சென்னை, ஜன.19- சென்னை அய்.அய்.டி. ஆராய்ச்சி பூங்கா அருகில் ரூ.10 ஆயிரம் கோடி செலவில் அமைய உள்ள செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பப் (ஏ.அய்.) பூங்கா, தமிழ்நாட்டின் அறிவு, தொழில்நுட்பத்தை அடுத்தக் கட்டத்துக்கு எடுத்துச் செல்ல இருக்கிறது. இதன் மூலம் 1,000 பேருக்கு நேரடியாகவேலை கிடைக்கும் என அரசுத் தரப்பில் கூறப்படுகிறது.
ஏ.அய். பூங்கா
ஏ.அய்.(செயற்கை நுண்ணறிவு) தொழில்நுட்பத்தை நமது மண்ணுக்கும், மொழிக்கும் ஏற்றவாறு மாற்றி அமைக்கும் ஒரு புரட்சிகரமான முயற்சியை தமிழ்நாடு அரசுகையில் எடுத்து இருக்கிறது.
அதன் ஒரு முக்கிய மைல்கல்லாக தன்னாட்சி ஏ.அய். பூங்கா ஒன்றை சென்னை தரமணியில் உள்ள சென்னை அய்.அய்.டி. ஆராய்ச்சிப் பூங்கா அருகில் ரூ.10 ஆயிரம் கோடி செலவில் அமைக்க உள்ளது. இதற்காக பெங்களூருவைச் சேர்ந்த சர்வம் ஏ.அய். நிறுவனத்துடன், தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து இருக்கிறது.
அடுத்த 5 ஆண்டுகளில் இந்தப் பூங்காவை செயல்பாட்டுக்கு கொண்டு வரும் நோக்கோடு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
இந்தப் பூங்காவால் என்ன பயன்? சாதாரண மக்களுக்கு இதனால் என்ன பலன் கிடைக்கும்? என்ற கேள்வி அனைவருக்கும் எழலாம். தமிழ்நாட்டு மக்களின் தரவுகள் மற்றும் அரசுத் தரவுகள் இந்தப் பூங்கா அமைக்கப்பட்டதும் மாநிலத்தின் எல்லைகளுக்குள்ளேயே பாதுகாக்கப்படும். இனி வெளிநாட்டு நிறுவனங்களின் உதவியை தேடவேண்டிய அவசியம் இருக்காது என சொல்கிறார்கள்.
ஆயிரம் பேருக்கு வேலை
மேலும் இந்த பூங்கா வருவதால், 1,000 தொழில்நுட்ப வேலைவாய்ப்புகள் நேரடியாகவும், இதன் பயனை லட்சக்கணக்கானோர் மறைமுகமாகவும் பெறுவார்கள்.
மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் ஏ.அய். தொழில் நுட்பத்தை வெறும் பயன்படுத்துபவர்களாக மட்டுமல்லாமல், உருவாக்குபவர்களாக மாறுவதற்கு இது வழியை ஏற்படுத்தும்.
இதுமட்டுமா? சாதாரண மக்களுக்கு ஆங்கிலம் தெரியாது. அவர்களும் ஏ.அய். தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் நோக்கில், தமிழ்மொழிக்கான சிறப்பு ஏ.அய். மாதிரிகள் இங்கு உருவாக்கப்படும்.
தமிழுக்கே உரிய இலக்கணம், வட்டார வழக்குச் சொற்கள், கலாசார நுணுக்கங்களை இந்த ஏ. அய். மாதிரிகள் புரிந்து கொள்ளும். மொழியும், தொழில் நுட்பமும் கைகோர்க்கும் “டிஜிட்டல் சங்கம்” போல இது செயல்பட்டு, அரசு சேவைகளை தமிழில் எளிதாக மக்கள் பெறவும் உதவி செய்யும்.
அந்த வகையில் அரசு அலுவல கங்களில் கோப்புகளை கையாளுவது, மக்கள் கோரிக்கைகளுக்கு பதில் அளிப்பது போன்றவற்றில் இருக்கும் காலதாமதம் குறைந்துவிடும்.
அடுத்தகட்டத்துக்கு…
கல்வி, மருத்துவம் மற்றும் விவசாயத் துறைகளில் ஏ.அய். பயன்பாட்டை அதிகரிக்கும். அதாவது கல்வியில், கடினமான பாடத்தை ஓர் ஆசிரியர் எளிமையாக எடுத்துச்சொல்வது போல தமிழிலே விளக்கும். உலகின் தலைசிறந்த அறிவியல் மற்றும் தொழில்நுட்ப புத்தகங்களை மிகத் துல்லியமான தமிழில் மொழிபெயர்க்க உதவும்.
விவசாயத்தில்,விவசாயிகளுக்கு மண்ணின் ஈரப்பதத்தை பார்த்து இப்போது தண்ணீர் பாய்ச்ச வேண்டும்” என்ற குறுந் தகவலை அனுப்பும். மருத்துவத் துறையில் கிராமப்புற மக்களுக்கு நோய் அறிகுறிகள் குறித்த ஆலோசனைகளை ஒரு நர்சு கூட இருப்பது போல எடுத்துச் சொல்லும் என்பது போன்ற பல்வேறு விஷயங்கள் இதன் மூலம் சாத்தியம் ஆகும் என சொல்லப்படுகிறது.
மொத்தத்தில் இந்த ஏ.அய். பூங்கா, தமிழ்நாட்டில் அறிவு, தொழில்நுட்பத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும். மேலும், தமிழ்நாட்டை ஏ.அய். தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தும் மாநிலமாக மட்டும் வைக்காமல், உலகிற்கே ஏ.அய். தொழில்நுட்பத்தை ஏற்றுமதி செய்யும் மாநிலமாகவும் மாற்றும் என்கிறார்கள்.
