ஜோதிபா ஃபூலே தொடங்கினார்! சாகுமகராஜ் தொடர்ந்தார்!
தந்தை பெரியார், புரட்சியாளர் அம்பேத்கர் உள்ளிட்ட பல தலைவர்கள்
நமது உரிமைகளுக்காக போராடினார்கள்; அவர்களுக்கு நமது சல்யூட்!
சென்னை, ஜன. 27-.சாகு மகராஜ் அமல்படுத்திய இடஒதுக்கீட்டின் தாக்கத்தால் நீதிக்கட்சி உருவானது. டாக்டர் டி.எம்.நாயர் போன்றவர்கள் இதற்குக் காரணமாக இருந்தனர் என்றும், மனுதர்மத்தில் எல்லாம் எங்களுக்கே என்பதாக இடஒதுக்கீடு இருந்தது என்றும் இணைய வழி கருத்தரங்கத்தில், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் இட ஒதுக்கீட்டின் வரலாற்றை சுட்டிக்காட்டி உரையாற்றினார்.
திராவிடர் கழகம் சார்பில் 24.01.2026 அன்று மாலை இணைய வழியில் நடைபெற்ற சமூக நீதி கருத்தரங்கத்தில், கழகத்தின் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பங்கேற்று நிறைவுரை வழங்கினார். இதில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஹரிபிரசாத், அய்த ராபாத் – பெண்களுக்கான கல்வி மய்யம் இயக்குநர் கயல்விழி, திராவிடர் மாணவர் கூட்டமைப்பைச் சேர்ந்த இளைய குமார் ஆகியோர் பங்கேற்று சமூக நீதி சந்தித்து வரும் சவால்களை பட்டியலிட்டு உரையாற்றினர்.
நிகழ்ச்சியை கழகத்தின் வெளியுறவுச் செயலாளர் கோ.கருணாநிதி நெறியாள்கை செய்து சிறப்பித்தார். நிறைவாக கழகத் தலைவர் உரையாற்றினார்.
மனுதர்மத்தில்
இடஒதுக்கீடு இருந்தது
அவர் தனது உரையை, ”ஜோதிபா ஃபூலே தொடங்கினார்! சாகுமகராஜ் தொடர்ந்தார்! தந்தை பெரியார், புரட்சியாளர் அம்பேத்கர் உள்ளிட்ட பல தலைவர்கள் நமது உரிமைகளுக்காகப் போராடினார்கள். அவர்களுக்கு நமது சல்யூட்” என்று தொடங்கினார். தொடர்ந்து, ”துணிச்சலுடன் கோல்காப்பூர் மாநிலத்தில் 50% இட ஒதுக்கீடு வழங்கிய சாகுமகராஜ் அவர்களுக்கு சிறப்பு சல்யூட்” என்றார். மேலும் அவர், சாகு மகராஜ் அவர்களின் தாக்கத்தால் தான் தமிழ்நாட்டில் நீதிக்கட்சி உருவானது. அதற்கு டாக்டர் டி.எம்.நாயர் போன்றவர்கள் காரணமாக இருந்தனர்” என்று பரவலாக அறியப்படாத செய்தியான, தமிழ்நாட்டில் உருவான திராவிடர் இயக்கத்திற்கான தோற்றுவாயை விவரித்தார். அதற்கு முன்பே மனுதர்மத்தில் இட ஒதுக்கீடு இருந்தது என்றார். அது எல்லாம் உயர்ஜாதியினருக்காக இருந்தது. அதை எதிர்த்து தான் ஜோதிபா ஃபூலே முதல் இன்றைய திராவிட இயக்கம் வரை வந்தது” என்றார்.
சமூக விடுதலை இல்லாத அரசியல் விடுதலையால் என்ன பயன்?
மேலும் அவர், சமூக நீதிக்காக நீதிக்கட்சிக் காலத்தில் மதராஸ் மாகாணத்தின் முதலமைச்சராக இருந்த பானகல் அரசர் 1921 இல் பிரதிநிதித்துவ அடிப்படையில் கொண்டு வந்த இட ஒதுக்கீடு; அதை அதிகாரத்தில் இருந்த பார்ப்பனர்கள் எப்படி எல்லாம் வர விடாமல் தடுத்தனர். பின்னர் 1928 இல் முத்தையா (முதலியார்) இட ஒதுக்கீட்டை கொண்டு வந்தது. 1950 வரை இருந்த அது, இந்திய அரசியலமைப்புச் சட்டம் அமலான பிறகு, அது நீதிமன்றத்தால் ஒழித்துக் கட்டப்பட்டது; தந்தை பெரியார் போராடியது; பெரியாருக்குப் பின் மண்டல் கமிசன் அறிக்கையை வெளியிடுவதற்காக நடைபெற்ற போராட்டங்கள்; பிற்படுத்தப்பட்டோருக்கு 52% பிரதிநிதித்துவம் இருந்தாலும் அது 27% சுருங்கியது எப்படி? அந்த 27% முழுமையாக கிடைக்க விடாமல் பார்ப்பனியம் செய்த சதிகள்; சூழ்ச்சிகள் போன்றவற்றை காலவரிசைப்படி சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக பேசி, “தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி” என்பதையும், “சமூக விடுதலை இல்லாவிட்டால் அரசியல் விடுதலை பெற்றும் பயனில்லை” என்று தந்தை பெரியார், புரட்சியாளர் அம்பேத்கர் ஆகியோர் சொல்லிச் சென்ற கருத்தையும் சுட்டிக்காட்டி, “எப்போதும் விழிப்புணர்வுடன் இருப்பதே நமது வெற்றியை நிலை நாட்ட முடியும்” என்பதைச் சொல்லி தமது உரையை நிறைவு செய்தார்.




நிகழ்ச்சியில் திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், மூதறிஞர் குழு தலைவர் முனைவர் தேவதாஸ், பாட்னா ரவீந்திர ராம், அமெரிக்கா சின்னையா, யூனியன் வங்கி பொதுச்செயலாளர் நடராஜன், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ராஜசேகரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆனந்த பாஸ்கர் ராபோலு, சேலம் ராஜூ உள்ளிட்ட பெருமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
நிறைவாக நிகழ்ச்சி ஒருங்கிணைப் பாளர் கோ.கருணாநிதி கலந்து கொண்டு உரையாற்றிய மற்றும் பங்கேற்ற அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
