சென்னை, ஜன,18 பிரபல நாளிதழ் குழுமம் சார்பில் சென்னையில் நடைபெற்று வரும் இலக்கியத் திருவிழாவில், மாற்றுக் கருத்துடையவர்கள் மற்றும் குரலற்றவர்களின் குரல்களைப் பிரதிபலிக்கும் வகையில் பல்வேறு ஆளுமைகள் பங்கேற்றனர். இவ்விழாவின் தொடக்க நிகழ்வில் பிரிட்டிஷ் தத்துவ அறிஞர் ஏ.சி.கிரேலிங் மற்றும் உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
தேர்தல் பத்திரங்கள்: “அரசியல் ஊழலுக்கு சட்டப் பாதுகாப்பு”
‘இந்திய அரசமைப்பின் முக்கியத்துவம்’ என்ற தலைப்பில் நடைபெற்ற கலந்துரையாடலில், ‘இந்து’ என்.ரவி எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த முன்னாள் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், தேர்தல் பத்திர விவகாரம் குறித்து விரிவாக விளக்கினார்:
சட்ட விரோத பாதுகாப்பு: பெயர் குறிப்பிடாமல் நிதி வழங்கும் தேர்தல் பத்திர நடைமுறை, அரசியல் ஊழலுக்கு சட்ட ரீதியான பாதுகாப்பை அளிக்கும் என்பதால் தான் அது ரத்து செய்யப்பட்டது.
கார்ப்பரேட் நன்கொடைகள்: 1966 முதல் கார்ப்பரேட் நிறுவனங்கள் நிதி வழங்குவது இந்தியாவில் சட்டப்பூர்வமானது. தற்போது அந்தத் திட்டம் ரத்து செய்யப்பட்டாலும், நிறுவனங்கள் நிதி வழங்கும் முறை இன்றும் நடைமுறையில் உள்ளது.
வழக்குகள் தாமதம்: உச்ச நீதிமன்றத்தில் 70,000 வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், 34 நீதிபதிகள் மட்டுமே உள்ளனர். கால தாமதமான வழக்கை விசாரித்தாலும், புதிய வழக்கை விரைந்து விசாரித்தாலும் விமர்சனங்கள் எழுவது இயல்பு என அவர் குறிப்பிட்டார்.
உமர் காலித் போன்றோரின் சிறைவாசம், இணைய கருத்து சுதந்திரம் மற்றும் சமூக ஊடக ஒழுங்குமுறை குறித்த கேள்விகளுக்கும் அவர் விளக்கம் அளித்தார். மேலும், தனது 500-க்கும் மேற்பட்ட தீர்ப்புகளைத் தொகுத்து பென்குயின் பதிப்பகம் வெளியிட்டுள்ள ‘Why The Constitution Matters’ என்ற நூலில் வாசகர்களுக்கு கையெழுத்திட்டார்.
