வன்மத்தையும், வெறுப்புணர்ச்சியையும், பிரிவினையையும் கொடுப்பது சாதனை கிடையாது – எல்லாவற்றையும் இணைப்பதுதான் சாதனை!
அது ஒரு பெரிய யுத்தம்; அந்த யுத்தத்தில் நீங்கள் வெற்றி பெறுவீர்களா? தோல்வி அடைவீர்களா? என்று தெரியாது!
உங்கள் வாழ்நாள் முழுவதும் அந்த யுத்தத்தை நிகழ்த்திக் கொண்டே இருந்தீர்கள் என்றால்,
அதுதான் உங்களுடைய வாழ்வினுடைய மிகப்பெரிய உன்னதமான நிலை!
அந்த உன்னதமான நிலையை அடைவதற்குத் தான் எல்லா தளத்திலேயும் நாம் பெரியாரைப் புரிந்துகொள்ளவேண்டும்!
சென்னை, ஜன.23 ‘‘வன்மத்தையும், வெறுப்புணர்ச்சி யையும், பிரிவினையும் கொடுப்பது சாதனை கிடையாது. எல்லாவற்றையும் இணைப்பதுதான். அது ஒரு பெரிய யுத்தம். அந்த யுத்தத்தில் நீங்கள் வெற்றி பெறுவீர்களா? தோல்வி அடைவீர்களா? என்று தெரியாது. ஆனால், உங்கள் வாழ்நாள் முழுவதும் அந்த யுத்தத்தை நிகழ்த்திக் கொண்டே இருந்தீர்கள் என்றால், அதுதான் உங்களுடைய வாழ்வினுடைய மிகப்பெரிய உன்னதமான நிலை. அந்த உன்னதமான நிலையை அடைவதற்குத் தான் எல்லா தளத்திலேயும் நாம் பெரியாரைப் புரிந்துகொள்ளவேண்டும்’’ என்றார் திரைப்பட இயக்குநர் மாரிசெல்வராஜ் அவர்கள்
‘பெரியார் விருது’ வழங்கும் விழா!
கடந்த 17.1.2026 அன்று மாலை சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில், தந்தை பெரியார் முத்தமிழ் மன்றத்தின் 32 ஆம் ஆண்டு விழாவும், பெரியார் விருது வழங்கும் விழாவும் நடைபெற்றன. இவ்விழாவில், திரைப்பட இயக்குநர் மாரிசெல்வராஜ் உரையாற்றினார்.
அவரது உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:
ஒரு அம்மா தன் மகளுக்காக, தன் மகள் இந்தப் பையனை விரும்புகிறார் என்றவுடன் அதை எதிர்க்கக்கூடிய எல்லா வீடுகளுக்கும் என்னை அழைத்துக்கொண்டு போனார். என்னை அமர வைத்து, நான் என்ன செய்கிறேன், என்னுடைய திட்டங்கள் என்ன? நான் எந்த மாதிரியான வீடுகளில் இருந்து வருகிறேன். இவை எல்லாவற்றையும் பேசக்கூடிய சுதந்திரமும் அந்த வீடுகளில் இருந்தது.
பெரியாரை வாசிக்கும் போதுதான்
எனக்கு ஒரு விஷயம் புரிந்தது!
எனக்கு அது பெரிய அனுபவமாகவும், ஆச்சரிய மாகவும் இருந்தது. ஒரு புத்தெழுச்சியாக எனக்கு இருந்தது. அதற்குப் பிறகுதான், தீவிரமாகப் பெரியாரை வாசிக்க ஆரம்பித்தேன் பெரியாரை வாசிக்கும் போதுதான் எனக்கு ஒரு விஷயம் புரிந்தது. பெரியாரை எப்படி புரிந்து கொள்வது? ஏனென்றால், பெரியாரைப் பற்றி ஒருவரிடம் பேசிவிட்டுப் போனீர்கள் என்றால், ஒரு நாள் கடப்பதற்குள், இன்னொருவர் நம்மிடம் வந்து பெரியாருக்கு எதிராகப் பேசுவார். சரி அவரை நாம் சமாளித்துவிட்டுச் சென்றால், இன்னொருவர் வந்து குழப்பமான முறையில் நம்மிடம் வந்து ஆலோசனை செய்வார்.
பெரியாரைப் புரிந்து கொள்வது என்பது சாதாரண விஷயம் கிடையாது. பிறகுதான் நான், பெரியாரைப் படிக்க படிக்க, ஒரு கட்டத்துக்குப் பிறகு அவரை நான் மெட்டப்பர் (Metaphor) ஆக மாற்றிக் கொண்டேன். பெரியாரை எப்படி புரிந்துகொள்ள ஆரம்பித்தேன் என்றால், பெரியாரை நம் வாழ்க்கையில் நம்மால் புரிந்து கொள்ளவே முடியாது. ஆனாலும், அவர்கள் இல்லை என்றால், நம்மால் வாழ முடியாது, அது யார் என்றால், நம்மோடு வாழ்கின்ற ஒரு பெண்ணைப்போல. அது அம்மாவாக இருக்கலாம்; அது தோழியாக இருக்கலாம்; காதலியாக இருக்கலாம்; அக்காவாக இருக்கலாம்; பெரியாரை நான் அந்த வகையில்தான் புரிந்துகொள்ள முயற்சி செய்தேன்.
நம்மைப் பாதுகாக்கக் கூடிய
உணர்வைக் கொடுப்பார்!
பெரியாரை வாசிக்க வாசிக்க, ஓர் ஆத்திரம் ஏற்படும். சில நேரத்தில் என்ன இப்படிப் பேசுகிறாரே? என்று தோன்றும். அது நம்முடைய அம்மாவிடம் நமக்குத் தோன்றி இருக்கும். சில நேரங்களில், நம்மைப் பாது காக்கக் கூடிய உணர்வைக் கொடுப்பார். அந்தப் பாதுகாப்பும் நம்முடைய அம்மாவை ஞாபகப்ப டுத்தும். சில நேரங்களில், நம்மைச் சுதந்திரத்தை நோக்கி நகர்த்துவார். அந்தச் சுதந்திரம், நம்முடைய தோழிகள் கொடுத்ததாக இருக்கும். ‘‘போய் அடிடா’’ என்று சொல்வது போன்று இருக்கும். இப்படி எல்லா வகையிலேயும் பெரியாரை வாசிக்க வாசிக்க, நான் புரிந்துகொண்டது என்னவென்றால், நம்மு டைய சுதந்திரத் தன்மை, சமத்துவத் தன்மை, சகோ தரத்துவம், சமூக நீதி எல்லாவற்றிற்குமே ஒற்றை சொல்லாக்கக்கூடியவர்கள் நம்மிடையே வாழக்கூடிய பெண்கள்தான். அது அம்மாவாக இருக்கலாம்; அக்காவாக இருக்கலாம்; தங்கையாக இருக்கலாம்; தோழியாக இருக்கலாம்; நம்முடன் படிக்கக்கூடிய தோழிகளாக இருக்கலாம். இவர்கள் எல்லோரையும் நாம் எப்படி கையாளுகிறோம்; அவர்கள் நம்மை எப்படிக் கையாளுகிறார்கள் என்பதுதான் மிக முக்கியம்.
எப்படிப் பார்த்தாலும், நம்மிடையே ஆதிக்க மனநிலை வந்துவிடும். ஆனால், அவர்கள் அதற்காக ‘பைட்’ செய்வார்கள். நாம் அவர்களை ஒவ்வொரு காலகட்டத்திலேயும், நீங்கள் இப்படித்தான் இருக்க வேண்டும், இப்படித்தான் இருக்கவேண்டும் என்று வகுத்துப் பார்த்துக் கொண்டே இருப்போம். ஏதாவது ஒரு வகையில், நாம் அவர்களுக்குப் புத்தி சொல்லிக்கொண்டே இருப்போம். ஆனால், அவர்கள் சில சமயங்களில் அதை மீறுவார்கள். அதை மீறும்போது, அவர்கள் மேல் நமக்குக் கோபம் வரும். ‘‘நான் இந்த அளவிற்கு அன்பு செலுத்துகிறேன், உன்னை நம்புகி றேன், ஆனால், நீ இப்படி பேசுகிறாயே’’ என்று கோபம் வரும்.
இப்படித்தான், நிறைய இடத்தில், அவரைப்பற்றி வாசிக்கும்போது நிறைய குழப்பங்கள் வந்திருக்கின்றன. இப்படி ஏன் சொன்னார்? அவை எல்லாவற்றையும் வாசிக்க வாசிக்க, புரிந்து கொள்ள, புரிந்து கொள்ள நிலையானது எது என்று எதிர்நோக்கி நகரும் போதுதான், எனக்குப் புரிந்தது.
நாம் மேலோங்கி இருக்கிறோம், நாம் வெற்றி பெற்றிருக்கின்றோம் என்பதை உணரவே முடியாது!
நிலையானதாக என்னை மேம்படுத்துவதாகத்தான் இருந்தது. அவர் கடைசியாகக் கொண்டு போய்ச் சேர்த்த இடம், என் வாழ்க்கையைப் பற்றி புரிந்து கொள்வதற்கு, என் வாழ்க்கையைச் சுதந்திரமாக மாற்றிக் கொள்வதற்கு, எனக்கு இருக்கக்கூடிய அக முகங்களை நான் புரிந்து கொள்வதற்கு, இதற்குள்ள மேன்மையான ஆதிக்க மனநிலையை முறியடித்து, ஒவ்வொரு தளத்தில் நின்று, ஒவ்வொரு புள்ளியிலும் நின்று, நான் என்னைப் பற்றி புரிந்துகொள்வதற்கு, பெருமாள் முருகன் அய்யா இங்கே சொன்னார் அல்லவா, ‘‘நீ சிந்தி, நான் சொன்னது தவறா, சரியா? என்று. சரி என்றால், எடுத்துக்கொள், தவறு என்றால் விட்டுவிடு’’ என்று! அந்தக் கோணத்திலிருந்து நான் பார்க்க ஆரம்பித்தேன். இலக்கியத்தில் எப்படி என்று தெரியாது. கட்சி, இயக்கங்களில் எப்படி என்று தெரியாது. அதற்குப் பிறகுதான் திரைப்படத் துறையில் இருக்கும் போதுதான், சினிமா மாதிரியான, துறைக்குள் பெரியாரைப் பற்றி பரந்துபட்ட பார்வை, நிறைய பார்வைகள் இருக்கின்றன. குழப்பமான பார்வைகள் இருக்கின்றன.
ஏனென்றால், எல்லாவற்றுக்குள்ளும் ஒரு ‘சேர்’ இருக்கிறது. ‘மாமன்னன்’ திரைப்படத்தில் காட்டியதுபோன்று! என்ன ஆனாலும் நம்மால் தவிர்க்க முடியாதது, நமக்குள் சின்ன வயசில், எல்லோருக்குள்ளும் இருக்கக்கூடிய விருப்பமான ஓர் ஆதிக்கம், ஆதிக்கம் என்பது ஒரு விருப்பமான உணர்வு. அது எல்லா மனித உயிர்களுக்குமான விருப்பமான உணர்வாகவே மாறிப்போயிற்று. ஏதா வது ஒரு வகையில், யாரும் உட்கார முடியாத ஓர் இருக்கை நம் மனதிற்குள் தேவைப்பட்டுக் கொண்டே இருக்கும். யாரும் அடைய முடியாத இருக்கை ஒன்று இருக்கிறது. எல்லோருக்குள்ளும் அந்த இருக்கையை நோக்கி நகர்ந்து கொண்டே இருக்கும். அந்த இருக்கை மிகச் சாதாரண விஷயம் கிடையாது. அது இருக்கோ, இல்லையோ, ஆனால், நம் மனதுக்குள் இருக்கும். நமக்குக் கீழே, நமக்கு அடுத்து அப்படி என்கிற செட்டப் எல்லோருக்குள்ளேயும் இருக்கும். நாம் வெளியே என்ன பேசுகிறோம் என்று தெரியாது. எப்படி வாழ்கிறோம் என்று தெரியாது. ஆனால், வீட்டுக்குள்ளேயாவது, வேலை செய்கிற இடத்திலாவது எங்கேயாவது நமக்குக் கீழே என்று ஒரு ‘செட்’ இருந்து கொண்டே இருக்கவேண்டும். அது இல்லாமல் நம்முடைய வெற்றியை, நம்முடைய பாய்ச்சலை நம்மால் உணரவே முடியாது. நாம் மேலோங்கி இருக்கிறோம், நாம் வெற்றி பெற்றிருக்கின்றோம் என்பதை உணரவே முடியாது.
ஆதிக்க மனநிலையில் இருந்து கொஞ்சம் கொஞ்ச மாக ‘ஸ்பிரட்’ (Spread) ஆகிக்கொண்டே இருக்கும். எங்கேயாவது வெளிப்பட்டுக் கொண்டே இருக்கும். நாம் இவ்வளவு பேசுகிறோம், இவ்வளவு படங்கள் எடுக்கிறோம்; நாம் நம்முடைய மனைவியிடம், நம்முடைய தோழியிடம், நம்முடைய காதலியிடம் நாம் நேர்மையாக இருக்கின்றோமா என்று தோன்றும். பல நேரங்களில் நான் குழம்பியிருக்கிறேன்; பல நேரத்தில், அவர்களிடம் நான் கண்ணீர் சிந்தியிருக்கிறேன். வருத்தப்பட்டிருக்கிறேன்.
ஆதிக்கத்தை வாழ்க்கை முறையையே மாற்றிவிட்டார்கள்!
ஏனென்றால், பல நாளாகவே ஆதிக்கத்தை வாழ்க்கை முறையாகவே மாற்றிவிட்டார்கள். இப்படித்தான் இருக்க வேண்டும். ஒரு வீடு கட்டமைக்க வேண்டும் என்றால், ஒரு குடும்ப முறை என்று சொல்லி, இப்படித்தான் இருக்க வேண்டும். நம்மால் சுதந்திரமாக வாழவே முடியாது. இரண்டு பேரும் சமத்துவமாக இருக்கவே முடியாது. அப்படி இருந்தால் உன்னால் வாழ்க்கையில் பயணப்படவே முடியாது என்று வாழ்க்கை முறையையே மாற்றிவிட்டார்கள்.
வீட்டில் அம்மா, அப்பா சொல்லுவார்கள், அது எப்படி ஒரே மாதிரி இண்டு பேர் இருக்க முடியும்? யாராவது ஒருத்தர் விட்டுக் கொடுத்து போகவேண்டும் அல்லவா! அப்படியென்றால், விட்டுக் கொடுப்பது யார்? என்கிற கேள்வி வருகிறது அல்லவா! விட்டுக் கொடுக்கவே கூடாது என்கிற எண்ணம் கிடையாது எனக்கு. யார் விட்டுக் கொடுத்துக்கிட்டே இருக்கவேண்டும். யார் விட்டுக் கொடுத்தால் இன்னொருத்தவர் மனம் நோகாமல் இருப்பார்கள். இன்னொரு மனிதன் கஷ்டப்பட மாட்டார். நாம் சேர்ந்தே இருக்கலாம் என்று ஒன்று இருக்கு அல்லவா! இப்போது என்னுடைய படங்களில் அதைத்தான் எதிர்பார்ப்பார்கள்.
நீ உரையாடல் நிகழ்த்து. என்னுடைய ‘பரி யேறும் பெருமாள்’ திரைப்படத்திற்கும் ‘கர்ணன்’ திரைப்படத்திற்கும் பெரிய மாற்றம் வந்தது. ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படத்தைக் கொண்டாடியவர்கள், ‘கர்ணன்’ திரைப்படத்தால், புண்பட்டு விட்டதாகச் சொன்னார்கள். பிறகு ‘மாமன்னன்’ திரைப்படத்திலும் புண்பட்டார்கள். பிறகு ‘வாழை’ திரைப்படத்தில் புண்பட்டார்கள். பிறகு ‘பைசன்’ திரைப்படத்தில் கொஞ்சம் மேம்பட்டார்கள். ஏதாவது ஒரு படைப்பில் மேம்படுவதும், பிறகு புண்படுவதும் அவர்களுக்கு வழக்கமாக இருக்கிறது. எப்படி ஒருத்தர் படைப்பில் மேம்படுவதும், பிறகு புண்படுவதும் நடக்க முடியும்?
ஒவ்வொரு பாயிண்ட் ஆஃப் வியூவும், ஒவ்வொரு பெர்ஸ்பெக்ட்டிவ் ! (Perspective) சேஞ்ச் ஆகும்போது, இப்போது நான் இன்றைக்கு இப்படி பேசுகிறேன்; இன்னொருத்தன் பாதிக்கப்பட்டான் என்றால், அவ னுக்கு என்று ஒரு மொழி இருக்கிறது; அவனுக்கு என்று ஒரு வாழ்க்கை இருக்கிறது. அவனுக்கு என்று ஒரு வழி இருக்கிறது.
அவனுடைய பெர்ஸ்பெக்டிவ் என்னை விட வேறு ஒன்றாக இருக்கும். மாரி செல்வராஜூக்கு என்று ஒரு வாசிப்பு இருக்கிறது. மாரி செல்வராஜூக்கு என்று ஒரு வாழ்க்கை இருக்கிறது. மாரி செல்வராஜூக்குச் சில ஆசான்கள் கிடைத்தார்கள். மாரி செல்வராஜூக்கு ஒரு நல்ல தோழி கிடைத்தார். அந்த தோழியின் வீட்டில் ஒரு பெரியார் புகைப்படம் இருந்தது. தோழியுடைய அம்மா ஒரு பெரியாரிஸ்டாக இருந்தார். அதனால் எனக்கு எல்லாம் கிடைத்தது.
எப்போதுதான் என்னுடைய
வாழ்க்கையை வாழ்வது?
எங்களுடைய காதல் கதையை எடுத்தால், வேறு ஒரு காதல் கதை. ஆனால், இதே காதல் கதை இன்னொ ருத்தருக்கு இருக்குமா என்று கேட்டால், இருக்காது. ஏனென்றால், அவன் வீட்டில் வேறொரு ஒரு போட்டோ மாட்டியிருக்கும். அந்தப் போட்டோ அவனை வேறு விதமாய் வழி நடத்தியிருக்கும். இப்படி எல்லோரையும் புரிந்து கொள்வது என்ற ஒன்று இருக்கிறது. இப்படி எல்லாவற்றையும் புரிந்து கொள்வதற்கு சிக்கல் எல்லா இளைஞர்களிடமும் இருக்கிறது. இங்கே யாரையும் குற்றம் சொல்ல வரவில்லை. நாம் இதை எப்படி கடத்துகிறோம்? எப்படிக் கொண்டு போய்ச் சேர்க்கிறோம்? ஏனென்றால், யாரோடும் சண்டை போட்டு, சண்டை போட்டு, நம்முடைய வாழ்க்கையை எப்போதுதான் வாழ்வது? தினமும் சண்டை போட்டுக்கொண்டே இருக்கிறோம் என்கிற ‘பீல்’ இருக்கிறது. எல்லோர் மீதும் கோபம் வந்துகொண்டே இருக்கிற மாதிரி இருக்கிறது. அப்படி என்றால், எப்போதுதான் என்னுடைய வாழ்க்கையை வாழ்வது? இத்தனை வாசித்த பிறகு, இவ்வளவு வலியைச் சுமந்ததற்குப் பிறகு, எப்போதுதான் நான் பயணப்படுவது? எப்போதுதான் இந்த உலகத்தினுடைய எல்லா எல்லா மூலைகளுக்கும் சென்று நான் வாழ்வது? எப்போதுதான் இந்த வாழ்வின் மேன்மையை அடைவது? என்கிற ஏக்கம் இருக்கும் இல்லையா?
‘‘நான் சொல்வதைக் கேட்டுதான் ஆக வேண்டும்’’ என்று சொல்லவில்லை!
இப்போது எனக்கு 42 வயது ஆகிறது. ஆசை வர ஆரம்பிக்கும் அல்லவா! அதற்கான சக்தி எங்கிருந்து வருகிறது என்றால், நாம் நேர்மையாக இருக்கிறோமா? என்று தோன்ற ஆரம்பிக்கும். நாம் நிலையானதாக இருக்கிறோமா? நம் மனதில் பட்டதை வெளிப்படையாகச் சொல்கிறோமா? அதில் தவறு என்று ஒன்று இருந்தால், அதை நம்முடைய மனைவியிடமோ, தோழியிடமோ, அம்மாவிடமோ பகிரங்கமாக ஒப்புக்கொள்கிறோமா? என்பதுதான் மிகமிக முக்கியமானதாகும். அப்படி பகிரங்கமாக ஒப்புக்கொள்கின்ற தன்மையைக் கொடுத்தது பெரியார் என்று சொல்லலாம். ஏனென்றால், நான் பகிரங்கமாக ஒப்புக் கொள்ள ஆரம்பித்தேன். நான் பகிரங்கமாக நிறைய விஷயங்களை மனைவியிடம் ஒப்புக்கொண்டு இருந்திருக்கிறேன்.
அதற்கு ஒரே காரணம் என்னவென்றால், இவ்வளவு பெரிய தலைவரான அவர், எங்கேயுமே ‘‘நான் சொல்வதைக் கேட்டுதான் ஆக வேண்டும்’’ என்று சொல்லவில்லை. அவர் தொடர்ந்து நிலைபெற்று நிற்பதற்கான காரணம், அது ஒன்றுதான் என்று நான் நம்ப ஆரம்பிக்கிறேன்.
இன்னும் நான் பெரியாரை வாசிக்க வாசிக்க, நான் நன்றாகப் பேசக் கற்றுக்கொள்வேன்!
ஏனென்றால், இன்றைக்கு மாரி செல்வராஜ், பெரியாரைப் பற்றி படித்துவிட்டு பேசுகிறார் என்றால், இன்னும் கொஞ்ச நாள் கழித்து, ஒரு 10 ஆண்டு கள் கழித்தோ, 20 ஆண்டுகள் கழித்தோ மாரி செல்வராஜ் இதைவிட நல்லா பேசுகிறேன் என்று வைத்துக் கொள்ளுங்களேன், பெரியாரை எதிர்த்தே மாரி செல்வராஜ் பிரபலம் ஆகலாம். நல்லா பேசக் கற்றுக் கொள்ளலாம்; எனக்கு இப்போது நன்றாகப் பேச வரவில்லை. இன்னும் நான் பெரியாரை வாசிக்க வாசிக்க, நான் நன்றாகப் பேசக் கற்றுக்கொள்வேன். எனக்கு நல்ல திராணி வந்து விடும்; நீங்கள் எல்லோரும் என் பேச்சைக் கேட்டு கை தட்ட ஆரம்பித்து விடுவீர்கள். நீங்கள் கை தட்ட ஆரம்பித்ததும், என் நாடி நரம்பு எல்லாம் புடைக்க ஆரம்பித்துவிடும். அப்போது நான் பயங்கரமாகப் பேச ஆரம்பிப்பேன்; அப்போது நாம் யாரைக் கற்றுக்கொண்டோமோ, யாரிடமிருந்து எல்லாவற்றையும் கற்றுக்கொண்டோமோ, யாரிடமிருந்து எல்லாவற்றையும் பெற்றுக்கொண்டோமோ, அதற்குப் பிறகு, அவர்களை பற்றி பேசும்போது மட்டும்தான் நீங்கள் பெரிய ஆளாக ஆக முடியும்.
ஆசானை மீற வேண்டும் என்று ஒன்று இருக்கிறது அல்லவா! அது ஆசானைக் குறை சொல்லி அல்ல; ஆசான் உங்களைப் பாராட்ட வேண்டும். நீங்கள் யாரிடம் கற்று கொண்டீர்களோ, அவர்களை மீற வேண்டும் என்று எல்லோருக்குமே ஆசை இருக்கும். நான் ராம் சாரிடம் கற்றுக்கொண்டேன் என்றால், அவர் என்னிடம் சொல்லுவார், ‘‘என்னைவிட நீ சிறந்த டைரக்டர் என்று பெயர் வாங்கவேண்டும். அப்போதுதான் நான் உனக்குச் சரியாகக் கற்றுக் கொடுத்திருக்கிறேன் என்று அர்த்தம். மாரி செல்வராஜியினுடைய டைரக்டர் ராம் என்று சொல்லும்போது, அது எனக்குப் பெரிய பெருமையடா என்பார். அதற்குக் காரணம் என்னவென்றால், உனக்கு நான் சரியாகக் கற்று கொடுத்திருக்கேன் என்று அர்த்தம்’’ என்பார்.
பெரியாரைத் திட்டுவதின் மூலமாக நான்
பெரிய சிந்தனையாளனாக ஆகிவிடமுடியாது!
அப்படியென்றால், நான் பெரியாரை விட மிகச் சிறந்த சிந்தனையாளன் என்று நிரூபிக்கவேண்டும் என்றால், பெரியாரைத் திட்டி நிரூபிக்கக் கூடாது. பெரியாரைத் திட்டுவதின் மூலமாக நான் பெரிய சிந்தனையாளனாக ஆகிவிடமுடியாது. பெரியாரை புரிந்து கொண்டு, பெரியார் எதற்கெல்லாம் ஆசைப்பட்டாரோ, எந்த மாதிரியான சமூகத்தை உருவாக்க ஆசைப்பட்டாரோ, எப்படிப்பட்ட கருத்துச் சுதந்திரம் வரவேண்டும் என்று நினைத்தாரோ, ஒவ்வொரு மனிதனிடமும், அவனிடம் விவாதம் செய்து, அவனுடன் பேசி, அவனுடைய மனதுக்குள், எங்கேயோ ஒளிந்து கொண்டிருக்கக்கூடிய கொஞ்சம் கொஞ்சம் விஷயத்தையும், எதையாவது ஒன்றைப் பேசிப் பேசி பேசி, எப்படி அதிலிருந்து விடுபட்டு, அவனைச் சுதந்திரமான மனிதனாக மாற்றுவதற்காக தன்னிடமிருந்த எல்லா ஆற்றலையும் பயன்படுத்தி இருக்கிறார். கோபத்தைப் பயன்படுத்தி இருக்கிறார்; ஆக்ரோசத்தைப் பயன்படுத்தி இருக்கிறார். அன்பைப் பயன்படுத்தி இருக்கிறார். எல்லா உணர்வுப்பூர்வமான வழிமுறைகளை அவர் பயன்படுத்தி இருக்கிறார். அப்படிப் பயன்படுத்தியதைத்தான், அந்த உணர்ச்சிக் குவியலைத்தான் நான் பெரியாரிடம் புரிந்துகொண்டேன். ஒரு தத்துவார்த்த உணர்ச்சிக் குவியல் என்று பெரியார் சொல்வார். அதிலும் தமிழ் வாழ்வோடு சம்பந்தப்பட்டது என்று சொல்வார். இங்கே உள்ள ஒவ்வொரு தமிழ் மனிதனையும் பார்த்து, அவனுடைய வாழ்க்கை முறை, அவனுடைய சிக்கல்கள், அவனுடைய பிரச்சினைகள் எல்லாவற்றையும் பார்த்து வந்ததினால், அவரால் எந்த அளவிற்குச் சிந்திக்க முடிந்தது என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.
எல்லோராலும் புகழப்பட வேண்டும்; எல்லோராலும் கொண்டாடப்பட வேண்டும் என்கிற ஆசை இருக்கிறது!
நமக்காக வாழ்வின் கடைசி நாள் வரைக்கும் போராடக்கூடிய மனிதர்களை நாம் எப்படி பார்ப்போம் என்றால், அவர்கள் எப்படி உட்கார்ந்தார்கள் தெரியுமா? எப்படி நடந்தார்கள் தெரியுமா? எப்படி பேசினார்கள் தெரியுமா? எல்லாமே நமக்கு தெரியும். அவர்களை விமர்சிப்பது மிகச் சாதாரண விஷயமாகிவிடும். நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால், எல்லோரையும் ஜெயிக்க வேண்டும் என்கிற ஆசை எனக்கும் இருக்கிறது. நானும் மிகச்சிறந்த இயக்குநர், இங்கே இருக்கக்கூடிய எல்லா இயக்குநர்களையும் தாண்டி, மாரி செல்வராஜ் தான் மிகச்சிறந்த இயக்குநர் என்று நிரூபிக்க வேண்டிய ஆசை எனக்கும் இருக்கிறது. அது நிலை பெற வேண்டும்; அதுதான் கடைசியாக இருக்க வேண்டும் என்கிற ஆசை எனக்கும் இருக்கிறது. எல்லோராலும் புகழப்பட வேண்டும்; எல்லோராலும் கொண்டாடப்பட வேண்டும் என்கிற ஆசை எனக்கும் இருக்கிறது. ஏன் அப்படி இருக்கிறது என்றால், அதுதான் உச்சம். அந்த உச்சத்தை அடைய வேண்டும் என்பது எல்லா கலைஞர்களுக்குமான, எல்லா தனி மனிதனுக்குமான உரிமை. அதில் யாரும் மாற்றுக் கருத்து சொல்ல முடியாது. அதில் மாற்றுக் கருத்தே கிடையாது.
வன்மத்தையும், வெறுப்புணர்ச்சியையும், பிரிவினையும் கொடுப்பது சாதனை கிடையாது!
ஆனால், எதைப் பேசி, எதைச் செய்து, எதை நிரூபித்து, எதை எடுத்துக்கொண்டு போய் மக்களிடம் கொடுக்கவேண்டும் என்பது மிகவும் முக்கியமானது. வன்மத்தையும், வெறுப்புணர்ச்சியையும், பிரிவி னையும் கொடுப்பது சாதனை கிடையாது. எல்லா வற்றையும் இணைப்பதுதான். அது ஒரு பெரிய யுத்தம். அந்த யுத்தத்தில் நீங்கள் வெற்றி பெறுவீர்களா? தோல்வி அடைவீர்களா? என்று தெரியாது. ஆனால், உங்கள் வாழ்நாள் முழுவதும் அந்த யுத்தத்தை நிகழ்த்திக் கொண்டே இருந்தீர்கள் என்றால், அதுதான் உங்களுடைய வாழ்வினுடைய மிகப்பெரிய உன்னதமான நிலை. அந்த உன்னதமான நிலையை அடைவதற்குத் தான் எல்லா தளத்திலேயும் நாம் பெரியாரைப் புரிந்துகொள்ளவேண்டும்.
அந்த உன்னதமான நிலையைத்தான் நான் பெரி யாரிடம் இருந்து புரிந்துகொண்டேன். இப்போதுதான் நான் முதன்முறையாக பெரியார் அருங்காட்சியகத்தைப் போய் பார்த்தேன். அவர் பயன்படுத்திய பொருட்களை எல்லாம் பார்க்கும்போது, ரொம்ப மேன்மையான, இதுவரைக்கும் எந்த ஒரு தலைவருடைய நினைவி டத்திலாவது அப்படி ஒரு மூத்திரச் சட்டி இருந்திருக்குமா? என்று எனக்கு ஆச்சரியமாக இருந்தது. மிகப்பெரிய உணர்ச்சியை எனக்குள் கடத்தினார்.
கருப்பு, சிவப்பு, நீலம் மூன்று வண்ணங்கள்தான் என் கண்களுக்குத் தெரிந்தது!
அந்த உணர்ச்சியில் தான் நான் இன்னமும் இருக்கிறேன். இன்றைக்கு இந்த விழா இப்படி மாறும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. நான் ஒரு சினிமாக்காரனாகத்தான் இங்கே வந்தேன் முதலில்! என்னை அறியாமலேயே எனக்குள் இருக்கக்கூடிய அந்த உணர்வு வெளிப்பாடாகிறது. நாம் எங்கிருந்து எடுத்துக் கொண்டோம்; நான் ஒரு நாள் அருள்மொழி அக்காவிடம் பேசினேன். மேடையில் பேசும்போதும், ஒவ்வொரு படைப்பு எழுதும்போதும், ஒவ்வொரு திரைக்கதை எழுதும்போதும், தமிழ்ச் சமூகம் இதை எப்படி எடுத்துக் கொள்ளும்? இதை எப்படி எதிர்கொள்ளும்? இதை எதிர்கொள்வதற்கான பக்குவம் சமூகத்திடம் இருக்கிறதா? இந்த உரையாடலுக்கு அவர்கள் தயாராக இருக்கிறார்களா? இதற்கு எதிர்வினை ஆற்றி, இந்தப் படைப்பை வரவிடாமல் செய்துவிடுவார்களா? என்கிற பயம் இருக்கும். அப்போதெல்லாம் நான் யாரை நம்பியிருப்பேன் என்றால், அப்போது எனக்கு மூன்று கலர் கண்ணுக்குத் தெரியும். கருப்பு, சிவப்பு, நீலம். இந்த மூன்று கலரும்தான், ‘‘எழுது, பார்த்துக் கொள்ளலாம்’’ என்று தோன்றும். இவர்கள் எல்லாம், ‘‘இல்லப்பா, தமிழ்நாடு எல்லாம் வேறப்பா’’ என்று சொன்னார்கள் என்றால், இவர்கள் 500, 500 பேர் இருந்தாலே போதும். 1,500 பேர் போதும் தமிழ்நாட்டை அடக்குவதற்கு. அப்படியான ஒரு நம்பிக்கையில் தான் என்னுடைய படங்கள் எழுதப்பட்டு இருக்கின்றன. அப்படியான நம்பிக்கையில் தான் என்னுடைய படங்களின் திரைக்கதைகளை நான் எழுதினேன். கிட்டத்தட்ட எல்லா மேடைகளிலும் நான் மார்க்ஸ் விருதும் வாங்கி விட்டேன், அம்பேத்கர் விருதும் வாங்கி விட்டேன், பெரியார் விருதும் வாங்கி விட்டேன். அப்படி என்றால், நான் என்னுடைய பாதையில் சரியாக போய்க் கொண்டிருக்கிறேன் என்று அர்த்தம். அப்படிப்பட்ட பாதையை எனக்குச் சரியாக உருவாக்கிக் கொடுத்த என்னுடைய தோழிக்கு, என்னுடைய காதலிக்கு இந்த விருதை நான் சமர்ப்பிக்கிறேன்.
‘பெரியார் விருதை’ நான் வாங்கியதில்,
மிக உச்சமான ஒரு மகிழ்ச்சி அடைகிறேன்!
ஏனென்றால், மாரி செல்வராஜைப் பக்குவப்படுத்தி யதில், மாரி செல்வாராஜை வழி நடத்தியதில், அம்பேத்கரிய, பெரியாரிய, மார்க்சியக் கருத்துகளுக்கு எவ்வளவு முக்கியம் உண்டோ, அதைவிட என்னுடைய காதல் கருத்துகளும் முக்கியமானவை. ஏனென்றால், நான் பண்பட்டதற்கு என்னுடைய காதல் முக்கியமான காரணம். இல்லையென்றால், நான் எப்படி, எந்தத் திசையை நோக்கி நகர்ந்திருப்பேன் என்று எனக்குத் தெரியாது. அப்படிப்பட்ட ஒரு தோழியோடு இந்த விருதை நான் வாங்கியதில், மிக உச்சமான ஒரு மகிழ்ச்சி அடைகிறேன்.
கருப்பு சட்டை என்னுடைய சிறிய வயதுமுதல் என்னைத் தாங்கிப் பிடித்திருக்கிறது!
அருண் சொக்கன் என்று ஒருவர் இருக்கிறார். நான் ஆபீஸ் போயிருந்த காலகட்டத்தில் இருந்து எனக்கு அவர் உதவி செய்தவர். எனக்கு அவர் எவ்வளவு உதவி செய்தார் என்று எனக்கே தெரியாது. அவரை இந்த அரங்கத்தில் பார்த்ததும் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அவரை நான் பார்த்த நாளிலிருந்து அவர் கருப்புச் சட்டைதான் அணிந்திருக்கிறார். ஒரு நண்ப னாகவும், அண்ணனாகவும் இருந்து முதலில் 50 ரூபாய் கொடுத்ததுதான் எனக்கு ஞாபகம் இருக்கிறது. அதற்குப் பிறகு எவ்வளவு காசு கொடுத்தார் என்று எனக்குத் தெரியவில்லை. நான் கண்டிப்பாக வெற்றி பெறுவேன், நான் உறுதியாக டைரக்டர் ஆவேன் என்று அவர் நம்பினார். இங்கே அவரை நான் எதிர்பார்க்கவே இல்லை. ஏதோ ஒரு வகையில், எப்படி என்னை சிவப்புச் சட்டைகள் தூக்கி நிறுத்தியதோ, எப்படி நீலச் சட்டைகள் நிறுத்தியதோ, அதுபோன்று, கருப்பு சட்டையும் என்னுடைய சிறிய வயதுமுதல் என்னைத் தாங்கிப் பிடித்திருக்கிறது என்பதில் எனக்கு மிகப்பெரிய சந்தோஷம்.
எவ்வளவு இடர்ப்பாடுகள் வந்தாலும்…
மறுபடியும் சொல்லிக் கொள்கிறேன், எவ்வளவு இடர்ப்பாடுகள் வந்தாலும்கூட, அறத்தின் பக்கம் நின்று, என் கலையைக் கொண்டு போக வேண்டும் என்பதுதான் என் நோக்கம். அப்படி எந்நாளும் அறத்தின் பக்கமே நிற்பேன் என்று இந்த மேடையில் உறுதி அளித்து விடைபெறுகிறேன்!
நன்றி, வணக்கம்!
– இவ்வாறு திரைப்பட இயக்குநர் மாரி செல்வராஜ் உரையாற்றினார்.
