சென்னை, ஜன. 21- தமிழ்நாடு சட்டப் பேரவையில் இன்று காலை 9.30 மணிக்கு பேரவை கூடியதும், சட்டமன்ற மேனாள் உறுப்பினர்கள் மற்றும் ஏவிஎம்.சரவணன் உள்ளிட்ட மறைவுற்றவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு நிகழ்வுகள் ஒத்தி வைக்கப்பட்டன.
தமிழ்நாடு சட்டப் பேரவைக் கூட்டம் இன்று (21.1.2026) காலை 9.30 மணிக்குக் கூடியதும், சட்டப் பேரவையின் மேனாள் உறுப்பினர்களான சா.பன்னீர்செல்வம், எல்.கணேசன் ஆகியோர் மறைவு குறித்து – அவர்கள் குறித்த இரங்கற் குறிப்புகள் வாசித்தும், இரங்கல் தெரிவித்தும் அனைவரும் எழுந்து நின்று இரண்டு மணித்துளிகள் அமைதி காத்து மரியாதை செலுத்தினர்.
அதேபோன்று, முருகப்பா குழுமத்தின் மேனாள் தலைவர் அருணாசலம் வெள்ளையன், பிரபல கவிஞர் ஈரோடு தமிழன்பன் (என்கிற) ந.செகதீசன், பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் ஏவிஎம்.சரவணன், முதுபெரும் அரசியல் தலைவர் சிவராஜ் பாட்டீல், சட்டப் பேரவை உறுப்பினர் கே.பொன்னுசாமி ஆகியோர் மறைவுக்கு இரங்கல் குறிப்புகள் வாசிக்கப்பட்டு இரங்கல் தெரிவித்தும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் பெருமக்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று இரண்டு மணித்துளிகள் அமைதி காத்து மரியாதை செலுத்தினர். இதையடுத்து “பேரவை நிகழ்ச்சிகள் இத்துடன் முடிந்து மீண்டும் நாளை காலை தொடங்கும்” என சட்டப் பேரவைத் தலைவர் மு.அப்பாவு அறிவித்தார்.
