இன்றைய ‘தினமலர்’ ‘எல்லாமே முன் தயாரிப்பு தானா?’ என்ற தலைப்பில் ஒரு பெட்டிச் செய்தியை வெளியிட்டுள்ளது.
ஆளுநர் வெளிநடப்பு செய்ததும் ஏற்கெனவே தயாரித்து வைத்திருந்த தீர்மானத்தை எடுத்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாசித்தார். ஆளுநர் ரவியும் தன் பங்கிற்கு பேரவையில் இருந்து வெளியேறியதும், அரசின்மீது சில குற்றச்சாட்டுகளை அடுக்கி அறிக்கை வெளியிட்டார். இரு தரப்பினரும் ஏற்கெனவே ஒத்திகை பார்த்ததுபோல், இந்த விவகாரங்கள் அரங்கேறின என்பதுதான் ‘தினமலரின்’ அந்தப் பெட்டிசெய்தி.
இதன்நோக்கம் இருதரப்பும் சரிக்குச் சரியாக தவறு செய்ததுபோல ஒரு தோற்றத்தை உருவாக்குவதுதான்.
இதுதான் பார்ப்பனர்களுக்கே உரித்தான தனி யுக்தி.
கடந்த மூன்று ஆண்டுகளாக ஆளுநர், சட்டத்திற்கும் பேரவை மரபுக்கும் மாறாக நடந்து கொண்ட நிலையில், அந்தத் தவறை இவ்வாண்டிலும் செய்யக் கூடும் என்ற தொலை நோக்கு மதி நுட்பத்தோடு, தீர்மானத்தைத் தயார் செய்து வைத்திருந்த முதலமைச்சரின் செயலைப் பாராட்டியிருக்க வேண்டும்.
அதற்கு மாறாக ஆளுநர் செய்ததும் தவறு தான், முதலமைச்சர் செய்ததும் தவறு தான் என்பதுபோல் குரங்கு அப்பம் பிரித்த கதையாக ‘தினமலர்’ பெட்டிச் செய்தி வெளியிடுவது பார்ப்பனர்களின் மனுநீதி புத்தி புரிந்து கொள்ளத் தக்கதே!
குறிப்பு: ஆளுநர் அறிக்கை என்பது ஆளுநர் தயாரித்த ஒன்றல்ல! மாநில அரசு தயாரித்துக் கொடுத்த அரசின் கொள்கை அறிக்கை. அந்த அறிக்கை தமிழ்நாடு அரசால் தயாரிக்கப்பட்டு, ஆளுநருக்கும் அனுப்பப்பட்டு, ஆளுநரும் ஒப்புதல் அளித்த பிறகே அச்சிடப்படுகிறது என்பதைத் தெரிந்து கொண்டால், ஆளுநரின் வெளிநடப்பு சிறுபிள்ளைத்தனமானது என்பது சிறுபிள்ளைக்கும் புரிந்துவிடுமே!
