறையில் வேகமான முடிவுகள் கிடைக்கின்றன. ஏ.அய். தொழில்நுட்பம் மூலம் மிக விரைவாக முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாம்.
அறிகுறிகள் வெளியே தெரிவதற்கு முன்னரே பாதிப்பை உறுதி செய்ய முடியும். இந்தக் கண்டுபிடிப்பு சர்க்கரை நோய் கண்டறிதலில் ஒரு மைல்கல்லாகக் கருதப்படுகிறது, குறிப்பாக மருத்துவ வசதிகள் குறைவாக உள்ள இடங் களிலும், பரிசோதனைக்குத் தயங்குபவர்களிடமும் இது பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கிட திறனாய்வுத் தேர்வு
நாளை நடைபெறுகிறது
சென்னை, ஜன.30 பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்குவதற்கான முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வு தமிழ்நாடு முழுவதும் நாளை (31.1.2026) நடைபெற உள்ளது.
திறனாய்வுத் தேர்வு
தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் 10-ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இதில் தேர்ச்சி பெறும் 1,000 மாணவ, மாணவிகளுக்கு, பிளஸ் 2 முடிக்கும் வரை ஆண்டுக்கு ரூ.10,000 வீதம் உதவித் தொகை வழங்கப்படும்.
அந்த வகையில், நடப்பு ஆண்டுக்கான தேர்வு நாளை (31.1.2026) நடைபெற உள்ளது. முதல் தாள் (கணிதம்) தேர்வு காலை 10-12 மணி வரையும், 2-ஆம் தாள் (அறிவியல், சமூக அறிவியல்) தேர்வு மதியம் 2-4 மணி வரையும் நடைபெறும்.
ஒவ்வொரு அறையிலும் 20 பேர் மட்டுமே தேர்வு எழுத ஏற்பாடு செய்ய வேண்டும். அவர்களுக்கு வழங்கப்பட்ட ஓஎம்ஆர் விடைத்தாள், அவர்களது பதிவெண்ணுக்கு உரியது தானா என்பதை தேர்வு அனுமதிச் சீட்டுடன் ஒப்பிட்டு உறுதிசெய்ய வேண்டும். தேர்வர்கள் எக்காரணம் கொண்டும் வினாத்தாளில் விடைகளை குறிக்கக் கூடாது என்று அறிவுறுத்த வேண்டும் என்பது உட்பட தேர்வு மற்றும் அறைக் கண்காணிப்பாளர்களுக்கு பல்வேறு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.
தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில்
திருக்குறள் ஒப்பித்தல் போட்டி
பொதுமக்களுக்குப் பரிசு
இயக்குநர் அவ்வை அருள் வழங்கினார்
சென்னை, ஜன.30 தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் நடத்தப்பட்ட திருக்குறள் ஒப்பித்தல் போட்டியில் வெற்றி பெற்ற பொதுமக்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 2024-ஆம் ஆண்டு டிசம்பா் மாதம் நடைபெற்ற திருவள்ளுவா் சிலை வெள்ளி விழா நிகழ்ச்சியில் ஆண்டுதோறும் குறள் வாரம் கொண்டாடப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா். இதையொட்டி தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் திருக்குறள் மாநாடு, விநாடி-வினா உள்ளிட்ட பல்வேறு போட்டிகள், நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், சென்னை மாவட்டத்தில் பொதுமக்கள் மட்டும் (அரசுப் பணியில் உள்ளோா், பள்ளி, கல்லூரி மாணவா்கள், ஆசிரியா்கள் நீங்கலாக) கலந்து கொள்ளும் குறள் சாா்ந்த ஓவியப் போட்டிகள், குறள் ஒப்பித்தல் போட்டிகள் சென்னை வள்ளுவா் கோட்டத்தில் 28.1.2026 அன்று நடைபெற்றன. போட்டி களில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனா்.
பொதுமக்களுக்கான குறள் சாா்ந்த ஓவியப் போட்டியில் முதல் பரிசுக்கு ரா.திவ்யா, இரண்டாம் பரிசு வி.கோதை, மூன்றாம் பரிசு அ.யாழினி பா்வதம் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.
இவா்களுக்கு முறையே ரூ.5 ஆயிரம், 3 ஆயிரம், ரூ.2 ஆயிரம் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.
பொதுமக்களுக்கான குறள் ஒப்பித்தல் போட்டியில் பா.தாமோதரன், க.ஜோதி, அ.பெவினாபானு, மா.சீனிவாசன், மு.மஹபூப் ஜெய்லானி ஆகிய 5 பேருக்கு முதல் பரிசும் (தலா ரூ.5 ஆயிரம்), தேன்மொழி, வ.தனலட்சுமி, ஏ.ஜனனி, சோ.சண்முகசுந்தரம், மு.கீதா ஆகிய 5 பேருக்கு இரண்டாம் பரிசும் (தலா ரூ.3 ஆயிரம்), ஆ.மதிவாணன், ஆ.சிவசங்கரி, கா.சிவசக்தி, ஞா.ஜீவிதா, செ.மீனாட்சி சுந்தரி ஆகிய 5 பேருக்கு மூன்றாம் பரிசும் (தலா ரூ.2 ஆயிரம்) வழங்கப்பட்டது. வெற்றி பெற்றவா் களுக்கு தமிழ் வளா்ச்சித் துறை இயக்குநா் அவ்வை ந.அருள் பரிசுகளை வழங்கினாா்.
தொடா்ந்து சென்னை மாவட்ட பள்ளி மாணவா் களுக்கு ‘ஆக்கம் அதா்வினாய்ச் செல்லும்’ என்ற தலைப்பில் வழக்குரைஞா் ‘திருக்குறள்’ தாமோதரன் தலைமையில் பயிலரங்கம் நடைபெற்றது.
