சென்னை, ஜன.20- அண்ணா அன்று பற்ற வைத்த ‘அறிவுத் தீ’ இன்று வரை கொழுந்துவிட்டு எரிகிறது. அதனால்தான் ‘தீ பரவட்டும்’ என்று சொன்னால் இன்றும் சிலர் பயந்து நடுங்கு கிறார்கள் என்று சென்னை புத்தகக் கண்காட்சியில் பபாசி விருதுகளை வழங்கி துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
சென்னை புத்தகக் காட்சியில் பபாசி விருதுகளை வழங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிகழ்ச்சியில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
கடந்த நவம்பர் மாதம் வள்ளுவர் கோட்டத்தில் ‘அறிவுத் திருவிழா’ என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. அறிவுத் திருவிழாவை முன்னிட்டு பல கருத்தரங்குகள், கலை நிகழ்ச்சிகள் எல்லாம் நடைபெற்றன. அதன் முக்கியப் பகுதியாக ஒரு வார காலம் புத்தகக் காட்சியும் நடைபெற்றது.
அந்த புத்தகக் காட்சியில் மிகச் சிறந்த வரவேற்பு கிடைத்தது. அதை பார்த்துவிட்டு முதலமைச்சர் சொன்னார். இனிமேல் நீங்கள் ஒவ்வொரு ஆண்டும் புத்தகக் காட்சி நடத்த வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் அறிவுத்திருவிழாவை தமிழ்நாடு முழுக்க நடத்த வேண்டும் என்று முதலமைச்சர் அறிவுறுத்தினார். அந்த அளவுக்கு அறிவுத் திருவிழாவை நாங்கள் சிறப்பாக நடத்தினோம் என்றால் அதற்கு ‘ரோல் மாடலாக’ இருந்தது சென்னை புத்தகக் காட்சிதான்.
அறிவுச் சமூகமாக
தமிழ் சமூகம்
அந்த நன்றியுணர்வோடு இந்த நிகழ்ச்சியில் நான் கலந்து கொண் டுள்ளேன். புத்தகக் காட்சியைப் பற்றி மக்கள் பேசுவதை பார்க்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது. ஏனென்றால் முன்பெல்லாம் விடுமுறை என்றால் சென்னையில் பார்க், பீச், சினிமா தியேட்டர்களில்தான் கூட்டங்கள் கூடும். ஆனால் இன்றைக்கு புத்தகக் காட்சி தொடங்கியது என்றால் மக்கள் குடும்பம் குடும்பமாக புத்தகக் காட்சியை நோக்கி வருகிறார்கள்.
நாள்தோறும் திருவிழா போல இங்கு கூட்டம் கூடுகிறது. மக்கள் ஆர்வத்துடன் வந்து புத்தகங்களை வாங்கிச் செல்கிறார்கள். இன்று இந்தியாவிலேயே முன்னணி அறிவுச் சமூகமாக தமிழ் சமூகம் இருக்கிறது என்றால் அதற்கு காரணம் நம்முடைய தமிழ் மக்கள் என்றைக்குமே வாசிப்பை கைவிடாமல் இருப்பதுதான் முக்கிய காரணம்.
அண்ணா பற்ற வைத்த தீ
நம்முடைய திராவிட இயக்கத்தை எடுத்துக்கொண்டால், பேசியும் படித்தும் எழுதியும் வளர்ந்த இயக்கம் நம்முடைய திராவிட இயக்கம். தந்தை பெரியார் உலகின் போக்கை மாற்றிய கம்யூனிச அறிக்கையை தமிழில் மொழிபெயர்த்து கொண்டு வந்தார்.
அண்ணா அவர்கள் உலக வரலாற்றுத் தலைவர்களின் கருத்துகளை எல்லாம் தன்னுடைய தம்பிகளுக்கு கடிதமாக எழுதி னார்கள். அண்ணா அவர்கள் அன்றைக்கு பற்ற வைத்த தீ, அறிவுத்தீ, இன்று வரை கொழுந்து விட்டு எரிகிறது என்றால் மிகை யாகாது. ‘தீ பரவட்டும்’ என்று சொன்னால் இன்றைக்கும் கூட சில பேர் பயந்து நடுங்குகிறார்கள்” இவ்வாறு அவர் பேசினார்.
