பகுத்தறிவுக் கழகம் என்பது மிருகமாக இருக்கும் மக்களை மனிதர்களாக்கும் இயக்கம்!

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

தந்தை பெரியார்

இன்றைய தினம் இங்கு பகுத்தறிவாளர் கழகம் என்னும் பெயரால் ஆரம்பிக்கப்பட்டிருக்கிற இக் கழகத்தினைத் துவக்கும் வகையில் இப்பெரும் கூட்டமானது ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. பல அறிஞர்கள் சிறந்த கருத்துரைகளை எடுத்துச் சொல்லி இருக்கிறார்கள். இன்றைக்கு 30, 40 வருடங்களுக்கு முன்பே உயர்ந்த பேச்சாளர்களாகவும் மக்களுக்கேற்ப கருத்துக்களை எடுத்துச் சொல்வதில் தேர்ந்தவர்களாகவும் இருந்தவர்கள் இருவர். ஒருவர் அண்ணா அவர்கள், அடுத்து நாவலரவர்கள். அண்ணா அவர்கள் நகைச்சுவையோடு, அடுக்குத்தொடரோடு எடுத்துச் சொல்வார்கள். நாவலரவர்கள் புள்ளி விவரங்களோடு மக்களுக்குப் புரியும் தன்மையில் பேசக்கூடியவராவார்கள். இவர்கள் இருவரது பேச்சுக்களைக் கேட்பதற்காகவென்று மக்கள் அதிகமாகக் கூடுவார்கள்.

மனிதனா-மிருகமா?

அமெரிக்காக்காரன் சந்திரமண்டலத்திற்கு சென்று வர சாதனம் கண்டுபிடித்ததைப்போல நாம் சிறந்த காரியமாக பகுத்தறிவாளர் கழகம் என்கின்ற இதனைக் கண்டுபிடித்திருக்கிறோம்; மக்களுக்கு அறிவை எடுத்துச் சொல்கிற- மிருகமாக இருக்கிற மக்களை மனிதர்களாக்குகிற இயக்கம் என்பது தான் இதற்குப் பொருள். பகுத்தறிவு- சிந்தனை – தாராள சுதந்திர நோக்குள்ளவன் தான் மனிதன். இவை இல்லாத மற்றவை மிருகங்கள். நாம் ஏறக்குறைய அப்படித்தான் இருந்து வருகின்றோம். இப்போது தான் மனிதராகின்றோம். இந்த நாட்டில் இத்துறையில் பாடுபட யாருமே தோன்றவில்லை.

5 பேரை ஒழிப்பதே நம் கொள்கை

நான் காங்கிரசில் சேர்ந்து அதன் பித்தலாட்டங் களையெல்லாம் உணர்ந்து அதைவிட்டு வெளியேறி நம் மனிதனுக்கு அறிவைவிட மானம் முக்கியம் எனக் கருதி சுயமரியாதை இயக்கத்தை ஆரம்பித்தேன். அதன் கொள்கைகள் அய்ந்து; கடவுள் ஒழிக்கப்பட வேண்டும்; மதம் ஒழிக்கப்படவேண்டும்; காங்கிரஸ் ஒழிக்கப்பட வேண்டும், காந்தியார் ஒழிக்கப்படவேண்டும், பார்ப்பனர் ஒடுக்கப்படவேண்டும். இக் கொள்கைகளோடு கிராமம் கிராமமாகச் சென்று பிரசாரம் செய்து பல இன்னல்களை, கல்லடிகளை, சாணி மலம் முதலிய அடிகளைப் பட்டிருக்கிறேன். மிக இழிவான சொற்களால் பலர் என்னைத் திட்டி இருக்கிறார்கள். அதையெல்லாம் இலட்சியம் செய்யாது தொண்டாற்றியதால் நமது கொள்கை, படித்த கூட்டத்தாரிடத்தில் பெரிய மனிதர்களிடத்தில் பரவியது என்றாலும் அவர்களை ஈர்க்கவில்லை. மதம் – அரசியல், இலக்கியம் ஆகிய துறைகளிலும் பாடுபட்டோம் என்றாலும் நாம் கருதிய அளவு வெற்றி கிடைக்க வில்லை.

மனைவிமாரையும் சேர்க்க வேண்டும்

இது நல்ல வாய்ப்பு. இந்த இயக்கம் வளருமேயானால் மேல் நாட்டுகாரர்களைவிட அதிகமாக நாம் வளருவோம். அறிவில் மட்டுமல்ல, பல அதிசய அற்புதங்களையும் காணுவோம். நமது நாட்டில் அறிவுள்ள மனிதன் என்று சொல்ல ஒரு ஆளில்லை. படித்தவர்கள் பணம் படைத்தவர்கள் பெருமை பெற்றவர்கள் இருக்கலாம். அறிவாளி என்று சொல்லும்படியாக ஒரு ஆள் கிடையாது. நம் சமுதாய மக்களிடையில் இன உணர்வு, நட்பு இல்லாமல் போய் விட்டது. பொது உணர்ச்சி இல்லாமல் போய்விட்டது. இந்த ஸ்தாபனத்தை நல்ல வண்ணம் வளர்க்க வேண்டும். தமிழர்கள் எல்லோரும் அங்கத்தினர்களாக வேண்டும். தங்கள் மனைவிமார்களையும் இதில் சேர்க்கவேண்டும். பிரசார ஸ்தாபனம் ஒன்று இதற்காகத் துவக்க வேண்டும். பத்திரிகைகள் ஆரம்பிக்கவேண்டும். நிறைய புத்தகங்கள் போடவேண்டும். தாங்களாகவும் மற்றவர்களை அழைத்தும் பிரசாரம் செய்து மக்களைப் பகுத்தறிவாளர்களாக்க வேண்டும்.

ஒழுக்கம் நாணயம் வேண்டும்

இதற்கு மரியாதை வேண்டுமானால் இதில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு ஒழுக்கம், நாணயம் வேண் டும். நாம் தீவிரமான கருத்துக்களை எடுத்துச் சொல்லி இருக்கிறோம். நம்மிடம் ஒழுக்கம், நாணயம் இல்லையென்றால் மதிப்பிருக்காது. இப்போது நாங்கள் “கடவுள் இல்லை – கடவுள் இல்லவே இல்லை, கடவுளைக் கற்பித்தவன் முட்டாள், கடவுளைப் பரப்பியவன் அயோக்கியன்; கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி” என்கின்றோம்.

முட்டாளை முட்டாள் என்று சொல்வதில், திருடனைத் திருடன் என்று சொல்வதில் என்ன தவறு என்று கேட்கிறேன். யாராவது நீங்கள் தான் சொல்லுங்களேன்? கடவுளை நம்புகிறவன் முட்டாளாக இல்லாவிட்டால் சாம்பலையும், மண்ணையும் பூசிக்கொள்வானா?

ஆன்மா சாப்பிட அரிசி, உப்பு, புளி

அடுத்த ஜன்மத்தில் நாயாக, கழுதையாக பிறப்பாய் என்கிறான். பிறகு பிதிர்லோகத்தில் ஆத்மா தங்கி இருக்கிறது, அதற்கு உணவுக்கு அரிசி உப்பு புளி அனுப்ப வேண்டுமென்கின்றான். பெரிய எம்.ஏ., பி.ஏ., டாக்டர் படித்தவனெல்லாம் இதை நம்பித்தானே தெவசம் கொடுக்கின்றான். கருமாதி செய்கின்றான். நாமிங்கு கடவுள் மறுப்பு சொல்வது போன்று ஒவ்வொரு நாட்டிலும் இது போல் செய்கிறார்கள்.

 பாரிஸ் நகர அனுபவம்

 நானும் காலம் சென்ற இராமநாதன் அவர்களும் பாரிசுக்கு ஒரு நாத்திக சங்கத்திற்கு சென்றிருந்தோம். அவர்கள் ஒரு பத்திரிகை நடத்துகிறார்கள். அந்த பத்திரிகையில் தலைப்பில் ஒரு சிலுவையைப் போட்டு அதை ஒரு மனிதன் இரண்டாக பிளந்து ஒரு பகுதியைக் காலால் மிதித்துக் கொண்டு மறுபகுதியை கையால் பிடித்து இழுப்பது போல படம் போட்டிருக்கிறார்கள். அப்படம்தான் அந்த பத்திரிகையின் “எம்பிள”மாகும். அப்போதே அப் பத்திரிகை 50, 60 ஆயிரம் போகிறது என்றார்கள். அது போன்று இங்கும் நிறைய பத்தி ரிகைகள் தோன்றவேண்டும்.

கடவுள் பற்றி
கவலை இல்லை

இப்படி ஒவ்வொரு காரியமும் தீவிரமாகச் செய்ய வேண்டும். பயப்படவேண்டிய தேவை இல்லை. மக்கள் சிறிது சிறிதாக பக்குவப்பட்டுக் கொண்டு வருகிறார்கள். நாமாகப் புதிதாக எதுவும் சொல்ல வேண்டியதில்லை. நம் பிரத்தியட்ச அனுப வத்தைக் கொண்டும் ஆதாரத்திலுள்ளவைகளைக் கொண்டும் எடுத்துச் சொன்னால் அதுவே போதும்.

சாமி இருக்கிறதா – இல்லையா? அதைப் பற்றி கவலை இல்லை. அதன் பெயரால் நடக்கிற முட்டாள் தனங்களைப் பற்றித் தான் நாம் கவலைப்படுகிறோம்.

அறிவோடு நம்பினால்…

இருந்துவிட்டுப் போகட்டும். அதற்கு சாமி இருக்கிறதானால் எதற்காக மனிதன் சாம்பலை அடித்துக் கொள்ள வேண்டும்? நாமத்தைப் போட்டுக் கொள்ள வேண்டும்? இது முட்டாள் தனமல்லாமல் அறிவுள்ள செயலா? இதிலிருந்தே சாமியை நம்புவதாலே மனிதனின் அறிவு எவ்வளவு கீழாகப் போகிறது என்பதை உணரலாமே!

மனிதன் – அறிவோடு சாமியை நம்பினால் பரவாயில்லை, முட்டாள்தனத்தோடு நம்புகின்றான். அதனால் இவன் மடையனாவதோடு இவன் மனைவி மக்களெல்லாம் அல்லவா மடையர்களாகிறார்கள். சாமி இருக்கிறது என்று நம்புகிறானே தவிர அது சர்வசக்தியுள்ளது என்று சொல்கிறானே தவிர அதன்படி எவனாவது ஒருவன் நடந்து கொள்கிறானா என்று கேட்கிறேன்.

சங்கராச்சாரியைச் சொன்னாலும் சரி, மடாதிபதியா னாலும் சரி, பெரிய பக்தனானாலும் சரி ஒருவனைச் சொல்லுங்கள் -எவன் கடவுள் சர்வ சக்தியுள்ளது என்று நம்புகின்றான், ஒருவன் கூட இல்லையே!

அடிமையாக நாமிருக்கிறோம்

தீவிரமான காரியங்களில் ஈடுபடுகிற நம்மீது சிறு குற்றம்கூட இருக்கக் கூடாது. நமது சமுதாயம் ஒன்றுபட வேண்டும். அதற்காகப் பாடுபடவேண்டும்.

நமக்கு ஒரு குறிப்பு மோனோகிராம் (பேட்ஜ்) இருக்க வேண்டும். மேல் நாடுகளில் இதுபோன்ற இயக்கங்களைச் சார்ந்தவர்கள் தங்கள் சட்டையின் ஒரு பகுதியில் அணிந்திருப்பார்கள். அதுபோன்று இந்த கழகத்தினைச் சார்ந்த அங்கத்தினர்கள் அணிந்து கொள்ள வேண்டும்.

இப்போது நாம் நம்நாட்டுக்காரனாக இல்லை, அடிமையாக இருக்கிறோம். இந்நாட்டிற்குரிய 100-க்கு 97 பேராக இருக்கிற நாம் தானே சூத்திரர்களாக, கீழ் ஜாதிக்காரர்களாக, 4-ஆம் ஜாதி மக்களாக இருக்கிறோம். இதைப்பற்றி இது வரை யாரும் சிந்திக்கவில்லையே, காரணம் கடவுள் மதத்தோடு இதை ஒட்ட வைத்து விட்டான். நாம் மனிதத்தன்மையடைய ரொம்ப தூரமிருக்கிறது.

 அண்ணன்-தம்பி போல பழகவேண்டும்

ரஷ்யாவில் அந்தரங்க நட்பு பேட்ஜ்  இருக்கும். அதைக் குத்தி இருக்கிறவன் இன்னொருவனிடம் எதைக் கேட்டாலும் அதை எடுத்து கொடுத்து விடுவான். அவ்வளவு ஒற்றுமை அவர்களிடம் இருக்கும்.

அதுபோன்று இக்கழகத்தைச் சார்ந்தவர்கள் ஒற்றுமை யாக  இருக்க வேண்டும்.   ஒருவருக்கொருவர் அண்ணன் தம்பிபோல் பழகவேண்டும்.

நமது நிலை என்ன? நமது நாட்டின் பெயர் இந்தியா; நமது மதத்தின் பெயர் இந்து. இதற்கு எந்த ஆதாரமும் இருக்கிறதா என்றால் இல்லை. இந்நாட்டிற்குரிய நமக்கென்று எதுவுமே இல்லை. அனாமதேயமாக இருக்கிறோம். அரசியலிலும் அனாமதேயமாக இருக்கிறோம். நமக்கென்று நாம் எதையும் செய்து கொள்ள முடியாத வர்களாக இருக்கிறோம். இந்த நிலை மாற்றமடைய வேண்டும்.

நடித்தால் போதும்

நாமெல்லாம் சகோதரர்கள் என்கின்ற உணர்ச்சி வர வேண்டும். இதனால் சிலருக்குத் தொல்லை வரலாம், தியாகம் செய்தாக வேண்டும். நம்மவன் என்றால் அன்பாய்  நடந்து கொள்ள வேண்டும். தம்மாலான உதவியைச் செய்ய வேண்டும். பகுத்தறிவின் பெயரால் நாடகங்கள் நடத்த வேண்டும். சுயமரியாதை இயக்கத்தின் மூலம் நடத்துவதில் அண்ணா முக்கியமான பாகத்தில் நடிப்பார். 3,4 ஆயிரம் வசூலாகும். நமது கடவுள் கதை களை – உள்ளபடி நடித்தால் போதும் – அறிவோடு பார்ப் பவன் நிச்சயம் திருந்துவான். இதற்கு ஒரு நிதி திரட்ட வேண்டும். பத்திரிகை சம்பந்தமாக நண்பர் திரு. வீரமணி அவர்கள் உதவி செய்வார்கள்.

6.9.1970-இல் சென்னை பாலர் அரங்கத்தில் தந்தை பெரியாரவர்கள் பகுத்தறிவாளர் கழகத்தினைத் துவக்கி தந்தை பெரியாரின் ஆற்றிய அறிவுரை.

– ‘விடுதலை’ 23.9.1970

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *