தந்தை பெரியாரின் புத்தகப் புரட்சியும் அதன் நீட்சியும்
கல்லூரிகளில் சேர்ந்து பட்டம் வாங்காத தலைவர்களை படிக்காதவர்கள் பட்டியலில் வைத்து குறிப்பிடுவார்கள். ஆனால் பெரியார் அளவிற்கு புத்தகங்களை படித்தவர்கள் இல்லை என்று சொல்லும் அளவிற்கு ஏராளமான புத்தகங்களை படித்தவர் தந்தை பெரியார்.
படிப்பவர் மட்டுமல்ல; தமிழ் பதிப்பு உலகில் புதிய புரட்சியை உருவாக்கியவர் தந்தை பெரியார். மதப்பிரச்சாரங்களுக்கும், புராண இதிகாசங்களை அடிப்படையாகக் கொண்ட கற்பனை கதைகளையும் மற்றும் அரசர்களையும் காதலையும் போற்றிப் புகழ்ந்த சில இலக்கியங்களையும் பரப்புவதை மட்டுமே நோக்கமாகக் கொண்ட ஏராளமான பதிப்பகங்கள் இருந்த நிலையில், சமூக புரட்சி கருத்துக்களை புத்தகங்கள் ஆக்கி வெளியிடும் மகத்தான புத்தகப் புரட்சி செய்தவர் பெரியார்.
1928ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட குடிஅரசு பதிப்பகம் மூலம் தொடங்கிய அவரது பதிப்புப் பணிகள் 93 ஆண்டுகளுக்குப் பிறகும் அதே வேகத்துடன் காலத்திற்கு ஏற்ற புதுமைகளை கொண்டதாக வெற்றி நடைபோடுகின்றன.
சமூகத்தை மாற்றி அமைத்ததில், தந்தை பெரியாரின் பதிப்பு பணிகள் தனி இடத்தை பெற்றுள்ளன. பதிப்பகங்கள் நடத்தி மலிவுலையில் சமூகப் புரட்சி கருத்துக்களை மக்களுக்கு சேர்ப்பதை தனது வாழ்நாள் தொண்டாக செய்து வந்தார். தந்தை பெரியார் தான் பேசிய கூட்டங்களில் முதலில் கொள்கை புத்தகங்களை அறிமுகப்படுத்தி, அதில் அன்று தள்ளுபடி விலை சலுகை விலை உண்டு என்று அறிவிப்பார். வியாபாரத்திற்காக அல்ல; மக்கள் உண்மையை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக தான் பேசுவதற்கு முன்பு இயக்க வெளியீடுகளை ஒவ்வொன்றாக அறிமுகப்படுத்தி அதில் அடங்கியுள்ள கருத்துக்களை தகவல்களை விரிவாக எடுத்துக் கூறி, அதன் பிறகு தன் சொற்பொழிவை தொடங்குவார். இதன் காரணமாக மக்கள் மத்தியில் புத்தகங்கள் ஏராளம் வாங்கவும் படிக்கவும் மாணவர்களை செய்தவர் அய்யா கூட்டம் முடிந்து வேனில் ஏறிய உடன் முதல் கேள்வி “எவ்வளவு புத்தகம் விற்றது?” என்பதுதான். (அது வருவாய்க்காக அல்ல) பதிலை சொன்னவுடன் பரவாயில்லை, நம்முடைய புத்தகங்கள் இவ்வளவு பேருக்கு போய்ச் சேர்ந்தன என்று எண்ணி எண்ணி மகிழ்வார்கள்.
குடிஅரசுப் பதிப்பகத்தின் முதல் புத்தகம் சிவானந்த சரஸ்வதி அவர்கள் எழுதிய “ஞான சூரியன்” – அதைத்தொடர்ந்து கா.நமச்சிவாய முதலியார் எழுதிய “அகத்தியர் ஆராய்ச்சி” – காத்தரின் மேயோ எழுதிய “இந்தியத் தாய்” இந்த நூலை திறனாய்வு செய்து கோவை அய்யாமுத்து அவர்களால் எழுதப்பட்ட “மேயோ கூற்று மெய்யா? பொய்யா?”, பம்பாய் மாகாண கல்வி அமைச்சராக இருந்து பின்னாட்களில் லண்டனில் பணியாற்றிய டாக்டர் ஸி.றி.பராஞ்சிபே அவர்கள் ஆங்கிலத்தில் எழுதிய ஆங்கில நூலை “இந்தியாவின் குறைபாடுகள்” என்ற தலைப்பில் தமிழ் மொழியாக்கம் செய்து வெளியிட்டார்.
டாக்டர் அம்பேத்கர் அவர்களின் “ஜாதியை ஒழிக்க வழி” மாவீரன் பகத்சிங் எழுதிய “நான் ஏன் நாத்திகன்” ஆனேன்? உள்ளிட்ட ஏராளமான புத்தகங்களை வெளியிட்டார். சிந்தனை சிற்பி சிங்காரவேலர், சாமி கைவல்யம், சாத்தாங்குளம் ராகவன் போன்ற அறிஞர்கள் குடிஅரசு இதழில் எழுதிய தொடர் கட்டுரைகளையும் தொகுத்து புத்தகமாக வெளியிட்டார்.
மேலும்பகுத்தறிவு நூற்பதிப்பு கழகம் என்னும் பெயரில் ஒரு பதிப்பு நிறுவனத்தை தொடங்கி, அதன் வாயிலாக பல்வேறு
மேல்நாட்டு சிந்தனையாளர்களை அறிமுகப்படுத்தியதில் தந்தை பெரியாரின் பதிப்பகம் முக்கியத்துவம் பெறுகிறது. அவர்களது வாழ்க்கை வரலாற்றை சிறு நூல்களாக அரை அணா, கால்அணா விலைகளில் விற்றவர் தந்தை பெரியார். குறிப்பாக காரல்மார்க்ஸ் வாழ்க்கை வரலாறு. வால்டேயர் வாழ்க்கை சரிதம், இங்கர்சால் வாழ்க்கை வரலாறு போன்றவை முக்கிய நூல்களாகும்.
தமிழ் மொழியில் 90 ஆண்டுகளுக்கு முன்பே பொதுவுடமை நூல்களை வெளியிட்ட முன்னோடி பதிப்பாளராக பெரியார் திகழ்கிறார். அவர் தமது இரஷ்ய பயணத்திற்கு முன்பே மார்க்ஸ், ஏங்கல்ஸ் ஆகியோர் கூட்டு முயற்சியில் உருவான கம்யூனிஸ்ட் கொள்கை பிரகடன அறிக்கையை (Communist manifesto) தமிழில் (சோவியத் ரஷ்யாவிற்கு செல்லுமுன்பே 1931களில் மொழிபெயர்த்து ‘குடிஅரசு’ ஏட்டில் தொடர்ந்து வெளியிட்டார். பின்னர் அதனை புத்தகமாக்கி மிகக் குறைந்த விலையில் விற்பனை செய்தார்.
லெனின், பெர்னாட்ஷா, ராபர்ட் கிரீன் இங்கர்சால், ஜோசப் மெக்காபி, ஜீன் மெஸ்லியர், ஜி.டவுன்சன்ஸ் பாக்ஸ், சார்லஸ் டிகோர்ம், பெட்ரண்ட் ரசல், செனிக்யூ பாதிரியார் உள்ளிட்ட அறிஞர்களின் புத்தகங்களை குறைந்த விலையில் தமிழாக்கம் செய்து வெளியிட்டு, தமிழ்நாட்டின் மூலைமுடுக்கெல்லாம் அயல்நாட்டு அறிஞர்களைப் பற்றி அவர்களது சிந்தனைகளை பற்றி தெரிந்து கொள்ளும் வகையில் விற்பனை செய்தார்.
தந்தை பெரியார் தன்னுடைய அறிவாய்ந்த ஆராய்ச்சி மிக்க கருத்துக்களையும் மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டிய பகுத்தறிவு சிந்தனைகளையும் சிறு நூல்களாக வெளியிட்டு பரப்பினார்.
தொடர்ந்து விடுதலை வெளியீடு – பகுத்தறிவு வெளியீடு என்று பதிப்பகங்களின் பெயர்கள் மாறினாலும் பதிப்பு பணி நிற்காமல் தொடர்ந்து வெளி வந்து கொண்டே இருந்தது.
பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் தொடங்கப்பட்ட பின் அனைத்து புத்தகங்களும் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் சார்பில் வெளிவரத் தொடங்கின.
ஓர் இயக்கத்தின் கொள்கையைப் பரப்புவதற்காக ஒரு நிறுவனத்தை நிறுவி அவற்றின் சார்பாக வெளியீடுகளைக் கொண்டு வந்து மக்கள் மத்தியில் பரப்பும் பணியைத் திட்டமிட்டுச் செய்த ஏற்பாடு தந்தை பெரியார் அவர்களுக்கே உரித்தானதாகும். அவர் செய்து வைத்த ஏற்பாடுகள் இன்றுவரை தொடர்ந்து கொண்டு இருக்கின்றன – மேலும் செழுமைப்படுத்தப்பட்டும் உள்ளன.
தந்தை பெரியார் அவர்களின் வெளியீடுகள் இரண்டு வகையானவை உயர் எண்ணங்கள் மலரும் சோலை என்று புரட்சிக்கவிஞரால் போற்றப் பெற்ற பெரியார் அவர்களின் சுயசிந்தனைக் கருத்துகளைக் கொண்டவை ஒருவகை.
எடுத்துக்காட்டாக, ‘தத்துவ விளக்கம்’, ‘மெட்டீரியலிசம் அல்லது
‘பிரகிருதவாதம்’, ‘இனிவரும் உலகம்’ போன்றவை.
சோதனைக் குழாய்க்குழந்தையைப்பற்றி விஞ்ஞானிகள்கூட கற்பனை செய்திராத காலகட்டத்திலேயே 1938இல் சிந்தித்துச் சொன்ன சமூக விஞ்ஞானி – தொலைநோக்காளர் பெரியார்.
இன்னொரு வகை நூல்கள் – எதிரிகளின் ஆயுதங்களைக் கொண்டே எதிரிகளைத் தாக்கி அழிக்கும் ஆதாரங்களைக் கொண்ட நூல்கள்:
எடுத்துக்காட்டாக தந்தை பெரியார் அவர்களின் ‘இராமாயணப் பாத்திரங்கள்’ மற்றும் ‘இராமாயணக் குறிப்புகள்’ இதுவரை 50-க்கும் மேற்பட்ட பதிப்புகளாக இலட்சக்கணக்கில் மக்களிடம் போய்ச் சேர்ந்துள்ளன. இந்தியிலும், ஆங்கிலத்திலும், மராட்டியத்திலும் மொழி பெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளன.
இந்த நூலில் காணப்படும் ஆதாரங்களை மூல நூல்களில் இருந்து எடுத்துக்காட்டி கூட்டங்களில் பெரியார் பேசுவார். அதன் விளைவு. என்ன தெரியுமா? அந்த மூல நூல்களிலிருந்து அடுத்த பதிப்பில் மாற்றம் செய்யப்பட்டதும் உண்டு. அந்த மாற்றம் செய்யப்பட்ட நூல்களையும் பொதுக்கூட்ட மேடைகளில் எடுத்துக்காட்டுவார்.
லாகூரில் ஜாட்-பட் தோடக் என்னும் ஜாதி ஒழிப்புச் சங்கம் நடைபெற்றது. அவர்கள் நடத்த இருந்த ஜாதி ஒழிப்பு மாநாட்டுக்குத் தலைமை வகிக்கும்படி அண்ணல் அம்பேத்கர் கேட்டுக்கொள்ளப் பட்டார். தலைமை உரையை எழுதி அனுப்பினார் அம்பேத்கர். அதில் கண்டுள்ள சில பகுதிகளை நீக்கி விடுமாறு அச்சங்கத்தார் கேட்டுக் கொண்டனர். அம்பேத்கர் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. அந்தத் தலைமை உரையை, அம்பேத்கர் அவர்களிடமிருந்து ‘ஜாதியை ஒழிக்கும் வழி’ என்னும் தலைப்பில் தமிழில் மொழி பெயர்த்து வெளியிட்டவர் பெரியார். முதல் பதிப்பு 1936. பதினாறாம் பதிப்பாக 2010 இல் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் சார்பில் வெளியிடப்பட்டது.
அம்பேத்கரின் கருத்துகள் தமிழ் நாட்டில் பெரும் அளவு பரவியதற்கு இந்நூல் முக்கிய காரணமாகும்.
தந்தை பெரியாருக்கு பின் அன்னை மணியம்மையார் காலத்திலும் இந்த புத்தக புரட்சிப் பணிகள் தடையில்லாமல் நடைபெற்று வருகின்றன.
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பொறுப்பேற்ற பின் சுயமரியாதை பிரச்சார நிறுவனத்தை போல் மேலும் ஒரு பதிப்பகமாக திராவிடர் கழக (இயக்க) வெளியீட்டகம் உருவாக்கப்பட்டது. இதன் மூலம் பல்வேறு புதிய நூல்களும் வெளியிடப்படுகின்றன. இதன் ஒரு பிரிவான பெரியார் ஆவணக் காப்பகத்தின் மூலம் திராவிட இயக்கத்தின் வரலாற்று ஆவணங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. தற்போது 850க்கு மேற்பட்ட தலைப்புகளில் பல மொழிகளில் வெளியாகின்றன…
பதிப்பிப்பதில் மட்டுமல்ல மக்களிடம் கொண்டு போய்ச்சேர்ப்பதிலும் தமிழர் தலைவர் தனி முத்திரை பதித்து வருகிறார்…
தமிழ்நாடு தழுவிய அளவில் புதிய புத்தகங்கள் வெளியீட்டு விழாக்கள், நூல் அறிமுக விழாக்கள், தலைவர்கள் பிறந்தநாள் விழாக்களில் அதிரடி சலுகைகள் அறிவிப்பு, புத்தகங்களோடு புத்தாண்டு கொண்டாட்டம்,
தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களிலும் புதுவையிலும் பெரியார் புத்தக நிலையங்கள் – விற்பனைக்கென்று தனி பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டு பெரியார் நகர்வு புத்தகச் சந்தை, புத்தகக் கண்காட்சிகளில் தனி அரங்கம், பிற பதிப்பகங்களை இணைத்து சென்னை புத்தகச் சங்கமம் என்ற பெயரில் புத்தக கண்காட்சிகள், (கரோனாவிற்கு பின் தற்போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன), அமேசான், பிளிப்கார்ட் போன்ற இணைய புத்தக விற்பனை நிலையங்களில் புத்தக விற்பனை என்று பகுத்தறிவு பரப்புரையை புத்தகங்கள் வாயிலாக மிகச்சிறப்பாக செய்து வருகிறோம்.
உலக புத்தக நாளை யொட்டி ஏப்ரல் 30 வரை முக்கிய புத்தகங்கள் 50 விழுக்காடு சலுகை விலையில் வழங்கப்படுகின்றன.
– வை.கலையரசன்