சென்னை, ஜன. 24- கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சென்னை மற்றும் துபாய் இடையே இயக்கப்பட்டு வந்த ஏர் இந்தியா நேரடி விமான சேவை திடீரென நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அதிரடி முடிவு தமிழ் நாட்டுப் பயணிகள் மற்றும் வான் வழிப் போக்குவரத்து நிபுணர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வரலாற்றுப் பின்னணி
ஆரம்ப காலத்தில் இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனம் சென்னை யில் இருந்து துபாய்க்கு நேரடி விமானங்களை இயக்கி வந்தது. 2007ஆம் ஆண்டு இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனம் ஏர் இந்தியாவுடன் இணைக்கப்பட்ட பிறகு, இது அரசு நிறுவனமாக இருந்ததால் சாமானிய மக்களும் பயணிக்கும் வகையில் கட்டணங்கள் அமைந்திருந்தன. இதனால், இண்டிகோ, எமிரேட்ஸ் போன்ற தனியார் நிறுவனங்களுக்குப் போட் டியாக ஏர் இந்தியா விளங்கியது.
புறக்கணிக்கப்படுகிறதா தமிழ்நாடு?
துபாய் – சென்னை வழித்தடம் எப்போதும் அதிக பயணிகளுடன் லாபகரமாகவே இயங்கி வந்தது. இவ்வளவு நல்ல வருவாய் ஈட்டும் ஒரு சேவையை திடீரென நிறுத்திவிட்டு, அதற்குப் பதிலாக பெங்களூரு – துபாய் இடையே ‘ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்’ சேவையைத் தொடங்க நிறுவனம் முடிவு செய்துள்ளது. இது தமிழ்நாட்டைப் புறக்கணிக்கும் செயல் என விமான போக்குவரத்து நிபுணர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
பயணிகளின் கோரிக்கை
ஏற்கனவே தமிழ்நாட்டின் பல்வேறு உள்கட்டமைப்பு திட் டங்கள் மற்றும் நிதி ஒதுக்கீடுகளில் ஒன்றிய அரசு பாராமுகம் காட்டி வருவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், இந்த விமான சேவை ரத்து அந்த அதிருப்தியை மேலும் அதிகரித்துள்ளது.
எனவே, ஒன்றிய – மாநில அரசுகள் உடனடியாக தலையிட்டு, ஏர் இந்தியா நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி, சென்னை – துபாய் நேரடி விமான சேவையை மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
