மதுரை, ஜன.26- கி.மு.330 முதல் கி.மு.224 காலகட்டத்தை சேர்ந்த பொருட்கள் கீழடி அகழ்வாராய்ச்சியில் கண்டறியப்பட்டது குறிப்பிடத் தக்கது.
தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில், சமீபத்திய தொல்லியல் ஆராய்ச்சிகளில் அறிவியல் பகுப்பாய்வு முறை குறித்த 3 நாள் பன்னாட்டு கருத்தரங்கம் மதுரையில் நடந்தது. இந்த கருத்தரங்கு நேற்றுடன் (25.1.2026) முடிவடைந்தது. 3 நாட்கள் நடந்த கருத்தரங்கில் உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள சுமார் 10-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் இந்திய ஆராய்ச்சியாளர்கள் கலந்து கொண்டனர்.
வரலாற்று ஆதாரங்கள்
கருத்தரங்கில் வரலாற்றுக்கு முந்தைய காலம் முதல் தற்போது வரை அகழ்வாராய்ச்சியில் எந்தெந்த முறைகள் பின்பற்றப்படுகின்றன. ஒவ்வொரு பகுதியிலும் ஆராய்ச்சிக்கு உதவும் காரணிகள் என்ன? எதன் மூலம் வரலாற்று ஆதாரங்கள் நிரூபிக்கப்படுகின்றன.
அறிவியல் பகுப்பாய்வு முறை தமிழ்நாட்டின் அகழ்வாராய்ச்சிகள் எந்தளவு பயன்படுகிறது. வரலாற்று ஆதாரங்களை நிரூபிக்க எந்த மாதிரியான அறிவியல் பகுப்பாய்வு தேவைப்படுகிறது என்பது உள்ளிட்ட ஆராய்ச்சி கட்டுரைகள், குழு விவாதங்கள், கேள்வி-பதில் ஆகியவற்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதில், கலாசார பரிணாம வளர்ச்சிக்கு மொழி முன்னோடி என்பது குறித்து பேராசிரியர் பிச்சப்பன், தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்படும் அகழ்வாராய்ச்சி களில் கிடைக்கும் பொருட்களின் மரபணு மற்றும் உயிரியல் காரணிகள் குறித்த ஆராய்ச்சியின் முன்னேற்றம் குறித்து மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் ஜீனோமிக் துறை பேராசிரியர் குமரேசன் விளக்கினர். கீழடி அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப் பட்ட பொருட்களில் டி.என்.ஏ. ஆய்வு மேற்கொண்ட போது கிடைத்த சான்றுகளை கொண்டு விளக்கமளித்தார்.
அப்போது, காபி செடியின் குடும்பத்தில் உள்ள பூக்கும் செடியான மஞ்சத்தி வேர் மதுரை அழகர்மலை, பிரான்மலை மற்றும் தென்னிந்தியாவின் பல்வேறு இடங்களில் பரவலாக உள்ளது. இதன் மூலம் தயாரிக் கப்பட்ட பொருட்கள் எகிப்து அகழ்வாராய்ச்சியிலும், ஈரானிய அகழ்வாராய்ச்சியிலும், சீன அகழ்வாராய்ச்சிலும் கிடைத்தன. கி.மு.330 முதல் கி.மு.224 காலகட்டத்தை சேர்ந்த இந்த வகையான பொருட்கள் கீழடி அகழ்வாராய்ச்சியிலும் கண்டறியப் பட்டது குறிப்பிடத்தக்கது.
சிந்து சமவெளி நாகரிக காலத்தில் மொகஞ்சதாரோவில் பயன்படுத்தப்பட்ட ஒரு சில பொருட்களில் மஞ்சத்தி வேரின் பண்புகள் இருப்பதாக ஜான்மார்ஷல் ஆய்வறிக்கையில் தெரிவித் துள்ளதும் குறிப்பிடத்தக்கது. இது கி.மு.2500 முதல் கி.மு.1500 வரலாற்று காலக்கட்டத்தில் பயன் படுத்தப்பட்ட பொருட்கள் என அகழ்வாராய்ச்சியில் கண்டறியப் பட்டது.
சிவகளை, ஆதிச்சநல்லூர் மற்றும் கொந்தகை ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிகளில் கிடைக்கப் பட்ட பொருட்கள் ஜீன்களின் அறிவியல் ஆராய்ச்சி மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளன. அதாவது தமிழர்களின் நாகரிகம், தோற்றம், வளர்ச்சி ஆகியன அறிவியல் பூர்வமாக நிரூபணம் செய்யப் பட்டுள்ளன என்று சான்றுகளுடன் விளக்கப்பட்டது.
கருத்தரங்கில் வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் சாந்தலிங்கம், வேதாசலம், அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் மருதுபாண்டியன், எழுத்தாளர் ஸ்டாலின் ராஜாங்கம் மற்றும் தமிழ்நாடு தொல்லியல் ஆராய்ச்சி மய்ய மாணவ, மாணவிகள், ஆராய்ச்சியாளர்கள் கலந்து கொண்டனர்.
