சட்டப்பேரவையில் வினாக்கள், விடைகள் நேரத்தில் (22.1.2026) திருப்பூர் மாநகராட்சி பகுதியில் தேங்கி உள்ள குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என சட்டமன்ற உறுப்பினர் விஜயகுமார் கோரிக்கை வைத்தார்.
இதற்கு பதில் அளித்த அமைச்சர் கே.என்.நேரு, விஜயகுமாரை ரொம்ப நாளாக தேடிக் கொண்டு உள்ளதாகவும், நாங்கள் எந்த வேலை செய்வதற்கு நீங்கள் அனுமதி அளிக்கிறீர்கள், சொந்தமாக இடம் வாங்கி குப்பை கொட்டினாலும், கல் குவாரியில் கொட்டினாலும் பிரச்சினை ஏற்படுகிறது என்று பதில் அளித்தார்.
சென்னை, கோவை, மதுரையில் ரூ.200 கோடி செலவில் குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் தொடங்கப்பட உள்ளதாகவும் அமைச்சர் கே.என். நேரு தெரிவித்தார்.
வீட்டுமனைப் பட்டா
அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தகவல்
தமிழ்நாடு சட்டமன்றத்தில் கேள்வி நேரத்தின்போது (22.1.2026) பேசிய, திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி, எலவம்பட்டி, மதுரா மைக்காடு மற்றும் ஜெகன்நாதன் வட்டம் பகுதிகளில் வசிப்பவர்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க அரசு நடவடிக்கை எடுக்குமா? என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், இந்த ஆட்சியில் இதுவரை 22 லட்சம் பேருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. எனவே இவர்களுக்கும் பட்டா வழங்குவதற்கான வழிவகைகளை இந்த அரசு ஆராய்ந்து, அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பதில் அளித்தார்.
