தஞ்சை, ஜன.21– எட்டு லட்சம் வங்கி ஓய்வூதியர்களுக்கு கடந்த 18 ஆண்டுகளாக மறுக்கப்பட்டு வரும் நிதி சார்ந்த நீதியை தாமதமின்றி வழங்க ஒன்றிய அரசும், வங்கி நிர்வாகங்களும் முன் வரவேண்டும் என ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் மேனாள் தொழிற்சங்க தலைவர்களின் கூட்டமைப்பின் (AFCCOM) தலைவர் எஸ்.பி.இராமன் வலியுறுத்தியுள்ளார்.
கடந்த 2008ஆம் ஆண்டு வங்கித்துறை ஓய்வூதியர்கள் மத்தியில் சமநீதி வேண்டி உச்சநீதி மன்றத்தில் தொடுக்கப்பட்ட எம்.சி.சுக்லா வழக்கில் 18 ஆண்டுளைக் கடந்த பின்னரும் வெளிப்படுத்தப்படும் அதீத காலதாமதம் எட்டு லட்சம் வங்கி ஓய்வுதியர்கள் மத்தியில் கலக்கத்தையும் கவலையையும் உருவாக்கி உள்ளது.
வாழ்நாள் முழுமையும் பொதுத்துறை வங்கிகளின் வளர்ச்சிக்காகவும், நாட்டின் நலனுக்காகவும், அர்ப்பணித்துக் கொண்டு உழைத்த வங்கி ஓய்வுதியர்கள் சமூகக் கழிவாக (Social Waste) கருதப்பட்டு விடக்கூடாது.
ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா, நபார்டு மற்றும் ஒன்றிய மாநில அரசின் ஓய்வூதியர்களுக்கு ஒவ்வொரு ஊதிய ஒப்பந்தத்தின் போதும் ஓய்வூதியம் சீரமைக்கப்பட்டு (PENSION UPDATION) வழங்கப்பட்டு வருகிறது.
வங்கித்துறையில் கணிசமான அளவு ஓய்வூதியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஓய்வுதிய சீரமைப்பை எட்டு லட்சம் வங்கி ஓய்வூதியர்களுக்கு மறுப்பது அரசியலமைப்பின் 14ஆவது பிரிவுக்கு எதிரானது (UNEQUAL TREATMENT TO EQUALS) என்ற கருத்தை அரசும், வங்கி நிர்வாகங்களும் சீர்தூக்கி பார்க்க வேண்டும்.
பொதுத்துறை வங்கிகளின் பென்சன் கையிருப்பு ஏறத்தாழ 4,56,424 கோடி இருக்கும் போது ஓய்வூதிய சீரமைப்பை எட்டு லட்சம் வங்கி ஓய்வூதியர்களுக்கும் தாமதமின்றி வழங்க முன்வரவேண்டும்.
கடந்த 2024 ஆண்டு மார்ச் மாதம் வங்கித்துறையில் கையெழுத்தான இருதரப்பு ஊதிய ஒப்பந்தத்தில் உறுதியளிக்கப்பட்டட Ex-Gratia கடந்த இரண்டு ஆண்டுகளாக பரிசீலனை செய்து உயர்த்தி வழங்காத வரலாற்று அநீதியை தாமதமின்றி களைய வேண்டும்.
கடந்த 1997-க்கு முன்னர் ஒய்வு பெற்றோருக்கு அளிக்கப்பட்டு வரும் சொற்ப ஓய்வுதியமும், 2002 ஆம் ஆண்டுக்கு முன்னர், ஓய்வு பெற்ற ஓய்வூதியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் பஞ்சப்படியில் உள்ள பாதகமான முரண்பாடுகளையும் தாமதமின்றி களைய ஒன்றிய அரசும் வங்கி நிர்வாகங்களும் முன் வர வேண்டும் என இக்கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
