‘‘இதை அடியோடு ஒழிக்கப் பிறந்ததுதான் திராவிடம்!
திராவிடர் இயக்கம்! இன்றைய திராவிட மாடல் ஆட்சி!’’
நாகர்கோயிலில் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி எழுச்சி உரை!
நாகர்கோயில்.ஜன.24, ‘‘மிருகம் தீட்டல்ல; மனிதன் தீட்டு. மனிதனை மனிதன் தீண்டக்கூடாது – இதைவிட மோசம் வேறு உண்டா? அதைவிட மோசம் நெருங்கக் கூடாது; அதையும் விட மோசம் பார்க்கவே கூடாது. இந்தக் கொடுமைகள் உலகில் வேறெங்காவது உண்டா? இதுதான் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. ஆட்சி! நம்முடைய சமுதாயம் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்; யாதும் ஊரே! யாவரும் கேளிர்! இதுதான் திராவிடம்!’’ என்றும் நாகர்கோயில் நிகழ்ச்சியில் கழகத் தலைவர் உரையாற்றினார்.
கழகக் கொடிகள் – பதாகைகள்
‘‘சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு மாநாட்டின் வெற்றி விழா!’’ ‘‘இதுதான் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. ஆட்சி; இதுதான் திராவிடம் – திராவிட மாடல் ஆட்சி தொடர் பரப்புரை விழா!’’ ‘‘பெரியார் உலகம் நிதியளிப்பு விழா!’’ என முப்பெரும் விழாவை, கன்னியாகுமரி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் ஒழுகினசேரியில் உள்ள பார்வதி அம்மாள் திருமண மண்டபத்தில், நேற்று முன்தினம் (22.01.2026) காலை 10 மணியளவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிகழ்விடத்திற்கு செல்லும் சாலையின் இருபுறமும் கழகக் கொடிகளும், ஆங்காங்கே கட்டப்பட்டிருந்த பதாகைகளும் நிகழ்ச்சி பற்றிய அறிவிப்பை கட்டியம் கூறிக் கொண்டிருந்தன. கழகத் தலைவர் 11 மணியளவில் நிகழ்விடத்திற்கு வருகை தந்தார். எழுச்சிகரமான கொள்கை முழக்கங்களோடு அவருக்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் வரவேற்பு நல்கப்பட்டது. அப்போது கழகத்தின் சொற்பெருக்காளர் தஞ்சை இரா.பெரியார் செல்வம் நிகழ்ச்சியின் நோக்கம், கழகத் தலைவரின் சிறப்புகள் பற்றி உரையாற்றிக் கொண்டிருந்தார்.
நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவர் மா.மு.சுப்பிரமணியம் தலைமையேற்று உரையாற்ற, மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் உ.சிவதாணு அனைவரையும் வரவேற்றுச் சிறப்பித்தார். மாவட்டச் செயலாளர் கோ.வெற்றிவேந்தன் முன்னிலை வகித்து தொடக்க உரையாற்றினார். மாவட்டக் காப்பாளர் ம.தயாளன், பெரியார் பெருந்தொண்டர் ஞா.பிரான்சிஸ், பொதுக்குழு உறுப்பினர் ஆரல்வாய்மொழி மணி, ம.தி.மு.க. மாவட்டச் செயலாளர் வெற்றிவேல், மகளிர் பாசறை தலைவர் மஞ்சு குமாரதாஸ், கோட்டாறு பகுதித் தலைவர் ச.ச.மணிமேகலை ஆகியோர் முன்னிலை வகித்துச் சிறப்பித்தனர். பிரச்சார பயண ஒருங்கிணைப்பாளர் ஒரத்தநாடு இரா.குணசேகரன் இயக்கப் புத்தகங்களை அறிமுகம் செய்வித்து, வாங்கிப் பயன்பெறுமாறு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்து உரையாற்றினார். தொடர்ந்து இரண்டாம் தவணையாக பெரியார் உலகத்திற்கு நிதி வழங்கினார்கள். கோ.வெற்றிவேந்தன் 24 ஆம் தவணையாக விடுதலை சந்தா தொகை ரூ.20,000/- வழங்கினார். அப்போது வடசேரியைச் சேர்ந்த இரண்டு வயதான பெரியார் பிஞ்சு கழகத் தலைவரிடம் விடுதலை வளர்ச்சி நிதியாக ரூபாய் 500/- வழங்கினார். தொடர்ந்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சார்பிலும், அனைத்துக் கட்சிகளின் பொறுப்பாளர்களும் கழகத் தலைவருக்கு மரியாதை செய்து மகிழ்ந்தனர். நிறைவாக கழகத் தலைவர் உரையாற்றினார்.
மக்களின் பங்களிப்பு முக்கியம்
அவர் தனது உரையின் தொடக்கத்தில், “மக்களுக் காகவே தொடங்கி வளர்ந்த இயக்கம் சுயமரியாதை இயக்கம். பெரியார் உலகம் உருவாக்கத்தில் தொகை முக்கியமல்ல, மக்களின் பங்களிப்பு இருக்க வேண்டும் என்பது முக்கியம். ஆகவே, நன்கொடை அளித்த அனை வருக்கும் நன்றி” என்றார். தொடர்ந்து, “வெற்றிவேந்தன் 24 ஆம் முறையாக விடுதலை சந்தா கொடுத்திருக்கிறார். அடுத்து 25 ஆம் தவணையாக கொடுக்க இருக்கிறார். இதற்காகவே தனியாக ஒரு விழா எடுத்து அவரைப் பாராட்ட வேண்டும்” என்றார். மேலும் அவர், “இன்னும் இரண்டு மாதத்தில் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வர இருக்கிறது. அறிஞர் அண்ணா தொடங்கி, முத்தமிழ் அறிஞர் கலைஞர், முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் வரை மக்கள் பக்கம் நின்று தான் ஆட்சி செய்திருக்கிறார்கள். மறுபடியும் தி.மு.க. அரசுதான் ஆட்சிக்கு வரவேண்டும் என்று உங்களிடம் வேண்டுகோள் விடுக்க இந்த வயதிலும் வந்திருக்கிறேன். அரங்க நிகழ்ச்சி என்றாலும் ஏராளமாக வந்திருக்கிறீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் திண்ணைப் பிரச்சாரம் செய்து ஒத்துழைக்க வேண்டும்” என்றார். தொடர்ந்து, இரண்டு நாட்களாக தொண்டை தொற்று காரணமாக பேச முடியாமல் இருக்கிறது. ஏற்கனவே ஒத்திவைக்கப்பட்ட நிகழ்ச்சி இது. ஆகவே மறுபடியும் ஒத்திவைக்க வேண்டாம். பேச முடியவில்லை என்றாலும் சைகையிலாவது பேசிவிட வேண்டும் என்று வந்திருக்கிறேன்” என்று சொன்னதும் அரங்கத்தினுள் வெடிச்சிரிப்பு எழுந்து அடங்கியது.
உலகில் வேறெங்கும் இல்லாத
கொடுமை இது!
தொடர்ந்து அவர் தலைப்பை நினைவூட்டி, “திராவிடம் – ஆர்.எஸ்.எஸ். இரண்டும் நேர் எதிரான தத்துவங்கள். நம்முடைய சமுதாயம் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று வாழ்ந்தது. யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று இருந்தது. இதுதான் திராவிடம்” என்றார். அடுத்து, “மிருகம் தீட்டல்ல, மனிதன் தீட்டு – தீண்டாமை என்பதே மோசமானது. நெருங்காமை அதைவிட மோசமானது. பாராமை அதையும் விட மோசமானது. உலகில் இந்து மதத்தைத் தவிர இந்தக் கொடுமை வேறு எங்காவது உண்டா?” என்று நெற்றிப் பொட்டில் அடிக்கும் படி அதிரடியான கேள்வியை முன் வைத்துவிட்டு, “இதுதான் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. ஆட்சி” என்றார். உடனடியாகத் தொடர்ந்து, “இதை அடியோடு ஒழிக்கப் பிறந்ததுதான் திராவிடம் – திராவிடர் இயக்கம் – திராவிட மாடல் ஆட்சி!” என்று அடுக்கினார். மக்களுக்கு, ஆசிரியர் சொல்ல வந்த கருத்து பளிச்சென்று புரிந்து, அதன் எதிர்வினையாக பலத்த கைதட்டல்கள் எழுந்து அடங்கின. தொடர்ந்து, நாகர்கோயிலில் சுந்தரம் பிள்ளை அவர்களின் உறவுக்காரரான பி.சிதம்பரம் பிள்ளை – அன்றைக்கு இவர் திருவனந்தபுரம் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் என்றும் அவர் மனித சமத்துவம் பற்றியும், ஆலயப்பிரவேசம் பற்றியும் எழுதி உள்ளதையும், Rights of temple entry எனும் தலைப்பில் அவர் எழுதிய புத்தகத்தை பாபா சாகேப் அம்பேத்கர் அனுப்பி வைத்ததையும், அம்பேத்கர் சிதம்பரம் அவர்களுக்கு, எனக்குத் தெரியாத தகவல்கள் இதில் ஏராளம் இருக்கின்றன என்று நன்றி கூறி பதில் கடிதம் எழுதிய; நாகர்கோயில் வாழ் மக்களுக்கே தெரியாத அரிய வரலாற்றுக்குறிப்பை சுட்டிக்காடிப் பேசினார். தொடர்ந்து குமரி மாவட்டத்துக்கு அருகில் நடந்த தோள்சீலை போராட்டம், மண்டைக்காடு கலவரம் மற்றும் மனுதர்மம் பெண்களுக்கு இழைத்த கொடுமை போன்றவற்றை எல்லாம் பட்டியலிட்டு, இன்றைக்கிருக்கும் ஆர்.எஸ்.எஸ்.சின் அரசியல் பிரிவான ஒன்றிய பா.ஜ.க. அரசு மறுபடியும் மனுதர்மத்தை சட்டமாக்க முயற்சிக்கும் பெரும் ஆபத்தை சுட்டிக்காட்டி, திராவிட மாடல் ஆட்சி தொடர ஒத்துழையுங்கள் என்று வேண்டுகோள் விடுத்து தனது உரையை நிறைவு செய்தார்.
2 வயது பெரியார் பிஞ்சும்!
93 வயது கழகத் தலைவரும்!
நாகர்கோயில் ஒழுகினசேரியில் உள்ள பார்வதி அம்மாள் திருமண மண்டபத்தில் 22.01.2026 அன்று, கன்னியாகுமரி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் கழகத் தலைவர் கலந்து கொண்ட பரப்புரைக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, நாகர்கோயில் வடசேரியைச் சேர்ந்த இரண்டு வயது பெரியார் பிஞ்சு, சுபா (எ) சிட்டு யாருடைய துணையும் இல்லாமல் கையில் ரூ.500/- தாளை வைத்துக்கொண்டு, விறுவிறுவென்று மேடைக்குச் சென்றது. மேடைப் படிகளில் ஏற இயலாமல் தடுமாறிய போது அருகில் இருந்தவர் மேலே ஏற்றி விட்டார். கொஞ்சமும் தயக்கம் இல்லாமல் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களை நோக்கிச் சென்றது. அருகில் சென்றதும், ஆசிரியர் வியப்பும், ஆனந்தமும், ஆசையும் கலந்து குழந்தையின் கைகளைப் பிடித்துக் கொண்டு, என்னவென்று விசாரித்திருக்கிறார். அதற்கு பெரியார் பிஞ்சு சுபா (எ) சிட்டு எதுவும் பேசாமல், தன் கையில் இருந்த ரூபாய் தாளை ஆசிரியரிடம் நீட்டினார். அவரோ இன்னமும் வியப்பு மேலிட, ”எனக்கா?” என்று கேட்க, பெரியார் பிஞ்சு, ”ஆமாம்” என்று தலையசைக்க, ஆசிரியர் ஒரு குழந்தையாகவே மாறி ஆனந்தமாக சிரித்து விட்டார். இரண்டு வயது கூட முழுமையாக நிரம்பாத அந்தக் குழந்தை ஆசிரியரிடம் நன்கொடை அளித்த அந்தக் காட்சி மகிழ்ச்சியையும், நெகிழ்ச்சியையும் ஒருசேர தந்ததால் மேடையில் இருந்தவர்களும் ஆனந்தத்துடன் கைதட்டி மகிழ்ந்தனர். குழந்தையின் பெற்றோர் நாகர்கோயில் சுதன் – சூர்யா ஆவர்.
நிகழ்வில் பெரியார் பெருந்தொண்டர் சி.கிருஷ்ணேஸ்வரி, மாவட்ட மகளிரணித் தலைவர் சு.இந்திராணி, மாவட்ட இளைஞரணித் தலைவர் இரா.இராஜேஸ், அகஸ்தீஸ்வரம் ஒன்றிய செயலாளர் எஸ்.குமாரதாஸ், மாவட்ட துணைச் செயலாளர் சி.அய்சக் நியூட்டன், மாவட்ட தொழிலாளர் அணிச் செயலாளர் க.யுவான்ஸ், ப.க.செயலாளர் பெரியார் தாஸ், நகர தலைவர் ச.ச.கருணாநிதி, மாவட்ட மகளிரணிச் செயலாளர் த.சிறீவள்ளி, ஒன்றிய தலைவர் மா.ஆறுமுகம், ஆ.சிவக்குமார், பி.கென்னடி, பா.சு.முத்து, வைரவன், தி.மு.க. அகஸ்தீஸ்வரம் ஒன்றிய செயலாளர் பாபு, சுதன், சூர்யா, சுந்தரம் உள்ளிட்ட ஏராளமான பெருமக்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். இறுதியாக மாவட்ட துணைச் செயலாளர் எஸ்.அலெக்சாண்டர் நன்றி கூறி நிகழ்ச்சியை முறைப்படி நிறைவு செய்தார். கழகத் தலைவர் தோழர்கள் அனைவரிடமும் விடைபெற்றுக்கொண்டு தூத்துக்குடி நோக்கி தனது பயணத்தைத் தொடர்ந்தார்.
