மும்பை ‘‘டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர் ஸ்மாரக்’’கில் தமிழர் தலைவர் ஆசிரியர்!-உடுமலை வடிவேல்

7 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

தமிழ்நாடு – மகாராட்டிர மாநிலங்களை
சமூகநீதி எனும் தத்துவத்தால் இணைத்தார்!

கடந்த ஜனவரி 3, 4 ஆம் நாள்களில் மும்பையில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டில் பங்கேற்கச் சென்ற தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், ஜனவரி 5 ஆம் தேதி மும்பையில் உள்ள ‘‘டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர் ஸ்மாரக்’’கைப் பார்வையிட்டார்.

திராவிடர் கழகம்

நேற்றைய தொடர்ச்சி வருமாறு:

அதன் பிறகு அம்பேத்கர் வாழ்க்கை வரலாற்றைப் பிரதிபலிக்கும் படக்காட்சி அரங்கிற்கு அழைத்துச் சென்றனர். அங்கிருக்கும் ஒவ்வொரு படத்தையும் பார்த்து, அதன் பின்னணியை – வரலாற்றுச் சம்பவங்களை  இணை ஆணையரிடமும், தோழர்க ளிடமும் விவரித்துக்கொண்டே வந்தார். ஓரிடத்தில் வெறும் மணிக்கட்டுடன் சேர்ந்த அய்ந்து விரல்கள் மட்டும் ஓர் எழுதுகோலை வைத்து எழுதுவது போல், ஓர் உலோகச் சிற்பம் வைக்கப்பட்டிருந்தது. அதைக் கண்டதும் ஆசிரியர் முகத்தில் ஒரு களிப்பு, மின்னல் வேகத்தில் வெட்டியபடி ஓடிவிட்டது. நாம் திகைத்து நின்று விட்டதால் அதை படம் பிடிக்க இயலவில்லை. இனி அது போல் ஒரு கணம் வரவே வராது என்ற ஏக்கமே ஏற்பட்டுவிட்டது. அந்த அளவிற்கு அந்த உலோகச் சிலை ஆசிரியரின் சிந்தையைக் கொள்ளை கொண்டுவிட்டது. ஆசிரியர் அந்த சிலை அருகில் தனியாக நின்று, ‘வாழ்க அம்பேத்கர்’ என்பது போல் வலது கையை இறுக மூடி உயர்த்திக் காட்டினார். அது படமாகப் பிடிக்கப்பட்டுவிட்டது.

திராவிடர் கழகம்

ஆலோசனைகளை வழங்கினார்
தமிழர் தலைவர்!

எல்லாமே கண்களையும், கருத்தையும் கவர்ந்தா லும் மணிக்கட்டு உலோகச் சிலை போலவே இன்னொன்றும் ஆசிரியரின் கவனத்தை மிகவும் கவர்ந்தது. அது, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பீடிகை என்று சொல்லப்படக்கூடியதாகும். அது மிகப்பெரிய அளவில் சட்டமிடப்பட்டு, அதில் வாசகங்கள் பொறிக்கப்பட்டிருந்தன. அந்த நிலையத்திற்குள் முதலில் மராத்தி, பிறகு ஆங்கிலம் என்ற இருமொழிக் கொள்கையை மட்டுமே கடைப்பிடித்திருந்தார்கள். ஹிந்திக்கு அங்கு இடமே இல்லை என்பது குறிப்பிட வேண்டிய ஒன்றாகும். படக்காட்சி அரங்கத்தை முழுமையாக சுற்றிப்பார்த்த பின்னர், அங்கே இடம் பெறவேண்டிய தந்தை பெரியாரும், அம்பேத்கரும் சேர்ந்து இருக்கும் மிக முக்கியமான படங்கள் விடுபட்டிருக்கின்றன. அதைச் சேர்க்க வேண்டும் என்று இணை ஆணையரிடம் வேண்டுகோள் விடுத்தார். அவர் உடனடியாக சம்மதம் தெரிவித்தார். முறைப்படி அந்தப்படங்களை நாங்கள் அனுப்புகிறோம். கல்வி புலத்திலும், பட்டயப்படிப்புக்கு என்னென்ன வாய்ப்புகள் இருக்கின்றன என்பதை உரியவர்கள் மூலம் கலந்துபேசி இணைந்து செயல்படலாம் என்பன போன்ற முக்கியமான ஆலோசனைகளை வழங்கினார். பின்னர், அண்ணல் அம்பேத்கர் ேஹாலோகிராம் ஒளிக்காட்சியைக் கண்டார்.

திராவிடர் கழகம்

அடுத்து தியான மண்டபத்திற்குச் செல்லலாம் என்று அழைத்துச் சென்றார்கள். கெடு வாய்ப்பாக மின் தூக்கி வேலை செய்யவில்லை.  நவி மும்பையின் டெபுடி முனிசிபல் கமிசனர் சங்கரத்தனா கிலாரே உள்ளிட்ட நிர்வாகிகள் அனைவருக்கும் மிகவும் சங்கடமாகப் போய்விட்டது. என்ன செய்வதென்று தெரியாமல், கையறு நிலையில் இருந்தனர். ஏற்கெனவே  ஆசிரியரின் வயது பற்றியெல்லாம் அவர்களுக்குத் தெரிந்திருந்தது. ஆசிரியரோ, “பரவாயில்லை, நான் படியேறுகிறேன்” என்று யாருடைய துணையுமில்லாமல் படி ஏறத் தொடங்கிவிட்டார். அனைவரும் பின் தொடர்ந்தனர்.

திராவிடர் கழகம்

மேலே தியான மண்டபத்தின் முகடு ஓர்  எழுதுகோலின் முனையின் (nib) வடிவத்தில் அமைந்துள்ளது என்று அதன் நிர்வாகிகள் குறிப்பிட்டு வியப்பைக் கூட்டினர். தியான அரங்கத்தை பார்வையிட்டுவிட்டு, கீழே இறங்கும் போது, “நான் வழக்கமாக படிகள் ஏறும் போது எத்தனை படிகள் என்று எண்ணிவிடுவேன். இங்கே 38 படிகள் இருக்கின்றன” என்றார். அனைவருக்குள்ளும் ‘அடடே…’ தருணமாகிவிட்டது அந்தத் தகவல். கீழே இறங்கும் போது மின் தூக்கி சரி செய்யப்பட்டிருந்தது. ஆசிரியர் அதில் சென்றுவிட, தோழர்கள் படிகளில் இறங்கும் போது மிகுந்த உற்சாகத்துடன், ‘‘ஒன்று, இரண்டு, மூன்று” என்று எண்ணிக்கொண்டே இறங்கினர். 38 படிகள் இறங்கியதும், அவர்களின் புருவங்களும் உயர்ந்தன. இத்தனை நாளில் இதை நான் கவனித்ததே இல்லை என்றார், அதன் ஆலோசகர்.

ஆசிரியரின் பண்பைக் கண்டு நெகிழ்ந்தனர்!

நிறைவாக முகப்பறையில் 10 அடி உயரத்திற்கும் மேலாக அம்பேத்கர் முகம் மட்டும் சுவற்றில் பதாகையாகச் சிறப்பாகப் பதிக்கப்பட்டிருந்தது. அங்கு நின்று ஆசிரியருடன் அந்நிலையத்தின் நிர்வாகிகள் அனைவரும் படம் எடுத்துக்கொண்டனர். காவலர்கள், தூய்மைப் பணியாளர்கள் ஒதுங்கி நின்ற போது, ஆசிரியர் சைகை காட்டி அவர்களையும் அதில் கலந்துகொள்ளச் செய்தார். ஆசிரியரின் பண்பைக் கண்டு நெகிழ்ந்து அவர்களும் கலந்துகொண்டனர். மறுபடியும் வரவேற்பறையில் அமரவைத்து ஆசிரியரிடம், மிகுந்த எதிர்பார்ப்புடன் ‘‘பார்வையாளர் கருத்துப் பதிவேடு’’ தரப்பட்டது. ஆசிரியர் ஆவலுடன் வாங்கி எழுதத் தொடங்கினார்.

திராவிடர் கழகம்

நவி மும்பையின் இணை ஆணையர் சங்க ரத்தனா கிலாரே, குமணராசன் அவர்களைப் பார்த்து, “பார்த்ததில் உங்களுக்குப் பிடித்தது எது?” என்று கேட்டார். அவர், “மற்றவையும் சிறப்பாக இருந்தாலும், முதல் இடம் நூலகத்திற்குதான். காரணம் அதுதான் நமது கடந்த காலம் எப்படி யிருந்தது; நிகழ்காலம் எப்படியிருக்கிறது; எதிர்காலம் எப்படி இருக்கவேண்டும் என்பதைக் கூறுகின்றன” என்று சொல்லிக் கொண்டிருந்தார்.

இணை ஆணையர், “இந்தக் காலத்து இளை ஞர்கள்  இதில் அதிக ஆர்வம் காட்டுவதில்லை” என்று அவருக்குப் பதில் கூறிக்கொண்டு இருந்தார். அதற்குள் எழுதி முடித்துவிட்ட ஆசிரியர், பதிவேட்டை அவர்களிடம் கொடுத்தார். அதில் நூலகத்தின் பெருமைகளையும், அதைச் சிறப்பாகப் பராமரிப்பதையும் பாராட்டி, ‘‘We visited the great monument, Bharat Ratna Dr. Babasaheb Ambedkar Smarak. This great memorial has been well conceived and executed in a beautiful manner. At the same time, it helps one to know more about the leader and revolutionary Dr. Babasaheb Ambedkar’s life and mission on social revolution.
திராவிடர் கழகம்

The Navi Mumbai Municipal Corporation has created this not only for the present generation but also for future generations’’ என்று  எழுதிவிட்டு, “Human friendly reception” என்று எழுதியிருந்ததைக் கண்டு நிலையத்தின் நிர்வாகிகள் நெகிழ்ந்து போயினர். இந்தக் காலத்தில், மனிதர்களிடம் காணப்படாதது என்று அங்கலாய்த்துக் கொண்டனர். அந்த சிறப்பு தங்களுக்குக் கிடைத்ததை எண்ணி சிலாகித்துக்கொண்டனர்.

திராவிடர் கழகம்

தொடர்ந்து ஆசிரியர், “மின் தூக்கி வேலை செய்யாதது நல்ல வாய்ப்பாகப் போய்விட்டது” என்று மறுபடியும் மின் தூக்கி விவகாரத்தைத் தொடங்கினார். இணை ஆணையர் உள்ளிட்டோர் மிகுந்த சங்கடத்துடன், மறக்க வேண்டியதை நினைவு படுத்துகிறாரே; என்ன சொல்லப்போகிறாரோ என்ற கவலையுடன் அவரைப் பார்த்தனர். அவரோ, “படிகளில் ஏறியதால் என்னுடைய இதயம் நன்றாக வேலை செய்கிறது என்று அறிவி யல் பூர்வமாகத் தெரிந்துகொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைத்து விட்டது” என்று வாய்விட்டுச் சிரித்த படியே கூறியதும், மற்றவர்களும் வெடித்துச் சிரித்து விட்டனர். இப்படியும் ஒரு தலைவர் இருப்பாரா? என்று அதன் நிர்வாகிகள் வியந்து போயினர். தங்களுக்கேற்பட்ட சங்கடத்தையும் அறிவியல் பூர்வமாக, ஆக்கபூர்வமான செய்தியாக்கிவிட்டாரே என்று வியந்து போயினர்.

மூன்று மணி நேரம்!

இறுதியில் அன்புடன் வற்புறுத்திச் சிற்றுண்டி கொடுத்து உபசரித்தனர். பிறகு வாயில் வரையிலும் வந்து, சில மணிநேரம் மட்டுமே ஓர் அறிவு மின்னல் தெறித்தது போன்ற உணர்வால் நெகிழ்ந்து, மகிழ்ந்து உண்மையாகவே ஆசிரியருக்கும், தோழர்களுக்கும் பிரியா விடை கொடுத்தனர். ஏறக்குறைய 3 மணி நேரம் அங்கே செலவிட்டிருந்தார் ஆசிரியர்.

திராவிடர் கழகம்

அதற்குப்பிறகு மதிய உணவு எடுத்துக்கொண்டார். அங்கும் உணவு சாப்பிடும் கடையில் புரட்சிக்கவிஞர் பேசியதைக் கூறி, வயிறு வலிக்க சிரிக்க வைத்து, கண்களில் கண்ணீரை வரவழைத்துவிட்டார். பின்னர் நவி மும்பையிலிருந்து கடல் வழியாகக் கட்டப்பட்டிருந்த மிக நீண்ட பாலத்தின் வழியாக, தெற்கு மும்பையில் உள்ள, ”நாரிமன் முனை” கடற்கரைக்கு ஆசிரியரைத் தோழர்கள் அழைத்துச் சென்றனர். அங்கு சென்றதும், “அய்யா இங்கே கொஞ்சம் நடைப்பயிற்சி செய்கிறீர்களா?” என்று கேட்டதும், “நான் தயார்” என்று உடனே கூறியபடியே ‘விறுவிறு’வென்று கால்களை வீசியபடி வேகமாக நடக்கத் தொடங்கிவிட்டார். அவரது வேகத்திற்கு உண்மையாகவே தோழர்களால் ஈடுகொடுக்க இயலவில்லை. நடைப்பயிற்சி செய்கிற அங்கிருக்கும் மக்கள் கருப்பு உடையணிந்தவர்கள் சூழ நடுவில் ஒருவர் நடந்து வருவதைக் கண்டு், அதை இருவர் படம் பிடிப்பதையும் வியப்புடன் வேடிக்கை பார்த்தபடியே கடந்து சென்றனர்.

உற்சாகத்துடன் அனைவருக்கும்
விடை கொடுத்தார்!

அங்கிருந்து புறப்பட்டு, இரவு 9.30 மணிக்குத் தங்கும் இடத்திற்கு திரும்பினார் ஆசிரியர். அப்போதும் மிகுந்த உற்சாகத்துடன் அனைவருக்கும் விடை கொடுத்தார். இடையில் துளியும் ஓய்வில்லை. 93 வயதில் ஏறக்குறைய ஒருநாளில் 12 மணி நேரம் இப்படிச் சுற்றிச் சுழன்று வருகிறாரே என்று அவரை நன்றாக அறிந்த தோழர்களே ஒவ்வொரு கணமும் புதிதுபுதிதாக வியந்த வண்ணம் திரும்பினர். அடுத்த நாள் (6.1.2026) காலை 11 மணிக்கு விமானத்தில் சென்னைக்குப் புறப்பட்டு பிற்பகல் மூன்று மணிக்கு இல்லம் திரும்பினார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *