சாமியார்கள் காவி உடை உடுத்திகொண்டு, நீண்ட தாடி, நெற்றியை மறைக்கும் மத அடையாளக்குறி என்பதெல்லாம் பழைய பன்னெடுங் காலம். இன்றைய கார்ப்பரேட் சாமியார்கள் எல்லாம் நவீனத்தை தொட்டவர்கள்!
ஜக்கி வாசுதேவ், நிரங்காரி, ராம்ரகீம் போன்றவர்களைக் கூறலாம். அதில் தற்போது மற்றொருவர் ராஜூவ் மல்ஹோத்திரா – அரியானா மாநிலத்தில் ஒரு மூலையில் ஜோதிடம் பார்த்துக்கொண்டு இருந்த இவர், தற்போது ஆயிரக்கணக்கான கோடிகளுக்குச் சொந்தக்காரர். உலகின் பெரும் பணக்கார நாடுகளில் இவரது ஆசிரமம் உண்டு. இவர் போதைக் கடத்தல் கும்பலோடு தொடர்புவைத்து, பல நாட்டுப் பெரும் அரசியல் தலைவர்களின் நட்போடு, போதைக்கடத்தலுக்கு துணை போகிறவர் – அதன் மூலம் ‘பல கோடிகளை கையூட்டாகப் பெறுகிறார்’ என்ற குற்றச்சாட்டு சமூகவலைதளங்களில் பரவிக் கொண்டு இருக்கிறது. இருப்பினும் விவசாய நிலம் கூட இல்லாத – வாகன உதிரிப்பொருளை சில்லரை விலையில் விற்கும் ஒருவருக்கு 10 ஆண்டுகளில் பல்லாயிரம் கோடி ரூபாய்கள், உலகப் பெரும் பணக்கார நாடுகளில் விலை உயர்ந்த நவீனக் குடியிருப்பு, தனித்தீவு என்று எப்படி இவருக்குச் சொத்துக்கள் சேர்ந்தது என்பது விடை தெரியாத கேள்விகள்!
இவர் சமீபத்தில் உலகப் பணக்காரர்களுக்கு ஒரு கோரிக்கை வைத்தார். அவர் நீண்ட காலமாக ஆய்வு செய்து ஜீவாத்மாவில் பொருத்தப்படும் ஜிபிஎஸ் கருவி ஒன்றைக் கண்டுபிடித்துள்ளாராம்!
‘‘பில்கேட்ஸ், வார்ன்பாப்பேட், எல்ன் மஸ்க், கவுதம் அதானி, முகேஷ் அம்பானி உள்ளிட்ட உலகின் பெரும் பணக்காரர்கள் தனக்கு அவர்களுடைய ஒட்டுமொத்த சொத்தில் 30 விழுக்காடு தந்தால், அந்த ஜிபிஎஸ் கருவியை அவர்களின் ஜீவாத்மாவில் பொருத்தி விடுவதாகவும், அவர்கள் மறு பிறவி எடுக்கும் போது, அந்த ஜிபிஎஸ் கருவியின் மூலம் அடையாளம் கண்டு, அவர்களுக்கு மீண்டும் சொத்துக்களைத் தந்து விடுவதாகவும், மேலும் அவர்களின் அனைத்துச் சொத்தும் மீண்டும் மறுபிறவியில் அவர்களுக்கே சேர்ந்து விடும் வகையில், சிறப்பான ‘ஆன்மிக இணைப்பு’ ஒன்றை செய்து தருவேன்’’ என்று வெளிப்படையாகவே அறிவித்துள்ளார்.
அறிவியல் யுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் நாம், செவ்வாய்க் கோளுக்கு விண்கலம் அனுப்பிக் கொண்டிருக்கும் இக்கால கட்டத்தில் மறுபுறம் ‘ஆன்மிக முதலீடு’ என்ற பெயரில் மக்களை ஏமாற்றும் வேடிக்கைகளும் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன.
‘ஒரு மனிதனின் ‘ஜீவாத்மா’ மீது ஜிபிஎஸ் கருவியைப் பொருத்தி, அடுத்த பிறவியில் அவர் எங்கே பிறக்கிறார் என்பதைக் கண்டுபிடிப்பேன்’ என்று ராஜீவ் மல்ஹோத்ரா கூறுவது, நவீன அறிவியலையும் ஆன்மிகத்தையும் ஒருசேரக் கேலி செய்யும் செயலாகும்.
ஜிபிஎஸ் (GPS) என்பது செயற்கைக்கோள் சமிக்ஞைகளை அடிப்படையாகக் கொண்டது. பருப்பொருள் அல்லாத, உருவமற்ற ‘ஆன்மா’ மீது எப்படி ஒரு மின்னணுக் கருவியைப் பொருத்த முடியும்?
பழைய காலத்துச் சாமியார்கள் சொர்க்கம், நரகம் என்று பயமுறுத்திப் பணம் பறித்தார்கள். ஆனால், ராஜீவ் மல்ஹோத்ரா போன்ற நவீன ‘கார்ப்பரேட்’ மோசடிக்காரர்கள், தொழில்நுட்பச் சொற்களைப் பயன்படுத்தி படித்தவர்களையும் பணக்காரர்களையும் ஏமாற்ற முயல்கின்றனர்.
‘இழந்த செல்வம் மீண்டும் கிடைக்காது’ என்ற பயத்தையும், ‘அடுத்த பிறவியிலும் சுகபோகமாக வாழ வேண்டும்’ என்ற மக்களின் பேராசையையும் இவர்கள் முதலீடாகக் கொள்கின்றனர்.
இறந்த பிறகு என்ன நடக்கும்? சாம்பலாக அல்லது மண்ணோடு மண்ணாகப் போக வேண்டியது தான்! பக்தி அறியாமையைப் பயன்படுத்தி, ‘உத்தரவாதம்’ அளிக்கிறேன் என்று கூறுவது அப்பட்டமான மோசடியும், பித்தலாட்டமுமே அல்லாமல் வேறென்ன!
“எதையும் ஏன், எதற்கு, எப்படி என்று சிந்திப்பதே பகுத்தறிவு” என்றார் தந்தை பெரியார். இந்தச் சூழலில் நாம் சிந்திக்க வேண்டியவை: உழைப்பின் பலன் சுரண்டுவோன் கைக்குப் போக அனுமதிக்காகக் கூடாது! ஏதோ ‘மந்திரத்தால் அடுத்த பிறவிக்கும் சொத்துகள் தொடரும்’ என்பது உழைப்பைக் கொச்சைப்படுத்தும் செயலாகும்.
25 சதவீத சொத்தை ஒரு தனிநபருக்குத் தருவதை விட, பசி, பிணி மற்றும் கல்விக்காகச் செலவிடுவதுதான் உண்மையான அறம்!
பிறப்பு மற்றும் இறப்பு என்பது உயிரியல் மாற்றங்கள். அதற்கு ஜிபிஎஸ் பொருத்துகிறேன் என்று கூறுவது மக்களை முட்டாளாக்கப் பயன்படுத்தப்படும் ஒரு தந்திரம் மட்டுமல்ல – அறிவியல் சிந்தனையை அழிக்கும் அசல் மோசடியாகும்.
ராஜீவ் மல்ஹோத்ராவின் பேச்சு, மக்களைத் திசைதிருப்பும் ஒரு தந்திரக்காரர் என்பதை அப்பட்டமாகக் காட்டுகிறது. கோடிக்கணக்கான பணம் வைத்திருப்பவர்கள் மட்டுமல்ல, பாமர மக்களும் இதுபோன்ற ‘ஆன்மீக வியாபாரிகளிடம்’ எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பகுத்தறிவுச் சுடர் கொண்டு இத்தகைய மூடநம்பிக்கை இருளை அகற்றுவதே சமூகத்திற்கு நாம் செய்யும் உண்மையான தொண்டு.
தமிழ்நாட்டில் சிறிய சிதிலமடைந்த வீட்டில் வசித்த நித்தியானந்தா இன்று ‘‘கைலாசா என்னும் தனிநாட்டை உருவாக்கி விட்டேன்’’ என்று கூறிக்கொண்டு திரிகிறார். அவர் ஆஸ்திரேலியாவிற்கு கிழ்க்கே உள்ள தீவு ஒன்றில் வசித்துக்கொண்டு ‘கைலாசாதீவு’ என்று கதைவிட்டு வருகிறார்.
இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு ‘‘பசு மாட்டிற்கு, குரங்கிற்கு, மானுக்கு, மனிதர்களைப் போல் பேசும் தன்மையை கொண்டுவர மென்பொருள் ஒன்றை உருவாக்கி வருகிறேன்; அந்த மென் பொருள் மூலம் மாடு, அதுவும் பசுமாடு, குரங்கு, மான் போன்றவை தமிழ், சமஸ்கிருதம். ஆங்கிலம், பிரெஞ்சு மற்றும் ஜெர்மனியில் பேசும் என்று கதைவிட்டார். இதன் மூலம் ‘விலங்குகளுக்கு மட்டுமே தெரிந்த புதையல் இருக்கும் இடங்களை நாம் கண்டுகொள்ளலாம்’ என்று சொல்லிகொண்டார். பெரும் கோடிகளுக்கு சொந்தக்காரர்களாகலாம் என்று கதைவிட்டிருந்தார். அதையும் நம்பி பல பைத்தியங்கள் கோடிக்கணக்கான ரூபாயை கொடுத்தார்கள், எளிதான அந்த வெற்றியை புரிந்து கொண்ட ராஜூவ் மல்ஹோத்ரா தற்போது ‘பரமாத்மா ஜிபிஎஸ்’ என்று கதைவிட்டு வருகிறார்.
‘மதத்தையும், பக்தியையும் கேலி செய்கிறார்கள், அம்பலப்படுத்துகிறார்கள்’ என்று எவ்வித கருத்தும், கருணையும் இன்றி பகுத்தறிவாளர்கள் எரிக்கப்படுகிறார்கள்.
உண்மையில் இந்த சாமியார்கள் கூறுவது நிரூபிக்க முடியாததாகும். பச்சையான மோசடியாகும்! மூளைச்சலவை செய்து மக்கள் பணத்தைச் சுரண்டும் இந்தச் சாமியார்கள் இருக்க வேண்டிய இடம் கொடுஞ் சிறைச்சாலையே!
