தேனி, ஜன.18 தேனி மாவட்டம் உத்தமபாளையம் பகுதியில், மக்களின் முடநம்பிக்கையைப் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு இளம்பெண்கள் சிலர் நூதன முறையில் பிச்சை எடுக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மஞ்சள் ஆடை அணிந்து
உத்தமபாளையத்தில் உள்ள ஒரு கூட்டுறவு வங்கி சமீபத்தில் சில இளம் பெண்கள் வந்தனர். மஞ்சள் ஆடை அணிந்து, நெற்றி நிறைய விபூதி, குங்குமம் தரித்து, கையில் வேப்பிலையுடன் கூடிய தட்டு ஏந்தி அம்மன் பக்தர்கள் போல அவர்கள் காட்சியளித்தனர்.
வங்கி ஊழியர்களிடம் பேசிய அவர்கள், தங்களுக்கு நீண்ட நாட்களாகத் திருமணம் ஆகவில்லை என்றும், அந்த ‘மாங்கல்ய தோஷம்’ நீங்க அம்மன் அருளால் ஊர் ஊராகச் சென்று பிச்சை எடுத்துப் பரிகாரம் செய்வதாகவும் உருக்கமாகக் கூறியுள்ளனர். இதைக் கேட்ட பலரும் பரிதாபப்பட்டு தாராளமாகப் பணம் கொடுத்துள்ளனர்.
அதிநவீன ஆடைகளுடன்…
அன்று மாலை வங்கிப் பணி முடிந்து ஊழியர்கள் பேருந்து நிலையத்திற்குச் சென்றபோது, காலையில் பக்தி வேடத்தில் வந்த அதே பெண்கள், மாலையில் அதிநவீன உடைகளுடன், நாகரிகமாக அலங்காரம் செய்துகொண்டு திரையரங்கு வாசலில் நின்று கொண்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இவர்கள் ஊருக்கு வெளியே ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துத் தங்கியுள்ளனர்.
பகலில் பக்தி வேடமிட்டுத் திட்டமிட்டு ஆளுக்கொரு பகுதியாகப் பிரிந்து பிச்சை எடுப்பதையே ஒரு தொழிலாகச் செய்து வருகின்றனர்.
மக்களின் சென்டிமென்ட் மற்றும் தெய்வ நம்பிக்கையை மூலதனமாக்கி இவர்கள் இந்த நூதன மோசடியில் ஈடுபடுகின்றனர்.
தெய்வத்தின் பெயரால் வரும் இது போன்ற போலி நபர்களை அடையாளம் கண்டு மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். உழைத்து வாழ வழியிருந்தும், பக்தியைப் பகடைக்காயாக்கி ஏமாற்றுபவர்களின் வலையில் விழ வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.
