எழுத்தாளர் பெருமாள் முருகன்

இவர் ஈரோட்டில் தமிழில் இளங்கலை, கோவையில் முதுகலையும் பயின்றவர்! சென்னை பல்கலைக் கழகத்தில் எம்.ஃபில்(M.Phil). முடித்தவர்! தமிழ் வட்டார் நாவலின் முன்னோடியாகிய எழுத்தாளர் ஆர்.சண்முகசுந்தரம் குறித்து ஆய்வு செய்து இலக்கியத்தில் ’முனைவர்’ பட்டம் பெற்றவர்! அரசு கலைக் கல்லூரி களில் தமிழ்ப் பேராசிரியராகவும், முதல் வராகவும் பணியாற்றியவர்! இவ்வளவு சிறப்புகள் இருந்தும் எழுத்தாளர் என்றே அறியப்படுபவர்! அதற்கு சான்றாக 2023 ஆம் ஆண்டு பன்னாட்டு புக்கர் பரிசுக்கான மிக நீண்ட… பட்டியலிலும் இடம் பெற்ற தமிழர்!
இவர் 15.10.1966 ஆம் ஆண்டு நாமக் கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டம் கூட்டப்பள்ளியில் பிறந்தவர். பெற்றோர் ’பெருமாள் – பெருமாயி’ ஆவர். இவரது இயற்பெயர் முருகன். தந்தையின் பெயரை முன்னொட்டாக சேர்த்துக் கொண்டு, பெருமாள் முருகன் எனும் பெயரில் எழுதி வருகிறவர்.
இவர் 12 புதினங்களும், 7 சிறுகதைத் தொகுப்புகளும், 6 கவிதைத் தொகுப்புகளும், 14 கட்டுரைகளும் எழுதியிருக்கிறார். இவரது புதினங்கள் அனைத்தும் பல்வேறு மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கின்றன. 18க்கும் மேற்பட்ட விருதுகளையும் பெற்றவர்.
2010 ஆம் ஆண்டு இவர் எழுதி பதிப்பித்த, ”மாதொருபாகன்” புதினம், இந்துக்களின் மனதை புண்படுத்தி விட்டதாக 2015 இல் எதிர்ப்பை ஒரு இயக்கமாகவே முன்னெடுத்தனர் சங்பரிவார் அமைப்பினர். அது ஒரு குறிப்பிட்ட ஜாதியைச் சேர்ந்த குழந்தை இல்லாத இணையர்களான ’காளி, பொன்னா’ ஆகியோரைப் பற்றியது. திருச்செங்கோட்டில் 100 ஆண்டுகளுக்கு முன்பிருந்த நடைமுறையை மய்யமாக வைத்து எழுதப்பட்ட வரலாற்றுப் புனைவு.
இதைப்பற்றி வரலாற்று ஆதாரங்க ளுடன் எடுத்து வைத்தும், செவி சாய்க்காமல், பிரதிகளை திரும்பப் பெறவேண்டும் என்றும், அடுத்த பதிப்பில் சர்ச்சைக்குரிய பகுதிகள் திரும்பப் பெறப்பட வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் முன்னிலையில் ஒப் பந்தம் போட வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாக்கப்பட்டார்.
கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான இவர், “பெருமாள் முருகன் என்பவன் இறந்து விட்டதாகவும், தமிழ் ஆசிரியரான பெ.முருகன் மட்டும் இருப்பதாகவும்” தனது முகநூலில் தெரிவிக்கும் அளவுக்கு நிலைமைகள் ஏற்பட்டுவிட்டன.
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் இதைக் கண்டித்து அறிக்கை விட்டதுடன் நிற்காமல் ஆர்ப்பாட்டமும் நடத்தி, எதிர்ப்பை பதிவு செய்தார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் – கலைஞர்கள் சங்கம் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்து, ”இது கருத்துரிமைக்கு எதிரானது. மீண்டும் பெருமாள் முருகன் எழுத வேண்டும்” என்று தீர்ப்பைப் பெற்றது. அதைத் தொடர்ந்து, “மீண்டும் எழுதுகிறேன்” என்று பெருமாள் முருகன் அறிவித்தார்.
சங்பரிவார் கும்பல் வழக்கம் போல, தேங்கிய சாக்கடை போல ஓரிடத்தில் தங்கிவிட, ”மாதொருபாகன்” புதினம் உலகின் பல்வேறு மொழிகளில் பெயர்க் கப்பட்டு, ”தீ பரவட்டும்” என்பது போல இன்றும் பரவிக்கொண்டே இருக்கின்றது. ஏன், 2023 இல் பெருமாள் முருகன் அவர்களே, “அப்படியெல்லாம் மனசு புண்படக்கூடாது” என்றொரு கட்டுரையே எழுதியதும் தனி வரலாறுதான்!
பாபா சாகேப் அம்பேத்கர் பற்றி, ’பெருமாள் முருகன்’ காவடிச் சிந்து ராகத்தில் எழுதிய பாடலை கருநாடக இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணா பாடி, அது 2021 ஏப்ரலில் வெளியிடப்பட்டிருந்தது. பெருமாள் முருகனின் நண்பர் வராலாற்று ஆய்வாளர் ஆ.இரா.வேங்கடாசலபதி, “பெரியாரைப் பற்றியும் நீங்கள் இப்படியொரு பாடல் எழுதவேண்டும்” என்று வேண்டுகோள் வைத்த போது, “எனக்குள்ளும் அந்த எண்ணம் உள்ளது” என்று பெருமாள் முருகன் பதில் சொல்லி உள்ளார்.
அந்த எண்ணம், எழுத்தானது! இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணா அவர்கள் மூலம் பிலஹரி ராகத்தில் பாடலும் ஆனது. எப்போது வெளியிடுவது என்று ஆலோசனை செய்துகொண்டிருந்த போது, “மார்ச் 30 அன்று வைக்கம் நூற்றாண்டு தொடங்குகிறது. அப்போதே வெளியிடலாம்” என்று திராவிடர் வரலாற்று ஆய்வாளர் பழ.அதியமான் அவர்களின் கருத்தை ஏற்று, அந்தப் பாடலும் வெளியிடப்பட்டது. (படலின் ஒரு சரணம்)
இதைக் கேட்டு வயிறெரிந்த சங்கிகளின் புலம்பல் கதைகளும், திராவிடர் இயக்க வரலாற்றுச் சுவடுகளாக பதிவாகியுள்ளன என்பதும் குறிப்பிடத்தகக்து! அறிவின் முன், அறி வின்மை எப்படி வெல்லும்?
இப்படி கல்வி, கலை, இலக்கியம் எனப் பன்முக ஆற்றல் பெற்று, தன்னை உயர்த்திய சமூகத்திற்கே அதைத் திருப்பித் தந்துகொண்டிருக்கும், ”எழுத் தாளர் பெருமாள் முருகன்” அவர்களுக்கு, ”2026” ஆம் ஆண்டுக்கான “பெரியார் விருது” வழங்கி, ”தந்தை பெரியார் முத்தமிழ் மன்றம்” தனது மட்டற்ற மகிழ்ச்சியை பதிவு செய்கிறது.
திரைப்பட இயக்குனர் மாரி செல்வராஜ்
வானத்தில் இருந்து பார்க்கும் போது நிலம் பசுமையாகத்தான் தெரியும். உள்ளே சென்றால்தான் மக்களின் வலியும், வேதனையும் தெரியும் என்றவர்! ”மறக்கவே நினைக்கிறேன்” என்று தனது வலியை, ஆனந்த விகடனில் ஒரு பத்திரிகையாளராக தொடர் கட்டுரைகளாக எழுதியவர்; ”தாமிர பரணியில் கொல்லப்படாதவர்கள்” என்ற சிறுகதைத் தொகுப்பின் ஆசிரியர்! சினிமா பிடிக்குமா? எழுத்து பிடிக்குமா? என்று கேட்டால், எழுத்துதான் பிடிக்கும் என்பவர். தமிழ் சினிமாவில் மண் சார்ந்த, மக்கள் வலியைப் பிரதிபலிக்கின்ற திரைப்படங்கள் அருகி, பொழுதுபோக்குதான் சினிமா என்றாகி விட்ட சூழலில் நான் இருக்கிறேன் என்று வந்தவர்.
மாரிசெல்வராஜ் தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் வட்டம் புளியங்குளம் கிராமத்தில் 7.3.1984 இல், விவசாயத்தை தொழிலாகக் கொண்ட பெற்றோருக்கு மகனாகப் பிறந்தவர்.
இவர் சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் பட்டப்படிப்பு முடித்தவர். பத்திரிகையாளராக பணியாற்றிய பிறகு, திரைப்பட இயக்குநர் ராம் அவர்களிடம் உதவி இயக்குநராக சேர்ந்து தனது திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கி, 10 ஆண்டுகள் அவரிடமே பணியாற்றி, தனித்துவம் வாய்ந்த இயக்குநராக மலர்ந்தவர்.
மாரி செல்வராஜ் தமிழ்த் திரைப்பட உலகின் சமகால இயக்குநர்களில் தனித்து வமாக கதை சொல்லும் முறையால் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர். இதுவரை பெரிதும் பேசப்படாத ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளை வணிகம், கலைநுட்பம் இரண்டையும் பொறுப்புணர்வுடன் கலந்து தரும் திரைக்கலையின் வித்தை அறிந்தவர்.
இவரது முதல் படம் 2018 இல் வெளிவந்த, ”பரியேறும் பெருமாள்” நெல்லைச் சீமையின் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வியலைச் சொல்லும் படம் இது. இப்படம் ஆணவக்கொலைகள் பற்றியும், இந்த இழிவு தீர கல்விதான் தீர்வு என்றும் துணிச்சலாகவும், தெளிவாகவும் பேசியது.
அடுத்து, 2021 இல் வெளிவந்த, “கர்ணன்” படம், 1995 ஆம் ஆண்டு கொடியன்குளம் கலவரத்தை மய்யமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம். பரியேறும் பெருமாள் படத்தில் நீதிக்காக கையேந்திய நாயகன், “கர்ணன்” படத்தில் உரிமைக்காக வாளேந்தினான்.
2023 இல் வெளிவந்த, ”மாமன்னன்” குடியரசுத் தலைவராகவே இருந்தாலும் தாழ்த்தப்பட்டவர்கள் என்றால் அவமானப்படுத்தப்படுவார்கள் என்ற சிறுமைக்குரியது இந்தச் ஸநாதனச் சமூகம் என்பதை நம் முகத்தில் அறையும் வண்ணம் காட்சிப்படுத்தியிருந்தார்.
2024 இல் வெளிவந்த “வாழை” படத்தில், வறுமையிலும் கல்வி கற்கும் தருவாயில் முதுகு வலிக்க வலிக்க வாழைத்தார் சுமந்த தன் வலியையும், அந்தச் சமூகத்தின் சமூகப் பொருளாதாரத் துயரங்களையும் கண்ணீர் வருமளவுக்குக் காட்சிப் படுத்தியிருந்தார். அதிலிருந்து கல்வி எனும் ஏணி மூலம் ஏற்றம் பெற்று வந்தவர் நமது மக்கள் இயக்குநர் மாரிசெல்வராஜ்.
2025 இல் வெளியான ”பைசன் காளமாடன்” படம் தூத்துக்குடியில் பிறந்து கபடியில் பன்னாட்டு அளவில் வெற்றி பெற்ற, ’மணத்தி கணேசன்’ வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்டது. (ஆசிரியர் – ‘பைசன் காளமாடன்’ படம் பற்றி பேசிய செய்தியாளர் சந்திப்புக் காணொலி)
2018 இல் தொடங்கி 2025 வரையிலான குறுகிய காலகட்டத்திலேயே தான் படைத்த, பறியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன், வாழை, பைசன் காளமாடன் ஆகிய 5 படங்களிலும் வணிகம் மற்றும் படைப்பு ரீதியாகவும் தொடர் வெற்றிகளைத் தந்தவர் என்ற சிறப்புக்குரியவர்.
தொடர்ந்து, ’ஜாதி கண்ணோட்டத்துட னேயே படங்களையே எடுத்துக் கொண்டிருக்கிறார்’ என்பது சிலர், இவர் மீது வைக்கும் விமர்சனம். ”எப்போதோ நடந்த அந்த ஜாதிக் கொடுமைகளைப் பற்றி இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் பேசுவது?” என்பதுவும், ”அதன் அடிப்படையில் எத்தனை காலத்துக்குத்தான் இட ஒதுக்கீடு கோருவது? என்கிற விமர்சனம் போலத்தான் இதுவும்.
3000 ஆண்டுகால பண்பாட்டுத் துயரம் இது. திராவிடர் இயக்கம், தரையில் நிகழ்த்திய அழுத்தமான, ஆழமான ஜாதி ஒழிப்புக்கான தொடர் உரையாடலை, திரையில் நிகழ்த்தி வரும் திரைப்பட இயக்குநர் மாரிசெல்வராஜ் அவர்களுக்கு, ”தந்தை பெரியார் முத்தமிழ் மன்றம்” சார்பில், 2026 ஆம் ஆண்டுக்கான “பெரியார் விருது” வழங்கி, அவரை உற்சாகப்படுத்தி, ஊக்கப்படுத்தி மட்டற்ற மகிழ்ச்சி பெறுகிறது!

தந்தை பெரியார் முத்தமிழ் மன்ற 32ஆம் ஆண்டு விழாவில் (17.1.2026) பங்கேற்றோர்
