‘பெரியார் விருது’க்கு என்னைத் தேர்ந்தெடுத்த தந்தை பெரியார்
முத்தமிழ் மன்றத்திற்கும், ஆசிரியர் அய்யா அவர்களுக்கும் மிக்க நன்றி!
‘பெரியார் விருதி’ற்காக
ஆறு ஆண்டுகளாக காத்திருந்தேன்!
பெரியாரை எனக்குள் ஆழமாகக் கொண்டு வந்து சேர்த்ததும்,
எனக்குள் பெரியாரை விதைத்தவரும் என்னுடைய துணைவியார்தான்!
சென்னை, ஜன.22 ‘பெரியார் விருது’க்கு என்னைத் தேர்ந்தெடுத்த தந்தை பெரியார் முத்தமிழ் மன்றத்திற்கும், ஆசிரியர் அய்யா அவர்களுக்கும் மிக்க நன்றி! முன்பே ‘பெரியார் விருதி’ற்காக ஆறு ஆண்டுகளாகக் காத்திருந்தேன். பெரியாரை எனக்குள் ஆழமாகக் கொண்டு வந்து சேர்த்ததும், எனக்குள் பெரியாரை விதைத்தவரும் என்னுடைய துணைவியார்தான் என்றார் திரைப்பட இயக்குநர் மாரிசெல்வராஜ் அவர்கள்
‘பெரியார் விருது’ வழங்கும் விழா!
கடந்த 17.1.2026 அன்று மாலை சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில், தந்தை பெரியார் முத்தமிழ் மன்றத்தின் 32 ஆம் ஆண்டு விழாவும், பெரியார் விருது வழங்கும் விழாவும் நடைபெற்றன. இவ்விழாவில், திரைப்பட இயக்குநர் மாரிசெல்வராஜ் உரையாற்றினார்.
அவரது உரை வருமாறு:
தந்தை பெரியார் முத்தமிழ் மன்றத்திற்கும், ஆசிரியர் அய்யா அவர்களுக்கும் மிக்க நன்றி!
எல்லோருக்கும் வணக்கம்.
ரொம்ப உணர்ச்சிகரமான ஒரு விழா நாளாக இருக்கிறது. முதல் முறையாக இப்போதுதான் நான் பெரியார் திடலுக்கு வருகிறேன். அதுவும், ஒரு பாராட்டை வாங்குவதற்காகத் தான் வந்திருக்கேன். இது ஒரு வீம்பாகவே எனக்கு இருந்தது என்று சொல்லலாம். நான் அழைக்கப்பட வேண்டும்; என்னுடைய வாழ்வும், என்னுடைய அரசியலும், என்னுடைய சண்டையும் இந்தத் திடலில் கொண்டாடப்பட வேண்டும்; அந்த ஒரு நாள் வரும்; அந்த நாளுக்காக நான் காத்திருந்தேன். அப்படி ஒரு நாளாக இந்த நாள் அமைந்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி! இந்த விழாவில், இந்த விருதுக்கு என்னைத் தேர்ந்தெடுத்த தந்தை பெரியார் முத்தமிழ் மன்றத்திற்கும், ஆசிரியர் அய்யா அவர்களுக்கும் மிக்க நன்றி! தோழர்களுக்கும் மிக்க நன்றி!
ஒரு முக்கியமான பங்கு உண்டு!
இந்த விருது வாங்குவதில் இன்னொரு சிறப்பு என்னவென்றால், பெருமாள் முருகன் அய்யாவோடு சேர்ந்து இந்த விருதை வாங்குவது. அவர் ஒளிப்படத்தோடு என்னுடைய ஒளிப்படம் வெளிவந்ததும், அவரோடு, எனக்கும் விருது அளிக்கப்படுகிறது என்று தகவல் வந்ததும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஏனென்றால், என்னைப் போன்ற கிராமத்திலிருந்து, ஜாதிய இறுக்கம் நிறைந்த ஊர்களிலிருந்து, கலைத்துறையை நோக்கி, எழுத்தை நோக்கிப் பயணிக்கக்கூடிய நிறைய இளைஞர்களுக்கு மிகப்பெரிய பாய்ச்சலை, நம்பிக்கையை – நம்மோடு வாழ்ந்து, நம்முடன் புழங்கிக் கொண்டிருக்கின்ற, நம்மோடு அண்ணன் – தம்பியாக, மாமா – மச்சானாக, எதிரியாக – நண்பனாக புழங்கிக் கொண்டிருக்கக்கூடிய எல்லா மனிதர்களையும் புரிந்து கொள்வதற்கான பக்குவத்தை ஏற்படுத்திக் கொடுத்தவை அவருடைய எழுத்துகள். அவை எந்த வழியாக, எந்த அடிப்படையில் அவரைப் புரிந்துகொள்ளவேண்டும் என்று சொல்லி, நமக்குள்ளே வாழ்ந்து கொண்டிருக்கின்ற மனிதர்களையே புரிய வைத்த எழுத்துகள், பெருமாள் முருகனுடைய எழுத்து கள். அவருடைய எழுத்துகளுக்கு, என்னுடைய சினி மாக்குள்ளே ஒரு தாக்கத்தை உண்டாக்கியதிலும் ஒரு முக்கியமான பங்கு உண்டு.
‘‘பெரியார் விருதிற்காக
நான் காத்திருந்தேன்!’’
அவரோடு சேர்ந்து இந்த மேடையில் நான் விருது வாங்கியதில் மிகப்பெரிய மகிழ்ச்சி! அதற்குப் பிறகு, அருள்மொழி அக்கா, நானும், அவர்களும் ஒரு மேடையில் பேசிக் கொண்டிருந்தபோது, நான் அவரிடம், ‘‘பெரியார் விருதிற்காக நான் காத்திருக்கேன் அக்கா’’ என்று சொன்னேன். அது நடந்தது கிட்டத்தட்ட ஓர் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு என்று நினைக்கிறேன். அது இன்றைக்கு நிறைவேறியது – அருள்மொழி அக்காவும் என்னை அறிமுகப்படுத்தி, இந்த விருதைக் கொடுக்கும் மேடையில் இருந்தது, இன்னும் கூடுதல் மகிழ்ச்சி!
வாழ்வோடு ஒன்றிப் போன
ஓர் உருவம்!
1990 காலகட்டங்களில், உங்கள் எல்லோருக்கும் தெரிந்திருக்கும். தென் தமிழ்நாடு – நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் பற்றி எரிந்த காலகட்டம். அந்தக் காலகட்டத்தில் வளர்ந்த பையன்தான் நான். அன்றைக்கு ஒரு பெரிய பாய்ச்சல் இருந்தது. எந்தத் திசையை நோக்கி, எப்படி ஓடுவது? என்று எங்கள் வீட்டுக்குள்ளேயே ஒரு கம்யூனிஸ்ட் இருந்தார். அவர் என்னுடைய சித்தப்பா. வேல்சாமி என்பது அவரு டைய பெயர். சின்ன வயதில் இருந்தே, அவரை நான் கம்யூனிஸ்டாகவே அவரை நான் பார்த்தேன். எங்கள் சித்தப்பா வீட்டிலேயே மார்க்ஸ், ஏங்கல்ஸ், பி.ராமமூர்த்தி எல்லாருடைய படங்களும் இருக்கும். அதைப் பார்த்தே நான் வளர்ந்தவன். அந்தச் சண்டை நடந்து கொண்டிருக்கும் போதே, யுத்தம் நடந்து கொண்டிருக்கும் போதே எல்லா பக்கமும் தெரிந்த ஓர் உருவம் டாக்டர் அம்பேத்கர். இந்த உருவங்கள் எனக்கு பரிச்சயம். அப்போது, வெளியே வந்ததற்குப் பிறகு, தெருவில் நடக்கும் சண்டையில் கலந்து கொள்ளும்போது, ஓடும்போது, திரியும் போதெல்லாம், ஆக்ரோசமாக அலையும் போதெல்லாம், அம்பேத்கர் வந்து இயல்பாகவே வாழ்வோடு ஒன்றிப் போன ஓர் உருவமாகவும், ஓர் ஆற்றலாகவும் மாறிப் போயிற்று எனக்கு.
பெரியார் எனக்குத் தொலைதூரக் குரலாகவே இருந்தார். எங்கேயோ தூரத்தில ஒரு குரல் கேட்டுக் கொண்டே இருக்கும். அது பெரியாருடைய குரல் என்று சொல்வார்கள். எனக்கு அதனுடைய நேரடியான பரிச்சயம் பெரிதாக இல்லை, அமையவில்லை.
எனக்கு பெரியாரோடு புழங்கவோ, நெருக்கமாகவோ வாய்ப்பு ஏற்படவில்லை!
பெரியாரைப் பற்றி என்னிடம் பேசுவதற்கோ, என்னிடம் வந்து பெரியாரைக் கொண்டு சேர்ப்பதற்கோ தடை ஏதோ இருந்ததா என்று எனக்குத் தெரியாது. ஆனால், எனக்கு பெரியாரோடு புழங்கவோ, நெருக்கமாகவோ வாய்ப்பு ஏற்படவில்லை. இதுதான் உண்மையானது. அதன் பிறகு, நான் சட்டக் கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு வரும்போது, அங்கே படிக்கும் போதே என் நண்பர்கள் வந்து பெரியாரைப் புரிந்து கொள்ள, பெரியாரை வாசிக்கச் சொன்னார்கள். ஆனால், அன்றைக்குள்ள புறச்சூழல், அன்றைக்குள்ள என்னு டைய ஊர், என்னுடைய வாழ்க்கைச் சூழல் பெரியாரை வாசிப்பதற்கான சூழலாக அமையவில்லை.
பெரியாரை எனக்குள் ஆழமாகக் கொண்டு சேர்த்தது என் துணைவியார்தான்!
அதற்குப் பிறகு, நான் சென்னை வந்ததற்குப் பிறகு, இந்த விருது மிகச் சிறப்பான விருது என்று நினைத்ததற்கு, தற்போது உணர்ச்சிப் பெருக்கமாக இருந்ததற்கான காரணம், முக்கியமான காரணம், என் துணைவியாரோடு இந்த விருதை வாங்கியதுதான். அதற்கான காரணம் என்னவென்றால், பெரியாரை எனக்கு வந்து அறிமுகப்படுத்தியது, பெரியாரை எனக்குள் ஆழமாகக் கொண்டு வந்து சேர்த்தது அவர்தான். ஏனென்றால், அவங்க பெரியாரிஸ்டா இருந்தாங்க.
எப்படி பெரியாரும், அம்பேத்கரும் ஒன்றாகச் சேர்ந்தார்கள் என்றால், நான் அம்பேத்கர்பற்றி எழுதிக் கொண்டிருந்தேன். நான் ஓர் அம்பேத்கரிஸ்டா வலைதள இயக்குநர் ராம் சார் நடத்திய ‘காட்சி’ என்கிற வலைதளத்தில், என்னுடைய வாழ்க்கையை எழுத ஆரம்பிக்கிறேன். அப்போது என்னுடைய வாழ்க்கையைக் குறிக்கக்கூடிய ஆங்காரமான கேள்விகள், கொந்தளிப்பான மனநிலை, நடுக்கமான பதில்கள் இதையெல்லாம் பார்த்து, ஒருவர் என்னிடம் பேச வருகிறார். அவர் கருப்புச் சட்டை அணிந்துகொண்டு வருகிறார். அவர் என்னிடம் பேசுகிறார். அந்த வாய்ஸ் எல்லாம் எனக்குக் கேட்கத் தொடங்கிற்று.
24 மணி நேரம் பெரியார் படம் போட்ட
பனியன்தான் அணிந்திருப்பார்!
நாம் எதையெல்லாம் ரகசியம், எதையெல்லாம் சொன்னால், நம்மைத் தவறாக நினைப்பார்கள்; எதையெல்லாம் சொன்னால், அவமானம் என்று நினைப்பார்கள் என்று சொல்லும்போது, அது ஒரு பெண்ணுக்குப் பிடிக்கிறது. அந்தக் கதைகள், அந்தக் கவிதைகள், அந்த எழுத்துகளைப் படித்துவிட்டு, என்னுடைய தோழியாக வந்து என்னிடம் பேசத் தொடங்கினார். அவர் 24 மணி நேரம் பெரியார் படம் போட்ட பனியன்தான் அணிந்திருப்பார். தமிழ்மதி என்கிற பெயரில் இருந்தார். பெரியார் மேடைகளில் பேசிட்டு இருந்தார்.
எனக்கு அது பெரிய ஆச்சரியமாக இருந்தது. ஏன்னா அப்போது தென்மாவட்டத்திற்கும், வட மாவட்டத்திற்கும் உள்ள இடைவெளியை நான் புரிந்துகொள்ள ஆரம்பித்தேன். அப்போது நான், அவரிடம் மனம் ஒத்து, ரொம்ப நெருக்கமான ஒரு பாைஷயில் பெரியாரைப் பேச ஆரம்பிக்கிறேன். நான் இருந்த கொந்தளிப்பான காலகட்டத்தில் இருந்து விடுபட்டு, சென்னைக்கு வந்ததற்குப் பிறகு, ரொம்ப ஆசுவாசமான, ஒரு நிம்மதியான ஒரு நிழலில் உட்கார்ந்து நான் பெரியாரைக் கற்றுக் கொள்ள ஆரம்பிக்கிறேன்; பெரியாரைப்பற்றி பேச ஆரம்பிக்கிறேன்.
எனக்குள் பெரியாரை விதைத்தவர்
என்னுடைய தோழி!
முதன்முதலில் நான் பெரியாரைப்பற்றி ஒரு முழு நீளப் பேச்சைக் கேட்டேன் என்றால், அது அவர் (இணையர்) பேசிய யூடியூப் வீடியோவைத்தான். ஆசிரியர் அய்யாவிடம், பேச்சுப் போட்டியில் சிறந்த பேச்சாளருக்கான விருது வாங்கி இருக்கிறார். அந்த ஒளிப்படத்தையெல்லாம் என்னிடம் காண்பித்தார். பெரியாரைப்பற்றிப் பேசி, இப்பொழுது உள்ள முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் விருது வாங்கி இருக்கிறார். அதற்குப் பிறகு, நிறைய பெரியார் மேடை களில் அவர்கள் பேசி, நிறைய விருதுகள் வாங்கி இருக்கிறார். கொஞ்சம் கொஞ்சமாக அப்படிப் பேசிப் பேசி எனக்குள் பெரியாரை விதைத்தவர் என்னுடைய காதலி, என்னுடைய தோழி திவ்யா அவர்கள்.
அதற்குப் பிறகுதான் நான், பெரியாரை வாசிக்க ஆரம்பித்தேன். பெரியாரைப் புரிந்து கொள்ள ஆரம்பித்தேன். அதுவரைக்கும் எனக்குப் பெரியார் என்பவர், ‘‘தொண்டு செய்து பழுத்த பழம், தூயதாடி மார்பில் விழும்’’, ‘‘அவர் ஒரு சுதந்திர போராட்ட வீரர்’’ அவ்வளவுதான் என்று நான் நினைத்துக் கொண்டிருந்த காலகட்டம் ஒன்று இருந்தது. அதை உடைத்து, பெரியார் என்னென்ன விஷயங்கள் செய்திருக்கிறார் என்று சொன்னார். அவருடைய வீட்டுக்குச் சென்றால், பெரியார் புத்தகங்கள் தான் அதிகமாக இருக்கும். எனக்கு அது புதுசா இருந்தது அப்போது. அது காலத்தின் கட்டாயமா? என்று எனக்குத் தெரியவில்லை. நான் ஏன் அந்த வீட்டுக்குள் போனேன் என்பது எனக்குப் புரியவில்லை.
ஜாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்டோம்!
நீங்கள் எல்லோரும் நம்ப மாட்டீர்கள். இரண்டு பேருமே ஜாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்டோம். நான் அவர்கள் வீட்டுக்குள் தங்கு தடையின்றிப் போனேன். எல்லோருக்கும் ஆச்சரியம். ‘‘எப்படி உன்னை உள்ளே விட்டாங்க? உனக்கு எப்படி பொண்ணு கொடுத்தாங்க?’’ என்று. காரணம், அந்த வீட்டுக்குள் பெரியார் இருந்தார்.
திருநெல்வேலியில் வளர்ந்த ஒரு பையன், எங்கேயோ தென்கோடி கிராமத்தில் நிறைய வேலிகளுக்குள் சிக்கிக் கிடந்த ஒரு பையனுக்கு, சேலத்தில் வசிக்கும் ஒரு பெண்ணும், ஓர் அம்மாவும் பிரம்மாண்டமாகக் கல்யாணம் நடத்தி வைக்கிறார்கள். ‘இது எப்படி சாத்தியமாயிற்று?’ என்று நினைத்தார்கள்.
நான், என் அப்பாவை அழைத்துக்கொண்டு போய் பெண் கேட்கவில்லை; என் அம்மாவை அழைத்துக்கொண்டு போய் பெண் கேட்கவில்லை. என் நண்பர்களை அழைத்துக்கொண்டு போய் பெண் கேட்கவில்லை. ஏன், யாரையுமே அழைத்துக்கொண்டு போய் பெண் கேட்கவில்லை.
‘‘நீ கிளம்பி வா’’ என்று சொன்னார்கள். உடனே நான் கிளம்பிச் சென்றேன். எந்த தைரியத்தில் நம்மைக் கூப்பிடுகிறார் என்று நினைத்துக் கொண்டு போனேன்.
நான் சேலத்திற்குச் செல்வது
அதுதான் முதன்முறை!
‘‘எங்கள் வீட்டுக்கு வந்து என்னுடைய அம்மாவிடம் பேசு’’ என்று என்னை அழைத்தார். அவர்கள் வீட்டுக்குச் சென்றால், எப்படி சமாளிக்கப் போகிறோம்? என்று நினைத்தேன். நான் சேலத்திற்குச் செல்வது அதுதான் முதன்முறை.
சேலம் மாதிரியான ஊருக்குப் போறோமே என்று நினைத்தேன். அந்தக் காலகட்டம்தான் நானும், திவ்யாவும் எங்கள் காதல் குறித்துப் பேச ஆரம்பித்த காலகட்டம். அப்போதுதான் பற்றி எரிந்துகொண்டிருந்தன வடமாவட்டங்கள். ஜாதி மறுப்புத் திருமணங்கள், நாடகக் காதல்களாக அறிவிக்கப்பட்டு, அந்த நாடகத் திருமணங்களை நிறுத்துவதற்காக, எல்லா குடிசைகளும் கொளுத்தப்பட்டுக் கொண்டிருந்த காலகட்டத்தில், நான் திவ்யாவினுடைய வீட்டுக்குச் சென்றேன். அப்போது என் மனதுக்குள் பயமும், நடுக்கமும், ஒருமாதிரியான பரிதவிப்பும் இருந்தது. நாம் சரியான முடிவுதான் எடுத்திருக்கிறோமா? அல்லது கொஞ்சம் ஆர்வக் கோளாறாகச் செயல்படுகிறோமா? என்றெல்லாம் தோன்றியது.
அவர்களுடைய வீட்டில்
பெரியார் படம் மாட்டி இருந்தது!
திவ்யா, பேருந்து நிலையத்திற்கு வந்து, என்னை அழைத்துக்கொண்டு, அவர்களுடைய வீட்டுக்குச் சென்றார்கள். ஒரு மிகப்பெரிய யுத்தத்துக்குத் தயாராக நான் போனேன். என்ன சொல்வது? எப்படியெல்லாம் பேசுவது? எப்படி ஓடுவது? எப்படி தப்பிப்பது? எவ்வ ளவு கண்ட்ரோலாக இருக்க வேண்டும் என்று, என்னை நானே தயார் செய்துகொண்டு போனேன். உள்ளே போனவுடன், நிமிர்ந்து பார்த்தபோது, அவர்களுடைய வீட்டில் பெரியார் படம் மாட்டி இருந்தது. அப்போதுதான் நான் யோசிச்சேன், நாம் தப்பித்துவிடுவோம் என்று.
அதற்குப் பிறகு, அவர்களுடைய அம்மா வந்தார். அன்றையிலிருந்து அந்த வீடு என்னுடைய வீடாக மாறிவிட்டது. எனக்குள்ளே எந்தப் பிரச்சினையும் வரவில்லை. அதற்குப் பிறகு, எல்லா எதிர்ப்புகளையும் அவருடைய அம்மாவே பார்த்துக் கொண்டார்கள். அவர்களுடைய உறவினர் வீடுகளுக்கு அழைத்துக் கொண்ட போனார்கள். அவர்களுடைய உறவுகள், சொந்த பந்தங்கள் எல்லோரிடமும் அவர்களே பேசி, அவர்களே முடிவு செய்து, எனக்கு இந்தப் பைய னைத்தான் பிடித்திருக்கிறது என்று திவ்யா சொன்ன போது, கிட்டத்தட்ட இரண்டு பேருமே நிறைய பேரோடு உரையாடினோம். அது ஒரு பெரிய அனுபவமாக இருந்தது எனக்கு!
(தொடரும்)
