திருச்சி, ஜன.29- சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு திருச்சியில் 10 லட்சம் பேர் பங்கேற்கும் மாபெரும் தி.மு.க. மாநில மாநாடு நடைபெற உள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற தி.மு.க. முன்னாள் உறுப்பினர் பரணிகுமார் இல்ல திருமண விழாதிருச்சியில் நேற்று (29.1.2026) நடை பெற்றது. விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மனைவி துர்கா ஸ்டாலினுடன் நேரில் வந்து திருமணத்தை நடத்தி வைத்தார்.
மு.க.ஸ்டாலின் பேச்சு
பின்னர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- திருச்சியில் தி.மு.க. வளர்வதற்கும், கட்சியின் இருவண்ணக் கொடி பறப்பதற்கும் காரணமாக இருந்தவர்களில் திருச்சி நகர்மன்ற முன்னாள் தலைவர் பாலகிருஷ்ணனும் ஒருவர். அவர் பேரறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர், பேராசிரியர் அன்பழகன், அன்பில் தர்மலிங்கம் ஆகியோருடன் நெருக்கமாக இருந்தவர். அவருடைய மகன் பரணிகுமார் என்னோடு 20 ஆண்டுகாலம் பயணித்தவர்.
தி.மு.க. மாநில மாநாடு
தேர்தல் நெருங்கும் வேளையில் மிகவும் பிசியாக இருந்தாலும், பாலகிருஷ்ணன் குடும் பத்தின் மீது உள்ள பாசத்தால் தான் இந்த விழாவுக்கு வந்தி ருக்கிறேன். தேர்தலுக்கு முன் பாக திருச்சியில் 10 லட்சம் பேர் பங்கேற்கும் மாபெரும் தி.மு.க. மாநில மாநாட்டை அமைச்சர் கே.என்.நேரு நடத்த உள்ளார். பாவேந்தர் பாரதிதாசன் வரிகளுக்கேற்ப, மணமக்கள் வீட்டிற்கு விளக்காய், நாட்டிற்குத் தொண்டர்களாய் வாழுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் அமைச்சர் கே.என்.நேரு முன்னிலை வகித்துப் பேசினார். பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அனைவரையும் வரவேற்றார். விழாவில் சட்டமன்ற உறுப்பினர்கள் தி.மு.க. நிர்வாகிகள் பலர் திரளாகக் கலந்து கொண்டனர்.
