திருவனந்தபுரம், ஜன.21 தமிழ்நாடு சட்ட மன்றக் கூட்டத்தொடர் தேசிய கீதத்துடன் தொடங்கப்படவில்லை என ஆளுநர்
ஆர்.என். ரவி நேற்று (20.1.2026) தனது ஆளுநர் உரையைப் புறக்கணித்து வெளியேறினார். இந்த நிகழ்வைத் தொடர்ந்து கேரளா சட்டமன்றக் கூட்டத்தொடரிலும் ஒன்றிய அரசுக்கு எதிரான பத்திகளை ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் படிக்க மறுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஒவ்வொரு ஆண்டும் முதல் நாடாளுமன்றக் கூட்டத்தொடர் குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கும். அப்போது குடியரசுத் தலைவர் நாடா ளுமன்றக் கூட்டுக்குழுவில் அரசின் சாதனைகள் குறித்த விஷயங்களை உரையாக வாசிப்பார்.
அதேபோல் ஒவ்வொரு மாநிலங்களிலும், ஆண்டின் முதல் சட்டமன்றக் கூட்டத்தொடர், ஆளுநர் உரையுடன் தொடங்கும். இந்த வேளையில் மாநில ஆளுநராக இருப்போர் குறிப்பிட்ட அரசின் சாதனைகள் குறித்த விஷ யங்களை உரையாக வாசிப்பார்.
அந்த வகையில் நேற்று (20.1.2026) தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடர் தொடங்கியது. 2026 ஆம் ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி உரையாற்ற வந்தார். ஆனால், வழக்கம்போல் தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடர் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. ஆளுநர்
ஆர்.என்.ரவி தேசியக்கீதத்துடன் கூட்டத்தொடரை தொடங்க வலியுறுத்தி வருகிறார். இதனைத் தமிழ்நாடு அரசு நேற்றும் ஏற்கவில்லை. இதனால் ஆளுநர் ஆர்என் ரவி சட்டசபையில் உரை நிகழ்த்த மறுத்து வெளியேறினார். இதையடுத்து பேரவைத் தலைவர் அப்பாவு ஆளுநர் உரையை முழுவதுமாக வாசித்தார்.
பரபரப்பை ஏற்படுத்தியது
இந்த விவகாரம் தமிழ்நாட்டில் சர்ச்சையைக் கிளப்பி உள்ளது. இந்த நிகழ்வைத் தொடர்ந்து தான் கேரளாவிலும் ஆளுநர் உரை சர்ச்சையாகி உள்ளது. கேரளாவிலும் 2026 ஆம் ஆண்டின் முதல் சட்டமன்றக் கூட்டத்தொடர் நேற்று (20.1.2026) தொடங்கியது. ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் உரையாற்ற சட்ட மன்றத்திற்கு வந்தார். அதன்பிறகு அவர் அரசு தயாரித்த உரையை வாசித்தார். அப்போது ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் சில பத்திகளின் வார்த்தைகளைப் படிக்காமல் கடந்து சென்றார். மேலும் சில இடங்களில் அவரே புதிய வார்த்தைகளைச் சேர்த்து படித்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அரசியலமைப்பு கொள்கைகளைப் பலவீலப்படுத்தி வருகிறது
குறிப்பாக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் ஒன்றிய அரசுக்கு எதிரான வரிகளைப் படிக்காமல் கடந்து சென்றார். அதன்படி 12 ஆவது பத்தியில், ஒன்றிய அரசு நிதி கூட்டாட்சி தொடர்பான அரசியலமைப்பு கொள்கைகளைப் பலவீனப்படுத்தி வருகிறது. இதனால் கேரளா நிதி சிக்கலை எதிர்கொண்டு வருகிறது என்று கூறப்பட்டு இருப்பதை அவர் புறக்கணித்தார். அதேபோல், 15 ஆவது பத்தியில், மாநில சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட மசோ தாக்களுக்கு அங்கீகாரம் வழங்குவதில் ஏற்படும் தாமதம் மற்றும் அதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குத் தொடர்பான வரிகளை அவர் படிக்க மறுத்து உள்ளார்.
அதேபோல், 16 ஆவது பத்தியில் மாநிலங்க ளுக்கான வரிப் பங்கு மற்றும் நிதி ஆணைய மானியங்கள் அரசியலமைப்பு உரிமைகள் தான். இது தாராளம் காட்டும் செயல்கள் அல்ல என்று கூறப்பட்டு இருப்பதையும் அவர் புறக்கணித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் அரசியலமைப்பின் 176 ஆவது பிரிவை சுட்டிக்காட்டி, ஆளுநரின் உரை அரசின் கொள்கை நிலைப்பாட்டையே பிரதிபலிக்கிறது. இதனால் ஆளுநர் உரை புத்தகத்தில் இடம்பெற்ற அனைத்தும் அப்படியே அவை குறிப்பில் இடம்பெற வேண்டும் என்று பேரவைத் தலை வரிடம் கோரிக்கை வைத்தார்.
