சென்னை,ஜன.21 தமிழ்நாடு சட்டப் பேரவைக் கூட்டம் 24-ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சட்டப் பேரவைத் தலைவர் மு.அப்பாவு தலைமையில் நடைபெற்ற அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிவிப்பில், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் 24-ஆம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து சட்டப் பேரவைத் தலைவர் மு.அப்பாவு செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது: அரசின் நிறை குறைகளைப் பேசுவதற்கு ஆளுநர் அரசியல்வாதி அல்ல. ஆளுநர் மாளிகையை விட்டு வெளியேறி, ஒரு கட்சியில் சேர்ந்துவிட்டு அதையெல்லாம் பேசலாம். ஆளுநர் அவருக்கு உரிய பணியை அவர் செய்ய வேண்டும். நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரையை இப்படி செய்வார்களா..?
மரபு மாற்றப்படாது
தமிழ்நாடு சட்டப் பேரவை வரலாற்றில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து, நிறைவாக தேசிய கீதம் பாடப்படும். இந்த மரபு ஒருபோதும் மாற்றப்படாது. சட்டப் பேரவைத் தலைவர் பேசும் போது பேரவையில் மற்றவர்களின் மைக் அணைக்கப்படுவது வழக்கம்தான். தயவு செய்து உங்கள் கடமையை செய்யுங்கள் என்று மட்டும்தான் கவர்னரிடம் கூறினேன். அரசு தயாரித்து கொடுத்த அறிக்கையை வாசிப்பது கவர்னரின் கடமை. ஜனநாயக கடமையை பின்பற்றி கவர்னருக்கு அழைப்பு விடுத்திருந்தோம்.
ஜனவரி 22, 23ஆம் தேதிகளில் பேரவைக் கூட்டம் முழுமையாக நடைபெறும், ஆளுநர் உரை மீது விவாதம் நடக்கும். 24-ஆம் தேதி முதலமைச்சர் அதற்கு பதிலளிப்பார். இவ்வாறு அவர் கூறினார்.
